மீண்டும் இந்தி: வெறும் மொழித் திணிப்பல்ல!

இந்தித் திணிப்பு நடவடிக்கைகளின் அடிப்படை, அகண்ட பாரதம், பார்ப்பன வர்ணாசிரம ஆதிக்கம், சமஸ்கிருத மேலாதிக்கம் என்கிற அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘இந்து-இந்தி-இந்தியா’ என்ற கோட்பாடாகும்.

மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இந்திய உழைக்கும் மக்கள் மீது தொடுத்துவரும் பல்வேறு தாக்குதலில் ஒன்று, இன-மொழி அடிப்படையிலான தாக்குதலாகும். இவற்றில் முதன்மையானது இந்தி மொழித்திணிப்பாகும்.

பிரதான் மந்திரி கிஷான் பென்சன் யோஜனா, ஜன் தன் யோஜனா, ஸ்வச் பாரத், பேட்டி பச்சோ பேட்டி பதோ, உஜாலா யோஜனா என அரசாங்கத்தின் திட்டங்களையும் சட்டங்களையும் இந்தியில் குறிப்பிடுவது; ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தியை அலுவல் மொழியாக நடைமுறைப்படுத்துவது; இரயில்வே, வங்கிகள் போன்ற ஒன்றிய அரசின் நிறுவனங்களில் இந்தியில் அறிவிப்புப் பலகைகளை அமைப்பது; இரயில் நிலையங்களில் ‘தினம் ஒரு இந்தி வார்த்தை’ என இந்திப் பிரச்சாரம் செய்வது போன்ற பல்வேறு வடிவங்களில் இந்தியைத் திணித்து வருகிறது, மோடி-அமித்ஷா கும்பல்.

இவற்றின் தொடர்ச்சியாக, அண்மையில் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகளில் இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்க வேண்டும், கலை-அறிவியல் கல்லூரி, தொழிற்கல்வி ஆகியற்றில் இந்தியை பயிற்றுமொழியாக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு குடியரசுத் தலைவரிடம் அறிக்கையாக அளித்திருக்கிறது. இது நாடு தழுவிய வகையில் ஒரே நேரத்தில் இந்தித் திணிப்பை மேற்கொள்ளும் பெரிய சதித்திட்டமாகும்.

படிக்க : இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகள் தினம் – ஆளுநர் ரவியே வெளியேறு சென்னையில் ஆர்ப்பாட்டம்!

இத்துடன், ஏற்கெனவே அரசு அலுவலங்களில் இந்தித் திணிப்பு நடைமுறையில் அரங்கேறி வருகிறது. ஒன்றிய ஆயுதப்படைக்கு அண்மையில் இந்தி மொழியில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டிருப்பது இதற்குத் தக்கச் சான்றாகும். மேலும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் இனி இந்தி மொழியில்தான் வழங்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது காவி பாசிசக் கும்பல்.

இந்து-இந்தி-இந்தியா: பல்தேசிய இன ஒடுக்குமுறை!

இந்தித் திணிப்பின் அடிப்படை, அகண்ட பாரதம், பார்ப்பன வர்ணாசிரம ஆதிக்கம், சமஸ்கிருத மேலாதிக்கம் என்கிற அடிப்படையிலான ‘இந்து-இந்தி-இந்தியா’ என்ற கோட்பாடாகும்.

இந்த இந்தித் திணிப்பு என்பது தமிழகத்தின் மீது திணிக்கப்படுவதாகவும் அதனை எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும் என்றும் நம்மவர்கள் பேசி வருகின்றனர்; இது முழு உண்மையல்ல. இந்தித் திணிப்பு என்பது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மேற்கு வங்கம், கேரளா, தமிழகம், பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இந்தித் திணிப்பை எதிர்த்தாலும், அதனை வீரத்துடன் எதிர்த்துப் போரிட்ட வரலாறு தமிழகத்திற்கு மட்டுமே உள்ளது.

1935-லும் 1965-லும் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் இந்தித் திணிப்பு முதன்மையாக மேற்கொள்ளப்பட்ட காலங்களாகும். அந்த முதன்மையான காலங்கள் மட்டுமின்றி, பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தித் திணிப்புக்கான முயற்சிகள் நடந்துள்ளன.

தமிழ் மொழியின் மேன்மை, தமிழ்நாட்டின் பார்ப்பன-வேத ஆதிக்க எதிர்ப்பு மரபு காரணமாகத்தான் தமிழகத்தை இந்தியால் அவ்வளவு வேகமாக ஆதிக்கம் செய்ய முடியவில்லை. குறிப்பாக, சமஸ்கிருதத்திற்கு முன்பே தோன்றிய மூத்த மொழி என்பதால் மட்டுமல்ல, உயர்தனிச் செம்மொழியாக தமிழ் தனித்து விளங்குவது அதன் சிறப்பாகும்; எனவேதான் 3,000 ஆண்டுகளாகியும் ஆரிய-பார்ப்பன கும்பலால் தமிழை வெற்றிகொள்ள முடியவில்லை.

