“ஸ்டிங் ஆப்பரேஷன்”: ஊடக புரோக்கர்களும் ஊடுருவும் பாசிசமும்!

நாம் என்ன சிந்திக்க வேண்டும், எந்தக் கட்சியைப் பற்றி எப்படி கருத வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும், எந்த கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த ஊடக புரோக்கர்கள் முடிவு செய்கிறார்கள் என்பதுதான் கொடுமை.

டந்தாண்டு கே.டி.ராகவன் காணொளியை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், “மார்ஸ் தமிழ்நாடு” என்ற தனது யூடியூப் சானலில், “ஸ்டிங் ஆப்பரேஷன்” என்ற பெயரில் பல காணொளிகளை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட யூடியூபர்கள் பணம், சாராயம், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு 2024 தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவும் எதிராகவும் வேலைசெய்வதற்காக பேரம் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அந்த காணொளிகளில், நியூஸ் கிளிட்ஸ் ஐயப்பன் ராமசாமி, சத்தியம் தொலைக்காட்சி முக்தார், ஆதன் டிவி மாதேஷ், பேசு தமிழா பேசு ராஜவேல் நாகராஜன், அரசியல் விமர்சகர் என்று சொல்லிகொள்ளும் ரவீந்திரன் துரைசாமி, சங்கி கிஷோர் கே.சுவாமி உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருந்தது பெரும் பேசுபொருளானது.

இது யூடியூப் வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில யூடியூப் சேனல்கள் நேரடியாக மக்களிடம் கருத்து கேட்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த பலரும் பத்திரிகைத்துறை மீது ஏற்பட்ட அதிருப்தியையும் நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக இளைஞர்கள், “இதழியல் துறையின் வெற்றிமாறனாக ஐயப்பனை பார்த்தோம்”, “முக்தார், ராஜவேல் நாகராஜன் போன்றோர் அப்பட்டமாக காசுக்கு மாரடிக்கும் ஆட்கள் என்பது தெரியும், ஆனால்  ஐயப்பன், உமாமகேஸ்வரன் ஆகியோர் இவ்வாறு செய்ததுதான் அதிர்ச்சியாக உள்ளது” போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

தன்னை திராவிட சித்தாந்தம் கொண்டவராகக் காண்பித்து கொள்ளும் ஐயப்பன் ராமசாமி, பிராமண சங்க தலைவரிடம் சமஸ்கிருத மந்திரம் ஒப்புவித்து “நான் ஏன் அர்ச்சகர் ஆகக் கூடாது” என்று கேட்டது; பைக் சாகசம் செய்யும் இளைஞர்களின் நாயகன் டி.டி.எஃப் வாசனை கேள்விகளால் திக்குமுக்காடச் செய்து விரட்டியது; பகாசுரன் பட இயக்குனர் மோகன்ஜி, மதுவந்தி, அமர் பிரசாத் ரெட்டி போன்றோரை அம்பலபடுத்தியது – போன்ற நேர்காணல்கள் மூலம் இணையத்திலும் இளைஞர்களும் மத்தியிலும் பிரபலமடைந்தவர்.

படிக்க : ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி: தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது!

தன்னிடம் பேட்டி காண வருபவர்கள கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்பவராகவும், அவர்களது வாயாலேயே அவர்களை அம்பலப்படுத்திக் காட்டுபவராகவும் அறியப்பட்டவர் சத்தியம் தொலைக்காட்சி முக்தார். ஐயப்பன் ராமசாமியைப் போல, முக்தார் நடுத்தர வயதினர் மத்தியில் செல்வாக்கு கொண்டவராக விளங்கினார்.

மதனின் காணொளியில் சிக்கியவர்களில் தங்களை முற்போக்காளர்களாக காட்டிகொண்டவர்கள் ஒரு பிரிவினர் என்றால், ஏற்கெனவே “சங்கிகள்” “கூலிக்கு மாரடிப்பவர்கள்” என்று அம்பலப்பட்டு போனவர்கள் மற்றொரு பிரிவினர். கிஷோர் கே.சாமி, ராஜவேல் நாகராஜன், ரவீந்திரன் துரைசாமி, மாதேஷ் ஆகியோர் இந்த வகையினர்.

