ம்பியாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட மக்களின் அடிப்படை வசதிகள் வேண்டி 20 ஆண்டுகாலமாக மனு கொடுத்துவரும் மக்கள்; கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் நம்பியாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட சுண்டக்காம்பாளையம், கரையப்பாளையம், ஆலங்காட்டுப்பாளையம் மற்றும் மாரங்காடு கிராமத்தை சேர்ந்த மக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒரே வீட்டில் நான்கு குடும்பங்கள் வசிப்பது, மழை காலங்களில் வீடுகளில் தண்ணீர் புகுவது, எப்போது வேண்டுமானாலும் வீடு இடிந்து விழும் நிலை, பெண்களுக்கான கழிப்பிட வசதி இல்லாதது என மக்களின் அடிப்படை தேவைகளே கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மாரங்காடு கிராமத்தில் 18 வீடுகள், 28 குடும்பங்கள், மொத்தமாக 135 பேரும், சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் 82 வீடுகள், 130 குடும்பங்கள், 400க்கும் மேற்பட்ட மக்களும், கரையப்பாளையம் கிராமத்தில் 12 வீடுகள், 30 குடும்பங்கள், 150 பேரும் வசிக்கின்றனர். குறிப்பாக, சி. முருகன் என்பவரின் குடும்பத்தில் மட்டும் ஒரே வீட்டில் 4 குடும்பங்கள் என 16 பேர் வசிக்கும் அவலநிலை உள்ளது.

படிக்க : மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெறுக! | மக்கள் அதிகாரம்

பெண்கள் இயற்கை உபாதை கழிப்பதற்குக்கூட சிரமப்பட்டு தான் வாழ்ந்து வருகின்றனர். சுடுகாட்டை ஆதிக்க சாதியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

அனைத்து கிராமங்களுக்கும் முன்னும் பல ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் இருக்கின்றன. ஆனால் வீடுகள் இடிந்து விழும் நிலையிலும், ஒரு வீட்டில் 10க்கும் மேற்பட்ட நபர்களும், ஒரு வீட்டில் 3, 4 குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.

இதுகுறித்து, பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அதிகாரிகள், தாசில்தார், கலெக்டர் ஆகியோர்களிடம் 20 ஆண்டுகளாக மனு கொடுத்தும், பல்வேறு மறியல் போராட்டக்கள் செய்தும் வந்துள்ளனர். ஆனால் இன்றுவரை எந்தவொரு அடிப்படை தேவைகளையும் செய்து கொடுக்கப்படவில்லை.

இங்கு சாதிய பாகுபாடு நிலவுவதால் ஆதிக்க சாதியினர் மற்றும் அரசு அதிகாரிகள் கூட்டு சேர்ந்து பட்டியலின மக்களுக்கு சேர வேண்டிய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது, அரசு சலுகைகளை கிடைக்காமல் இழுத்தடிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். சுடுகாட்டையும் ஆக்கிரமிப்பு செய்து ஆதிக்க சாதியினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்

பட்டியலின மக்களுக்கான உரிமைகளைக் கேட்க குரல் கொடுப்பவர்களை கைது செய்வது, வீடுகளில் புகுந்து மிரட்டுவது என போலிசு அதிகாரிகள் அடாவடிதனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

***

இலவச வீட்டுமனை பட்டா வேண்டி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். கலெக்டரிடம் மனு தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டும் கண்டுக்கொள்ளவில்லை. அதனால் 15.11.2022 அன்று ஊர்மக்கள் ஒன்றுகூடி புறம்போக்கு நிலத்தில் சாலை அமைத்தும், அம்பேத்கர் நற்பணி மன்றம் கூலி தொழிலாளர் சங்கம் என்ற பதாகைகளை வைத்தும் அமைதியான முறையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதே கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் மக்களின் அடிபடை வசதிகளுக்காக தொடர்ந்து மக்களோடு போராடி வந்திருக்கின்றனர்.

அப்பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு வந்திருந்த கலெக்டரை சந்தித்து புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது, கலெக்டர் “மக்கள் அதிகாரம் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்” என்று கூறினார். கலெக்டரின் இந்த அவதூறுக்கு மக்கள் ஒன்றுக்கூடி “அவர் எங்களுக்காக தான் நிற்கின்றார், நீங்கள் தான் எங்களை கண்டுகொள்வதில்லை, எத்தனை முறை தான் நாங்கள் மனு கொடுப்பது” என்று வாதிட்டனர். மக்களின் வார்த்தைகளுக்கு பதில் சொல்லாமல் “உங்களிடமெல்லாம் பேச முடியாது” என்று அதிகார திமிரோடு நடந்து கொண்டுள்ளார் கலெக்டர்.

கலெக்டர் வந்து நிலத்தை ஆய்வு செய்வார் என்று கூறிச்சென்ற அரசு அதிகாரிகள், அடுத்த நாள் போலிசுடன் வந்தனர். “இது குட்டைக்கான புறம்போக்கு நிலம்” என்றும், “57 பெண்கள் மீது வழக்கு போட்டுள்ளோம், அவர்களை கைது செய்கிறோம்” என்று போலிசு அதிகாரிகள் மிரட்டினர். பின்னர், தோழர் கார்த்திகேயனை கைது செய்து வண்டியில் ஏற்றியபோது மக்கள் கோசமிட்டனர், அங்கிருந்த 60 நபர்களையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

மேலும், வாடகைக்கு எடுத்துவந்த 40 சேர்களையும் கிராம நிர்வாக அதிகாரிகள் தூக்கிச் சென்றனர். வாடகை சேர்களை பெற வேண்டி செல்லும் போதெல்லாம் கிராம நிர்வாக அதிகாரி 5 நாட்களாக அலைக்கழித்து வந்துள்ளனர். பின்பு சேர்களை கொடுத்துள்ளனர்.

மக்களின் வரிப்பணத்தில் தின்று கொழுப்பது மட்டுமல்லாமல் மக்களிடம் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் லஞ்சம் பெற்று வரும் இந்த அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யாமல் மக்களிடம் அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றனர்.

படிக்க : கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவோம் – கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் ! | மக்கள் அதிகாரம் மதுரை

மக்களின்  அடிப்படை கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அரசு அதிகாரிகளும், தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுக்காக காலில் விழும் அரசியல்வாதிகளும், சாதிய கொடுமைகளை அரங்கேற்றும் ஆதிக்க சாதியினரும் என்றும் மாறப்போவதில்லை. உழைக்கும் மக்களின் போர்க்குணமான தொடர் போராட்டங்களே அவர்களை பணியவைக்கின்றன.

இலவச வீட்டுமனை பட்டா வேண்டிய 20 ஆண்டுகால மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடு!

ஆதிக்க சாதியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள சுடுகாட்டை மீட்டுக்கொடு!

பெண்களுக்கான கழிப்பிட வசதியை செய்துகொடு!

போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி மக்கள் அதிகாரம் தலைமையில் ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் விடுதலை கழகம், மக்கள் பாதுகாப்பு அமைப்பு, திராவிடர் தமிழர் கட்சி, தமிழ் சிறுத்தைகள் கட்சி, சமூக விடுதலை கட்சி ஆகிய அமைப்புகள் சார்பாக 28.11.2022 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும், கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க