ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவர், இனி எட்டாண்டுகள் தேர்தலிலேயே போட்டியிட முடியாத சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கர்நாடாவில் உரையாற்றிய ராகுல் காந்தி, மோடியின் ஆட்சியில் பொதுத்துறை வங்கிகளைச் சூறையாடிவிட்டு கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டைவிட்டே ஓடுவதைப் பற்றியும் அவர்களுக்குத்தான் மோடி சவுகித்தாராக (காவலர்) செயல்படுகிறார் என்பதையும் அம்பலப்படுத்திப் பேசினார்.
அந்த வரிசையில், நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரையும் மோடியுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பையும் மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில், “அனைத்து திருடர்களுக்கும் ‘மோடி’ என்ற பின்னொட்டுப் பெயர் எவ்வாறு அமைகிறது” எனக் கேட்டிருந்தார். இவ்வாறு பேசியதன் மூலம் ஒட்டுமொத்த மோடி சமூக மக்களையும் ராகுல் இழிவுபடுத்திவிட்டார் என்று வழக்கு தொடரப்பட்டது.
படிக்க : ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்! | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை
இதுதொடர்பான வழக்கு நான்கு ஆண்டுகளாக சூரத் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். மேலும், மேல் முறையீட்டுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், 30 நாட்கள் ஜாமினும் வழங்கியிருந்தது. ஆனால் 24 மணிநேரத்தில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.
இது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட பாசிசத் தாக்குதலாகும். அந்நிய மண்ணில் ‘இந்திய ஜனநாயகத்தை’ இழிவுப்படுத்திய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தொடர்ந்து ஒருவார காலத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்தை பா.ஜ.க. முடக்கிவந்த சூழலில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கடந்த 17ஆம் தேதியே, “ராகுலின் லண்டன் பேச்சு, மக்களவை விதிமுறை 223-ன்படி ஏற்புடையதல்ல. இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தியின் எம்.பி பதவியை ஏன் பறிக்கக் கூடாது என்பது பற்றி சிறப்புக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்” என அவைத்தலைவரிடம் மனு அளித்திருந்தது பா.ஜ.க. எம்.பி.க்கள் குழு.
இது ராகுலின் எம்.பி. பதவியை பறித்து, அவரை நாடாளுமன்றத்திலிருந்தே தூக்கி வீச வேண்டும் என்று காவி பாசிசக் கும்பல் முன் திட்டத்தோடு செயல்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது. அதற்காக சட்டப்பூர்வ காரணங்களை தேடிக் கொண்டிருந்த காவி பாசிஸ்டுகள், சூரத் வழக்கின் தீர்ப்புகள் மூலமாக தங்கள் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
இது ராகுல் காந்தி என்ற தனிப்பட்ட எம்.பி மீதான தாக்குதல் அல்ல; இனி ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக, பா.ஜ.க.விற்கு எதிராக, அம்பானி, அதானி, நீரவ் மோடி, லலித் மோடி போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு எதிராக, நரேந்திர மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் யாராவது குரல் எழுப்பினால், அவர்களையும் இதுபோல நாடாளுமன்றத்தை விட்டே தூக்கியெறிந்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுக்கிறது காவிக் கும்பல்.
இது ஒரு பாசிச நடவடிக்கை. ஆனால், இதைக் கண்டித்து அறிக்கைவிடும் அரசியல் கட்சி தலைவர்கள் கூட “ராகுலின் பதவி நீக்கம், அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்” என்கின்றனர். இது அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் அல்ல தோழர்களே, “அரசமைப்புச் சட்டப்படியான தாக்குதல்”. “சட்டப்பூர்வ பாசிசத் தாக்குதல்”!
பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் மீது, சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் எப்படி ஏவப்படுகிறதோ; மக்களுக்காக போராடும் செயல்பாட்டாளர்கள், அறிவித்துறையினர் மீது எப்படி ஊ.ஃபா கொடுஞ்சட்டம் பாய்ச்சப்படுகிறதோ; சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது என்.ஐ.ஏ எப்படி ஏவிவிடப்படுகிறதோ – அதுபோல, இதுவும் சட்டப்பூர்வமான பாசிசத் தாக்குதலாகும்.
நமது நாட்டில் அமலில் இருப்பது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானிகளுக்கான ஜனநாயகம்; இந்திய மக்கள் மீதான பாசிசம்! இங்கு வைக்கப்படும் “அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்ற முழக்கம் இல்லாத ஜனநாயகத்தை கட்டியழுதுகொண்டிருக்கும் முழக்கமாகும்.
“இந்தியா எதிர்கொண்டிருக்கும் அபாயம் பா.ஜ.க. என்ற தனிப்பட்ட கட்சி அல்ல. ஒட்டுமொத்த ஜனநாயக நிறுவனங்களையும் இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கைப்பற்றியிருக்கிறது. நாம் ஒரு கட்டமைப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிக்கிறோம்” என்று ஒவ்வொரு மேடையிலும் பேசியவர் ராகுல் காந்தி. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு ராகுலின் மீது தனிச்சிறப்பான வெறுப்புக்கு இதுவும் ஒரு காரணம்.
ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பே பாசிசமயமாகியுள்ள அபாயத்தை தேர்தலின் மூலம் முறியடித்துவிட முடியும் என்று கருதுவதும், பாசிசமயமாகிவரும் போலி ஜனநாயகத்தை மீட்டு உயிர்பித்துவிட முடியும் என்று கருதுவதும் மாயை – பாசிசக் கும்பல், தனது ஒவ்வொரு நடவடிக்கையின் மூலமும் இதை நமக்கு உணர்த்துகிறது!
மாற்றுக் கட்சியோ, தேர்தலோ தீர்வல்ல. பெயரளவிலும் நடைபெறும் இந்த போலி ஜனநாயகத் தேர்தலும் கூட ஒரே நாடு; ஒரே தேர்தலின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்படலாம்.
மாற்றுக் கட்டமைப்பை நோக்கிப் போராடுவதே தீர்வாகும்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!
ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்
24-03-2023