இந்த இருபிரிவினருக்கு இடையிலும் கருத்தியில் வேறுபாடுகளெல்லாம் ஒன்றும் கிடையாது, கூலிக்கு மாரடிப்பதில் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதை மதனின் ஸ்டிங் ஆபரேஷன் அம்பலப்படுத்தியிருக்கிறது.

சங்கிகளை தனது வாதத் திறனால் வாயடைக்க வைப்பவர் என்று பார்க்கப்பட்ட ஐயப்பனை அவ்விடத்திற்கு அழைத்து வந்ததே சங்கி கிஷோர் கே.சாமி என்பது அம்பலமாகியிருக்கிறது. மிகவும் பிரபலமடைந்த ஐயப்பன் – அமர் பிரசாத் ரெட்டியுடனான நேர்காணலில், ஐயப்பனுக்கு கேள்வி எழுதித் தந்ததும், அமர் பிரசாத் ரெட்டிக்கு பதில் எழுதித் தந்ததும் கிஷோர்.கே.சாமிதான் என்று அவர்களே சொல்லி சிரித்துகொள்ளும் காட்சி மதனின் காணொளிகளில் இடம்பெற்றிருந்தது.

இவர்கள் அனைவருமே பணம் வாங்கிகொண்டு வெவ்வேறு கட்சிகளுக்கு மறைமுகமாக வேலை செய்தவர்கள். அதன் தொடர்ச்சியாகவே தற்போது இவ்விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.

மதன் வெளியிட்ட காணொளியில், ஐயப்பன் ராமசாமி பேசுகையில் கடந்த தேர்தலில் அவரும் நியூஸ் க்ளிட்ஸ் சேனலும் அ.தி.மு.க-விற்கு வேலை செய்துள்ளது என்பதை போட்டு உடைத்தார். தற்போதும் பணம் கொடுத்து குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சொன்னதற்கு அவர் ஒப்புகொண்டார்.

அதேபோல ஆதன் டிவி மாதேஷ், “வாழ்க்கையில் ஒரு நிலையை அடைய 2024 தேர்தலை நம்பிதான் நான் இருக்கிறேன்” என்று வெளிப்படையாகக் கூறுகிறார். மேலும், தேர்தல் சமயத்தில் சேனலோடு சேர்ந்து 4 கட்சிகளிடம் 1 கோடியே 20 லட்சம் பெற்று வேலை செய்ததாகவும் கூறுகிறார்.

சாதிவெறியன் ரவீந்திரன் துரைசாமி மோதிரத்தை வங்கி கொண்டு, வேலை செய்ய ஒப்புகொண்டதோடு தனக்கு யாரோடெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை பட்டியலிடுகிறார். மேலும், முக்தார் குடித்துவிட்டு கொஞ்சமும் பத்திரிகை அறமின்றி வக்கிரத்தை கக்கினார்.

இந்த யோக்கியவான்களின் குட்டுகளை மதனின் காணொளிகள் அம்பலப்படுத்திய நிலையில், எல்லாரும் வெளியேவந்து தனித்தனி விளக்கம் தந்தனர்.

ஐயப்பன் ராமசாமி அவர்களின் சூழ்ச்சியை புரிந்துகொண்டு தான் ஏதோ அவர்களை ஸ்டிங் செய்தது போல நாடகமாடினார். கடைசியில், உண்மையை மறைக்க முடியாமல் மாட்டிக்கொண்டார். மாதேஷ் “எனக்கு 2 வயது குழந்தை உள்ளது, அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்” என்று நீலிக்கண்ணீர் வடித்தார்.

ஆனால், ‘நேர்மையாளர்களான’ ரவீந்திரன் துரைசாமியும் ராஜவேல் நாகராஜனும் தங்களது அம்மணத்தை மறைக்க முயற்சிக்காமல், நேரடியாக ஒப்புக் கொண்டனர். “அந்த காணொளியில் இருந்தது நான்தான், யார் பணம் கொடுத்தாலும் செய்து தருவேன், இனிமேலும் செய்வேன்” என்கிறார் ரவீந்திரன் துரைசாமி. ராஜவேல் நாகராஜன் ஒரு படி மேலே சென்று, “யூடியூபர்களுக்கு  குடும்பங்கள் இல்லையா? அவர்களுக்கு செலவு இல்லையா?” என்று பேசுகிறார்.