இந்த பார்ப்பன-வேத-ஆகம எதிர்ப்பு மரபை நசுக்குவதற்கு மேலிருந்து இந்தி மொழித் திணிப்பு என்ற ஒரு வடிவத்தில் மட்டுமல்ல, தமிழை சமஸ்கிருதத்தின் கிளை மொழி என்று நிறுவுவதற்கான முயற்சிகள் கீழிருந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழ் புலவர்களை இந்துத் துறவிகளாகக் காட்டி வரலாற்றைத் திரிப்பது, ‘காவித் தமிழ்ச் சங்கமத்தை’ நடத்தி, ஆன்மிகம்தான் தமிழின் ஆன்மா என்று சித்தரித்தது என பல்வேறு சதி வேலைகளில் மோடி-அமித்ஷா கும்பல் ஈடுபட்டுள்ளது.

இந்தித் திணிப்புக்கு நிகராகவும் இணையாகவும் சமஸ்கிருத வாரம், பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்குவது, தமிழுக்கு நிகராக சமஸ்கிருதத்தை முன்னிறுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது மோடி-அமித்ஷா கும்பல். கடந்த எட்டு ஆண்டுகளில், செத்தமொழியான சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்கிய தொகை மட்டும் 1,488 கோடிகளாகும்; அதேநேரம் செம்மொழியான தமிழுக்கு 7,4 கோடி அற்பத்தொகையை ஒதுக்கியுள்ளது; ஒரு செம்மொழிக்கே இந்நிலையென்றால், பிற தேசிய இன மொழிகளின் நிலை இதைவிட மோசமாக உள்ளது.

இவ்வாறு காவி பாசிசக் கும்பல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்க்கும் தமிழின அமைப்புகள், இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்கள் கூட, தமிழ் மொழியின் மீதான தாக்குதலாக மட்டுமே இன-மொழி கண்ணோட்டத்தில் இருந்து இதனை சுருக்கிப் பார்க்கின்றனர். ஆனால், அவ்வாறு இதனை சுருக்கிப் பார்க்க முடியாது.

ஆதிக்கமும், எதிர்ப்பும்: மொழி என்பது மொழி மட்டுமல்ல!

ஒரே நாடு, ஒரே சந்தை என்ற அடிப்படையில்தான் ஒரே மொழி என இந்தியைத் திணிப்பதும் நடைபெற்று வருகிறது. இந்தித் திணிப்பு நடத்தப்படுவது இது புதிதல்ல. இதற்கு முன்னர், பலமுறை இந்தித் திணிப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மோடி – அமித்ஷா கும்பலின் தாக்குதல் என்பது பரந்துவிரிந்தது. இந்தி-இந்து-இந்தியா என்ற இந்துராஷ்டிர, அகண்ட பாரத, பார்ப்பன-வர்ணாசிரம ஆதிக்கத்தின் பல்வேறு தாக்குதல்களில் ஒன்றுதான் மொழிகளின் மீதான இத்தாக்குதலாகும். இந்த வர்ணாசிரம கோட்பாட்டின் அடிப்படையில்தான், வெள்ளை ஏகாதிபத்தியத்தின் தயவில் இந்திய அரசியல் அமைப்பும் கட்டியமைக்கப்பட்டது. இது இந்தியாவில் இருக்கும் பல்தேசிய, இன, மொழி உரிமைகளை நசுக்கும் வகையிலேயே கட்டியமைக்கப் பட்டுள்ளது.

மக்கள் நல அரசு என்ற போர்வையில் செயல்பட்டு வந்த இந்த இந்திய அரசியல் அமைப்பானது, மறுகாலனியாக்கக் கொள்கைகளில் விளைவாக பாசிசமயமாகி வருகிறது. 2014-இல் மோடி-அமித்ஷா தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிசக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேஷன்கார்டு, ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே மதம் என தனது இந்துராஷ்டிரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த நோக்கத்தில் இருந்துதான், இந்தியத் தொழில்துறையில் மார்வாடி, குஜராத்தி, சிந்தி, பார்ப்பன, பனியா சாதிப் பின்னணி கொண்ட அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் இந்த கும்பலின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுகிறது. அதானி துறைமுகங்கள் இதற்கு தக்கச் சான்றாகும்.

திராவிடம் பேசப்படும் தமிழகத்திலும் சரி, இடதுசாரி வேடம் பூண்டுள்ள கேரளத்திலும் சரி, அதானிக்கு மட்டும் தடை இல்லை. சேலம் இரும்பாலை முதல், சூரிய மின் தகடு அமைத்தல் என தமிழகத்திலும் கார்ப்பரேட் ஆதிக்கம் இல்லாத இடம் இல்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மூலமாகவும் தஞ்சையில் மீத்தேன் எடுக்கும் திட்டங்களின் மூலமாகவும் வேதாந்தாவின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த கார்ப்பரேட் கொள்ளையர்களுக்காக சொந்த மாநில மக்களைச் சுட்டுத்தள்ளவும் மாநில அரசுகள் தயங்குவதில்லை.

இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் மறைமுக ஆதிக்கத்திற்கு துணைபோவதுதான் இந்தித் திணிப்பு! தன் வாழ்நாளில் ஜல்லிக்கட்டையே பார்த்திராதவர்கள் ஜல்லிக்கட்டு வேண்டியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடிக்கு வெளியிலும், டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கு எதிராக தலைநகரத்திலும் போராட்டங்கள் நடைபெறுகின்றனவே, அதற்குரிய காரணங்களில் ஒன்று தமிழ் மக்களிடையே உள்ள தேசிய இன உணர்ச்சியாகும்.

இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதன் மூலம், பல்தேசிய இனங்களை அழித்து ‘ஒற்றை இந்துராஷ்டிரத்தை’ அமைப்பதற்கு பின்னே உள்ளது பார்ப்பன-பனியா கார்ப்பரேட்டுகளின் லாபவெறியே ஆகும்!

ஆரிய பார்ப்பனியத்தின் பாசிச அவதாரம்!

கார்ப்பரேட் முதலாளிகள் பட்டவர்த்தனமான பயங்கரவாதத்தை தொழிற்சாலைகளில் நிலைநாட்டிக் கொள்வதற்கேற்ப, 44 தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்து, 4 தொழிலாளர் சட்டங்களாகச் சுருக்குவதைப் போலவே, மொழிகள் மீதான உரிமைகளும் நசுக்கப்படுகின்றன.

புதிய கல்விக் கொள்கை என்பது இந்தவகையிலான தாக்குதலின் ஒரு அங்கமாகும். பார்ப்பனப் புரட்டுகளை வரலாறாக மாற்றுவது, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது மட்டுமல்ல, ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிப்பது, அவர்களை ‘நவீன சூத்திரர்களாக’ மாற்றி ஒடுக்குவதும் இந்த இந்துராஷ்டிர சதித் திட்டத்தில் அடங்கும்.

பொதுத்துறை நிறுவனங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது ஒருபுறம் நடக்கும் போதே, பொதுத்துறை நிறுவனங்களில் இந்திப் பேசுபவர்களைத் திணிப்பதும் நடக்கிறது. இது இந்தி மொழித் திணிப்பைப் போன்ற மறைமுகத் தாக்குதலாகும். ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழி பேசுபவர்கள் புறக்கணிக்கப்பட்டு இந்திப் பேசுபவர்களே ஆதிக்கம் புரிகின்றனர். இந்த இந்தி ஆதிக்கமானது பா.ஜ.க. செல்வாக்காக உள்ள குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களிலேயே கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இன்னும் சொல்லப்போனால், குஜராத்திலும் மகாராஷ்டிரத்திலும் இனவெறியைத் தூண்டித்தான் பா.ஜ.க. செல்வாக்கைப் பெற்றுக்கொண்டது.

தேசிய இன, மொழி அடையாளங்களுக்கு அடிப்படையாக இருக்கும் விவசாயிகள், சிறுதொழில் முனைவோர், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்களின் உரிமைகள் எல்லாம் நசுக்கப்படுவதுடன் இணைந்ததுதான் இந்தித் திணிப்பாகும். குறிப்பாக, ஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற அடிப்படையில்தான் ஜி.எஸ்.டி., செஸ் வரி விதிக்கப்படுகிறது. முன்னேறிய தமிழகத்தில் இருந்து அதிக வரி வருவாய் பெற்றுக்கொள்ளும் ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு உரிய பங்கை வழங்காமல் இழுத்தடிக்கிறது.

படிக்க : ஜனவரி 25: இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடிப்போம் ! | மக்கள் அதிகாரம் துண்டறிக்கை!

புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி. போன்ற அனைத்துத் திட்டங்களும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் தன்மை கொண்டவையாக அமைந்துள்ளன. மொழியின் மீதான ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் இவை குறித்தும் பேச வேண்டும்!

வருகின்ற 2023 ஜனவரி 25, 1965-ஆம் ஆண்டு தமிழகம் நடத்திய வீரம்செறிந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போரின் 58-ஆம் ஆண்டு ஆகும்; தம் இன்னுயிரை கொடுத்தேனும் ஆரிய-பார்ப்பனியத்தின் ஆதிக்க வடிவமான இந்தி, நாட்டின் தேசிய மொழியாவதைத் தடுக்க வேண்டும் என்று போராடிய மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் நாளாகும்; ஒன்றியத்தின் ராணுவத்திற்கும் அஞ்சாமல் தமிழகத்தின் லட்சக்கணக்கான இளம்குருத்துக்கள் வீதியிலிறங்கி இந்தியை விரட்டியடித்த நாளாகும், 500க்கும் மேற்பட்டோர் இப்போரில் தியாகிகளானர்கள்!

ஆரிய-பார்ப்பனியம், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க, அம்பானி-அதானி பாசிசமாக அவதாரம் எடுத்துள்ள இன்றைய அரசியல் சூழலில், பாசிச எதிர்ப்பு போராட்டத்திற்கு வரலாற்று உணர்வும் இன்றியமையாத் தேவை என்ற வகையில், ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய எமது தோழமை அமைப்புகள் அரசியல் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியுள்ளன; உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஆதரியுங்கள், தங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!

♦ மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

♦ ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிப்போம்!


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க