நெல்லை: பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் – தெருமுனைக்கூட்டம்

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங் 92வது துக்கிலிடப்பட்ட நாளில் தெருமுனை கூட்டம், நெல்லை மண்டலம் மக்கள் அதிகாரம் சார்பாக நெல்லையில் மேலப்பாளையம் பகுதியில் நடைபெற்றது.

கத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை இழந்த நாள் மார்ச் 23.

இந்த நாளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங் 92வது நினைவு நாள் தெருமுனை கூட்டம், நெல்லை மண்டலம் மக்கள் அதிகாரம் சார்பாக நெல்லையில் மேலப்பாளையம் பகுதியில் நடைபெற்றது.  23-03-23 அன்று மாலை 6:15 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.

மக்கள் அதிகாரம் நெல்லை மண்டல செயலாளர் தோழர் செல்வம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இணைச் செயலாளர் தோழர் கின்ஷன் தலைமை தாங்கினார். தலைமை உரையில் தோழர் கின்ஷன் பேசுகையில், “ஏகாதிபத்தியம் அன்று எப்படி மக்களை சுரண்டியது, இன்று அது எப்படி பல கார்ப்பரேட் கம்பெனிகளாக ஒன்றிணைந்து நாட்டை சுரண்டுகிறது என்பதையும், அதற்கு ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி கும்பல் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும் அதை வீழ்த்த வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார்.

படிக்க : பகத்சிங் பார்வையில் காதல், தியாகம், மரணம் | தோழர் யுவராஜ் | வீடியோ

விடுதலை சிறுத்தை கட்சியின்  மாவட்ட செய்தி தொடர்பாளர் தோழர் முத்து வளவன் தனது உரையில், சாதியின் பெயரால் நம்மை ஒடுக்கப்பட்டு உழைக்கும் மக்கள் உள்நாட்டுக்குள்ளேயே எப்படி அகதியாக்கப்படுகிறோம், ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி எவ்வாறு வேலை செய்து நம்மை பிரிக்கிறது என்பதையும், அனைவரும் ஒன்றிணைந்து அதை முறியடிக்க வேண்டும் என்பதையும் விளக்கிப் பேசினார்.

சி.பி.ஐ (எம்.எல்) மாவட்ட செயலாளர், தோழர் மா.சுந்தர்ராஜன் தனது உரையில், கல்வி, வேலை வாய்ப்பு எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பதையும், அதில் காவி – கார்ப்பரேட் கூட்டு எப்படி நிறைந்துள்ளது என்பது குறித்தும் பேசினார்.

புரட்சிகர இளைஞர் முன்னணி, தோழர் சுஜித் தனது உரையில், பாசிச கும்பல்களை வீழ்த்த கருப்பு, சிவப்பு, நீலம் இவை இணைய வேண்டும், பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய சிந்தனைகள் உள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து பாசிச கும்பல்களை இந்த மண்ணில் முறியடிக்க வேண்டும் என்று தனது உரையில் கூறினார்.

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் காஜா பேசுகையில்,  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிரான  போராட்டத்தில் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் பாதிப்புக்குள்ளான, போராடிய  மக்களின் பக்கம் நின்று போராடியதால் தான் அச்சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதையும், ஆளுநர் ரவி ஆர்.எஸ்.எஸ் ரவியாக மாறி தமிழக மக்களுக்கு எதிராக வேலை செய்வது பற்றியும் எடுத்துரைத்து இக்கும்பல்களை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் பேசினார்.

தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் தமிழரசு தனது உரையில், பகத்சிங்கின் சிறை வாழ்க்கையை நினைவுகூர்ந்தும், தமிழ் தேசியம் என்று பேசி உழைக்கும் மக்களை சாதி, இன ரீதியாக பிரிக்கின்ற வேலையை செய்கின்ற சீமானை கண்டித்தும் பேசினார்.

ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் இரா.ச. இராமமூர்த்தி எனது உரையில், அன்று பகத்சிங் களத்திற்கு வந்ததைப் போல இன்று நாமும் பாசிசத்தை வீழ்த்த களத்தில் இறங்க வேண்டும் என்று உரையாற்றினார்.

திராவிட தமிழர் கட்சி மாவட்ட நிதி பொறுப்பாளர் தோழர் முத்துராஜ் தனது உரையில், அனைவரும் புத்தகம் படித்து அதன் மூலம் நமது வரலாற்றை புரிந்து கொண்டு,  போராட்டக் களத்தில் இறங்கி ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பேசினார்.

