Home சமூகம் சாதி – மதம் ரோகித் வெமுலாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் | பாசிசத்தை வீழ்த்த உறுதி ஏற்போம்!

ரோகித் வெமுலாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் | பாசிசத்தை வீழ்த்த உறுதி ஏற்போம்!

ரோகித் வெமுலாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் | பாசிசத்தை வீழ்த்த உறுதி ஏற்போம்!

17-01-2016-அன்று இந்நேரம்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. ஐதராபாத் பல்கலைக்கழக விடுதியில் தனது நண்பர்கள் அறையில் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து துயரம் மிக்க தனது வாழ்க்கையில் இறுதி மணித்துளிகளை எண்ணிக்கொண்டு ஒரு காகிதத் தாளையும் பேனாவையும் கையில் இருக்க பிடித்துக் கொண்டு தனது வாழ்க்கையின் இறுதி வார்த்தைகளை எழுதி முடித்துவிட்டு அறையில் தூக்கு மாட்டிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டான் ரோகித் வெமுலா. சக மாணவர்கள் யாரையும் அவனது முகத்தைக் கூடக் காண விடாமல், ஒரு அனாதைப் பிணம் போல எரியூட்டியது பல்கலைக்கழக நிர்வாகமும் போலீசும். இன்று ரோகித் வெமுலாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள்.

பார்ப்பன இந்துமதவெறியின் மீது கடும் வெறுப்பு கொண்டு அதை வேரறுக்க துடிதுடித்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் தான் ரோகித் வெமுலா. ஐதராபாத் பல்கலைக்கழக அம்பேத்கர் மாணவர் சங்க நிர்வாகிகளில் ஒரு மாணவர் யாகுப் மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்தார்; முசாபர்நகர் கலவரம் குறித்த “முசாபர்நகர் பாக்கி ஹே” எனும் ஆவணப்படத்தை, இம்மாணவர்கள் கூட்டமைப்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் திரையிட விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி திரையிட்டது. வளாகத்தில் நடைபெறும் கலாச்சார விழாவில் மாட்டுக்கறி பிரியாணி வழங்கியது, அன்றாட உணவாக விடுதியிலேயே மாட்டுக்கறி வழங்க வேண்டும் என்ற அளவிற்கு வெமுலா தலைமையிலான மாணவர்கள் கோரிக்கை வைத்தது பல்கலைக்கழக நிர்வாகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

மேலே, கோடிட்டு காட்டிய சம்பவங்கள் ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழக்தில் இயங்கி வரும் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் (ABVP) என்ற ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினருக்கும், பார்ப்பன வெறி பிடித்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும்  பெரும் இடையூறாக அமைந்தது.


படிக்க: ரோகித் வெமுலா கொலை – ஏ.பி.வி.பி அவதூறுகளுக்குப் பதில்


டிசம்பர் 16-ஆம் தேதி வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காரணம், “ஐதராபாத் பல்கலைக்கழகம் தேசத்துரோக, சாதிய பயங்கரவாதிகளின் கூடாரமாகிவிட்டது” என்று மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு எழுதிய கடிதங்கள். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் ஸ்மிருதி இரானி, அம்மாணவர்கள் யாரும் விடுதியில் தங்கக்கூடாது என்று நடவடிக்கை எடுத்தார். இதன்மூலம் ஊர் விலக்கம் செய்வது என்ற தீண்டாமை நடவடிக்கை பல்கலைகழக வளாகத்தில் வெமுலா உட்பட ஐந்து மாணவர்கள் மீது தொடுக்கப்பட்டது. அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக 15 நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருந்த நிலையில் ஞாயிறு (17-01-2016) அன்று இரவு தற்கொலை செய்து கொண்டார் ரோகித் வெமுலா.

“இந்தத் தருணத்தில் நான் புண்பட்டவனாக உணரவில்லை. என் மனம் துயரில் மூழ்கவில்லை. வெறுமையானவனாக, என்னைப் பற்றியே அக்கறையற்றவனாக உணர்கிறேன். இது பரிதாபத்துக்குரிய நிலைதான். அதனால்தான் இதைச் செய்கிறேன். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். இவ்வுலகில் வாழ்வதைவிடச் சாவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” இவை ரோகித் வெமுலா தன் இறுதிக் கடிதத்தில் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு எழுதிய வரிகள்.

பார்ப்பனிய சனாதன தர்மத்தையும், ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டைக் கூறு போட்டு விற்கும் தங்களது ‘கரசேவை’களையும் எதிர்த்தால், ஒன்று கொன்றொழிக்கப்படுவீர்கள் அல்லது உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்படுவீர்கள் என்பது தான் கல்புர்கி, பன்சாரே தொடங்கி ரோஹித் வெமுலா வரை நடத்தப்பட்ட கொலைகளின் மூலம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் உலகிற்கு உணர்த்த விரும்பும் பாடம்.


படிக்க: ரோகித் வெமுலா தற்கொலை : ஆர்.எஸ்.எஸ் கும்பலை துரத்தியடிப்போம் !


ரோகித் வெமுலா ஏதோ இந்துமதவெறி தாக்குதலுக்கு பலியாகி உயிர் நீத்த முதல் மாணவரோ அல்லது கடைசி மாணவரோ அல்ல. அவருக்கு முன்பும் அவருக்கு பின்பும் பல மாணவர்கள் சாதி – மத வெறி ஒடுக்குமுறையால் உயிரிழந்துள்ளனர். ஐ.ஐ.டி உள்ளிட்டு இந்தியா முழுவதும் உள்ள பல கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சாதிய மதவாத ஒடுக்குமுறைகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறன. மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆர்.எஸ்.எஸ் -இன் கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முடிவென்ன?

“எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள்..” ரோகித் வெமுலாவின் கடைசி வரிகள் இது. ஆம், அவருக்காக நாம் கண்ணீர் சிந்துவதை வெமுலா விரும்பவில்லை. அது பயணற்றதும் கூட. ரோகித் வெமுலா எதிர்கொண்டதை விட, இப்பொழுது பார்ப்பன இந்து மதவெறி பாசிச ஒடுக்குமுறைகள்  முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளன. இதை எதிர்கொள்ள ரோகித் வெமுலவை  நெஞ்சில் ஏந்துவோம். பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களை கட்டி அமைப்போம்.

ஊமைத்துரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here