மதுரை : சாதித் தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறும் அவலம்

ஒரு பக்கம் தமிழ்நாடு, வடமாநிலங்களை விட முன்னேறியுள்ளது என்று சொல்லிக் கொண்டாலும், சாதி ஒடுக்குமுறைகளில் முன்னணியிலேயே உள்ளது என்பது சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டிய தேவையை ஆழமாக உணர்த்துகிறது.

மிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சாதித்தீண்டாமை வன்கொடுமைகள் முற்போக்கு, ஜனநாயக சிந்தனை கொண்ட, மனிதநேயமுள்ள அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கிறது.

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமையின் மீதான விவாதங்கள் கனன்று கொண்டிருக்கும்போதே அதே அளவுக்கு இணையாக மதுரையில் நடக்கும் சம்பவங்கள் தமிழகம் வேகமாக பின்னோக்கிச் செல்வதை உணர்த்துகின்றன.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பழையூர் பஞ்சாயத்து தலைவர் வித்யா, பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர். அவருக்கு அப்பஞ்சாயத்தில் இருக்கும் ஆதிக்கசாதியினர் இழைத்த கொடுமைகள் வேங்கைவயலை விட கொடுமையாக உள்ளது. “பழையூர் ரேசன் கடை முன்புள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கழித்தது, அதே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பைப் லைன்களை அறுத்தது, சாதியைச் சொல்லித் திட்டியது, ஊராட்சி மன்ற வாசலில் மலம் கழித்தது, கிராமசபைக் கூட்டம் நடத்த விடாமல் தடுப்பது, குளியல் தொட்டியில் 15 தடவை மலம் கழித்தது” ஆகிய கொடூரமான வன்கொடுமைகள் மூலம் தன்னைப் பணி செய்யவிடாமல் தடுப்பதாக வித்யா கூறுகிறார். “வன்கொடுமை திருத்தச்சட்டத்தின் கீழ் சாதிவெறிக் கும்பலை கைது செய்ய வேண்டும், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” எனவும் தமிழ்நாடு அரசிற்கு புகார் அனுப்பியுள்ளார்.

“பழையூரில் ஆதிக்கசாதியைச் சார்ந்த இரண்டு சாதியினருக்கு தனியே சமுதாயக் கூடம் உள்ளது. தற்போது அனைத்து சாதி மக்களுக்கும் பொதுவான சமுதாயக்கூடம் ஒன்று அரசின் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் தங்களது வருமானம் பாதிக்கப்படும் என்று ஆதிக்கசாதியினர் இவ்வன்கொடுமைகளை செய்திருக்கலாம்” என இது  குறித்து விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவின் டி.எஸ்.பி கருப்பையா மாவட்ட கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பொருளாதாரம் என்பதைத் தாண்டி பட்டியலின மக்களும், தாங்களும் ஒரே இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதா என்ற சாதித் தீண்டாமை கண்ணோட்டமே முக்கியமான காரணமாக இருக்க முடியும்.

படிக்க: மதுரை: தலித்துகள் மீதான ஆதிக்க சாதியினரின் கொலைவெறித் தாக்குதல்!

போலீசோ, சாப்டூர் காவல்நிலையத்தில் வித்யா கொடுத்த புகாரின் மீது எப்.ஐ.ஆர் பதிந்து நடவடிக்கை எடுக்காமல், வெறும் மனு ரசீதை மட்டும் கொடுத்துவிட்டு இருதரப்பையும் கூட்டி சமாதானம் பேசியுள்ளது.

இதேபோல் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், அச்சம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் பட்டியலின மாணவர்கள் அன்புதாஸ், சக்திவேல் இருவரும் அங்குள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர்.

மார்ச் 21 அன்று  மாணவர்கள் இருவரும் அருகில் உள்ள ஆலம்பட்டிக்கு சென்று அங்குள்ள ஆதிக்க சாதியைச் சார்ந்த சந்தோஷ் என்பவரது கடையில் மிட்டாய் வாங்கியுள்ளனர். மாணவர்கள் இருவரையும் மிட்டாய் திருடியதாகக் குற்றம் சுமத்தி, சந்தோஷும் அவரது உறவினர்களும் தூணில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதன் பின்னர் மாணவர் சக்திவேலின் உறவினர் ஒருவர், தாக்கியவர்களிடம் சமாதானம் பேசி, கட்டி வைத்து தாக்கப்பட்ட மாணவர்களை விடுவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் நல விடுதியின் காப்பாளர் விஜயன்,  மாணவர்கள் இருவரையும் விடுதியை விட்டு அனுப்பியுள்ளார்.

இச்செய்தி ஊடகங்களில் வெளியானதால், குற்றவாளி சந்தோஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குழந்தைகள் மீதான வன்முறை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்படவில்லை. ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தச் செய்திகளும் ஏப்ரல் 3 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக கள ஆய்வு மேற்கோண்டபோதுதான் தெரிய வந்துள்ளது.

படிக்க: மலத்தைவிடக் கொடியது சாதிய அரசு!

தொடர்ந்து நடைபெறும் இத்தகைய தீண்டாமை வன்கொடுமைக் குற்றங்களில் அரிதினும் அரிதாகவே குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதிகார வர்க்கமே சாதிவெறியர்களை பாதுகாக்கும் இடமாகவும் உள்ளது. வேங்கைவயல் சம்பவம் சமீபத்திய உதாரணம். இவையனைத்தும் ஆதிக்கசாதி வெறியர்களுக்கு மேலும் உரமேற்றுகிறது.

ஒரு பக்கம் தமிழ்நாடு, வடமாநிலங்களை விட முன்னேறியுள்ளது என்று சொல்லிக் கொண்டாலும், சாதி ஒடுக்குமுறைகளில் முன்னணியிலேயே உள்ளது என்பது சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டிய தேவையை ஆழமாக உணர்த்துகிறது.

இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக போராடும் அதேசமயம், சாதி ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்தும் பார்ப்பனிய வர்ணாஸ்ரமக் கட்டமைப்பின் யோக்கியதையை உழைக்கும் மக்களிடம் தொடர்ச்சியாக, இயக்கமாக அம்பலப்படுத்த வேண்டும். அதோடு சாதி ஏற்றத்தாழ்வைப் பாதுகாக்கும் இந்த அரசுக்கட்டமைப்பை அகற்றுவதே நமது இலக்காக இருக்க வேண்டும்.

இனியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க