மக்கள அதிகாரம் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தனது சிறப்புரையில், “அரசியலுக்கும், மக்களுக்கும் இருக்கும் தொடர்பு பற்றியும்,  மக்களின் ஒவ்வொரு செயலுக்கும், நடைமுறைக்கும் பின்னாலும் அரசியல் இருக்கிறது. அதுதான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அது இன்று பாசிசத்தின் கையில் சிக்கி இருக்கிறது. இன்று பாசிசம் அரசு கட்டமைப்பிலும், அதற்கு வெளியிலும் பரவி மக்களை ஒடுக்குகிறது. நீதிமன்றம், தேர்தல் அமைப்புகள் என்று பல வழிகளில் பாசிசம் வளர்ந்து மக்களை ஒடுக்குகிறது. ராகுல் காந்திக்கு மோடியை விமர்சனம் செய்து பேசினார் என்று இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.

இது பாசிசம் எந்தளவுக்கு நீதித்துறையிலும் கோலோச்சுகிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக உள்ளது. அதுபோல மே 1 மதுரையில்  நடைபெறவிருக்கும், மக்கள் அதிகாரம் அமைப்பின்  ஆர் எஸ் எஸ்- பாஜக; அம்பானி அதானி பாசிசம் ஒழிக  என்ற முழக்கத்தில் ஒழிக என்று இருப்பது குறித்து வாட்ஸ் அப்பில் சங்கீகள் புகார்  அனுப்பினார்கள் என்று போலீசு வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் சுவர் எழுத்துக்களை போலிசு அழித்துள்ளது. மோகன் பகவத்  வந்தபோது வட்டாட்சியர்  அவருக்கு புதியதாக சட்டத்தை மீறி  வரவேற்பு அளித்தார்.

இப்படி பல்வேறு வழிகளில் பாசிசம் வளர்வதற்கு இங்கே அரசு உறுப்புகள் வேலை செய்கின்றன. மாநில அரசுகளின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகின்றன. கல்வி, வேலை வாய்ப்பு, ஜிஎஸ்டி இப்படி ஒவ்வொன்றிலும் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு மத்தியில் ஒருமுகப்படுத்தப்படுகின்றன. அரசு கட்டமைப்புக்கு வெளியிலும் பாசிச குப்பல்கள் தொடர்ந்து வேலைகள் செய்கின்றன. குறிப்பாக சாதிய அமைப்புகளை கூர் தீட்டி அவற்றை களத்தில் இறக்கும் வேலையை செய்கின்றது.

படிக்க : ஆருத்ரா பண மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது! அண்ணாமலையை கைது செய்! | தோழர் மருது

சீமான்  போன்றவர்களை பயன்படுத்தி உழைக்கும் மக்களை பிளவு படுத்தி சாதியை வளர்த்து ஆதாயம் அடைகிறது. இவற்றை முறியடிக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. கடந்த காலங்களில் கருவறை நுழைவு போராட்டம், தமிழ் மக்கள் இசை விழா போன்ற எண்ணற்ற போராட்டங்களை மக்கள் கலை இலக்கிய கழகம் எடுத்துள்ளது. நமது தமிழ் மரபு பண்பாடு உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும். அதை சீர்குலைக்கும் சக்திகளை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். பகத்சிங்கிற்கு எப்படி ஒரு போராட்ட மரபு இருந்ததோ, அதேபோல் கட்டபொம்மன், சுந்தரலிங்கனார், ஒண்டிவீரன், சின்ன மருது இப்படி நமக்கும் ஒரு மிகப்பெரிய நீண்ட நெடிய போராட்ட மரபு உள்ளது. அதனை நாம் வரித்துக் கொண்டு இந்த அரசு கட்டமைப்புக்கு வெளியில் மக்களை ஒன்றிணைந்து இந்த பாசிச கும்பல்களை வீழ்த்த வேண்டும் என்று அறைகூவி தனது உரையை முடித்தார்.

இறுதியாக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தோழர் முத்து நன்றி உரை சொல்லி கூட்டத்தை நிறைவு செய்தார்.

தெருமுனைக் கூட்டத்தில் புத்தகம் அரங்கு போடப்பட்டது அதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தகத்தை ஆர்வமாக வாங்கினார்கள்.அதில் ஒரு சிறுவன் ஒரு புதிய ஜனநாயக புத்தகத்தை வாங்கியது மட்டுமில்லாமல் அவனது நண்பனை கூப்பிட்டு வாங்க செய்தான்.

பூர்விக தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பாலமுருகன் தெருமுனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கூறியாவது இன்றைய பாசிச சூழ்நிலையில் இந்த தெருமுனை கூட்டம்  திருநெல்வேலி மாவட்டத்திற்கு முன்னுதாரணமாக இருக்கிறது. இதை அடுத்த பல்வேறு கிராமங்களில் கொண்டு நாம் சேர்க்க வேண்டும் என்று தனது கருத்தை தோழர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க