19.03.2023

தேர்வுக்கு செல்லாத மாணவர்கள்:
கார்ப்பரேட் திட்டங்களால் கற்றல்திறன் உயரவில்லையா?

கண்டன அறிக்கை!

டந்த 14.03.2023 அன்று தொடங்கிய பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களில் 50674 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது கல்வியாளர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் விவாதப் பொருளாகி உள்ளது.

இந்நிலையில் பொதுத் தேர்வுக்கு வராத மாணவர்கள் குறித்து ஆராய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தேர்வுக்கு வராத மாணவர்கள் கண்டறியப்பட்டு கவுன்சிலிங் கொடுக்கப்படும். வரும் 2023 ஜூன் மாதத்தில் மீண்டும் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், அவர் பேசும்போது, “இரண்டு மொழித் தேர்வுகளையும் அச்சம் காரணமாக எழுதாத மாணவர்கள், அடுத்துவரும் தேர்வுகளை எழுதுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதேபோன்று 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் முழுமையாக பங்கேற்பதை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

படிக்க : ‘தி வயர்’ இணைய தளத்தின் மீதான அவதூறுகள், அடக்குமுறையை ஏவும் காவி பாசிச கும்பலை முறியடிப்போம்! | புமாஇமு

பணி தொடர்பாக பெற்றோர் இடம்பெயர்ந்து வருவதும் மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு காரணமாக உள்ளது என்றும், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் அதிக அளவில் தேர்வு எழுத வரவில்லை என்றும் தெரிவித்தார்.

50000 மாணவர்கள் தேர்விற்கு வராதது குறித்து கல்வியாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஆசிரியர் உமா மகேஸ்வரி எமிஸ் என்னும் முறையைப் பற்றி விளக்குகிறார். அதாவது எமிஸ் முறைக்கு முன்பு இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வரவில்லை என்றாலே வருகை பதிவேட்டிலிருந்து அந்த மாணவருடைய பெயர் நீக்கப்படுமாம். ஆனால், தற்போதுள்ள எமிஸ் முறையில் ஒரு நாள் பள்ளிக்கு வந்திருந்தால் கூட அந்த மாணவருடைய பெயர் வருகை பதிவேட்டிலிருந்து எடுக்கப்படாதாம்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அமைச்சர் சொல்வதுபோல் இனிமேல்தான் கவுன்சிலிங் கொடுத்து மாணவர்களை கூட்டி வரவேண்டிய அவசியம் இல்லை இந்த எமிஸ் முறையில் ஏற்கனவே பல மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதில்லை என்பது அரசுக்கு தெரியாதா? அப்போது ஏன் கவுன்சிலிங் கொடுக்கவில்லை?

அச்சம் காரணமாக தேர்வு எழுத வரவில்லை பெற்றோர்கள் பணி நிமித்தமாக வேறு ஊர்களுக்கு செல்வதால் இதுபோன்ற சிக்கல்கள் வருகின்றன என பிரச்சினையையே திசை திருப்புகின்றார் அமைச்சர்.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறும்போது, “இன்றும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பள்ளிக்கு வருவதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை காரணம் என்னவென்றால் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வேலைக்கு போய் அதில் கிடைக்கும் சிறு வருமானம் போதை போன்ற விஷயங்களால் கல்வியின் மீதான ஆர்வம் குறைந்துள்ளது.

இதுபோக பெண்கள் குழந்தை திருமணத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஏற்கனவே ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் கொரோனா காலகட்டத்தில் தேர்ச்சியானவர்கள் பெரும்பாலும் அவர்கள் பள்ளி சென்ற நாட்கள் என்பது மிகவும் குறைவு” என பல்வேறு விஷயங்களை முன் வைக்கின்றனர்.

இப்படி கல்வியாளர்கள் முன்வைக்கும் இதே விஷயங்களை சொல்லிதான் நாங்கள் இதை சரி செய்ய பல்வேறு திட்டங்களையும் செய்கிறோம் என முன் வைத்தார்கள். அது இல்லம் தேடி கல்வித் திட்டம், சிறார் திரைப்படங்கள், கலைத்திருவிழாக்கள், பள்ளி மேலாண்மைக் குழுக்கள், இலக்கிய மன்ற செயல்பாடுகள், கண்காட்சிகள் போன்றவைகள்.

இதுவெல்லாம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை பற்றி துளி அளவு கூட பேசாமல் பெற்றோர்கள் மீதும், அச்சம் என மாணவர்களின் மீதும் பழியை போட்டுவிட்டு விஷயத்தை திசை திருப்பி விட்டார்கள். இப்படி எப்போதெல்லாம் பிரச்சினைகள் வருகிறதோ அப்போதெல்லாம் மாணவர்கள் மீதும் பெற்றோர்கள் மீதும் பழியை போட்டுவிட்டு நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என தப்பித்துக் கொள்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள் இவர்கள்.

இதுபோன்ற அரசின் புதிய புதிய திட்டங்களை செயல்படுத்த போதுமான அளவு ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. அதனால் அனைத்து சுமைகளும் இருக்கின்ற ஆசிரியர்களின் மீது விழுந்து ஒட்டுமொத்த திட்டங்களும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. ரெக்கார்டு பராமரிப்பு, ஆதார் இணைப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, பள்ளி மேலாண்மை குழு, இல்லம்தேடி கல்வித் திட்டம் என பல்வேறு வேலைகளில் ஆசிரியர்கள் பிணைக்கப்பட்டுள்ளது என்பது மாணவர்களை கவனிப்பது என்பது மிகப்பெரும் நெருக்கடியாக மாறிவிட்டது.

படிக்க : மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க மறுக்கும் அரசுக்கு என்ன தண்டனை? | புமாஇமு பத்திரிகை செய்தி

இதற்கெல்லாம் அடிப்படையாக போதுமான ஆசிரியர்களை நியமிப்பதை விட்டுவிட்டு இதே திட்டங்களில் தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்றவைகளின் மூலம் இருக்கின்ற ஆசிரியர் பணியிடங்களை ஒழித்துக்கட்டும் வேலையைத்தான் அரசு செய்து வருகிறது.

அதனால், தற்போது அரசு கொடுக்கும் கவுன்சிலங்கினால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. கூடுதலாக இந்தப் பணியும் ஆசிரியர் தலையில் விழுவதால் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் நெருக்கடியில் தள்ளி திணறடிக்கும் வேலையை செவ்வனே செய்யவிருக்கிறது அரசு.

அரசு கொடுக்கும் இந்த நெருக்கடி என்பது தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தை அமல்படுத்த அரசு கொடுக்கும் நெருக்கடி என்பதை நாம் அனைவருக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் ஒற்றுமையில்தான் –களத்தில்தான்- இப்படிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க முடியும்.


தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
9444836642.