இவர்கள் ஒருபுறம் பேசிகொண்டிருக்க சவுக்கு சங்கர், சாட்டை துரைமுருகன் போன்றோர் சரக்கு அடிப்பது, உணவகத்தில் சாப்பிடுவது எல்லாம் ஸ்டிங் ஆப்பரேஷனா? என்று ஒன்றுமே நடக்காதது போல் பூசி மெழுக முயல்கின்றனர்.

“இது மற்ற யூடியூபர்களுக்கு எதிராக மதனின் பழி வாங்கும் சதி”, “மதன் ஒரு தி.மு.க. பினாமி”, “அண்ணாமலை மீது அதிருப்தியில் இருக்கும் பாஜக-வினரால் நிதியுதவி அளிக்கப்பட்டு செயல்படுகிறார்” – என்றும் பலவாறாக பேசப்படுகிறது. ரெட் பிக்ஸ் சேனலில் அமர்ந்துகொண்டு மதனின் வரலாற்றை மணிக்கணக்காக பேசுகிறார் சவுக்கு சங்கர்.

வடிவேலு நகைச்சுவை காட்சியில் வருவதைப் போல, “என்னய்யா பண்ணிட்டான் என் கட்சிக்காரன்” என்பதுதான் அவர்களது பேச்சின் சாரம்சமாக இருந்தது. மதனின் அருகதையை கேள்விக்கு உட்படுத்துவதன் மூலம் மாட்டிக் கொண்ட அயோக்கியர்களை காப்பற்றும் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

மதன் ரவிச்சந்திரன் அயோக்கியனாகவே இருக்கட்டும் அவன் வெளியிட்ட காணொளிகள் அம்பலப்படுத்திய செய்தி என்ன என்பதுதான் கேள்வி.

எல்லா தொலைக்காட்சி ஊடகங்களுமே குறிப்பிட்ட கட்சிகளது ஊடகங்களாகவும் கார்ப்பரேட் முதலாளிகளுடையதாகவும் இருப்பதால், தங்களுடைய பிரச்சினைகளைப் பேசாமல், அவை தங்கள்மீது ஒருசார்பான கருத்தை திணிப்பவை என்று மக்களுக்கு ஏற்பட்ட பார்வையானது, அவர்களை யூடியூப் சானல்கள் மீதும், யூடியூபர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளச் செய்தன. மதன் ரவிச்சந்திரனின் காணொளி, அந்த நம்பிக்கையையும் சுக்குநூறாக்கியுள்ளது.

ஒரு பக்கம் மக்களுக்காக பேச வேண்டும் என்று கருதக்கூடிய ஊடகவியலாளர்களுக்கு ஒரு களமாக இருக்கும் சமூக ஊடகங்கள், காசு வாங்கிக் கொண்டு யாருக்காகவும் எப்படி வேண்டுமனாலும் பேசும் ஊடக புரோக்கர்களுக்கும் களமாக இருக்கிறது. ஆல்ட் நியூஸ் ஜுபைர், சித்திக் கப்பன் போன்ற பத்திரிகையாளர்கள் உள்ள துறையில்தான் இவர்களும் தங்களை பத்திரிகையாளர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.

நாம் என்ன சிந்திக்க வேண்டும், எந்தக் கட்சியைப் பற்றி எப்படி கருத வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும், எந்த கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த ஊடக புரோக்கர்கள் முடிவு செய்கிறார்கள் என்பதுதான் கொடுமை.

ஸ்டெர்லைட் விசயத்திலும் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கிலும் அப்பட்டமாக ஆளும் வர்க்கத்திற்கு துணை போகும் வகையில் பேசிய சவுக்கு சங்கரின் பேச்சுகள் குறிப்பிட்ட பிரிவினரால் ஆதரிக்கப்பட்டன. இப்போது, அவர் பணம் வாங்கிகொண்டு எடப்பாடிக்கு பழனிசாமிக்கு சொம்படித்துகொண்டு தி.மு.க-வை தாக்குவதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருக்கிறார். தி.மு.க.வின் மேலுள்ள அதிருப்தியில் சவுக்கு சங்கரின் பேச்சை பரிசீலிக்க இப்போதும் ஒரு கூட்டம் இருக்கிறது. காரணம் சவுக்கு போன்றவர்கள் ‘நடுநிலை’ என்ற போர்வையில் ஒளிந்துகொள்வதுதான்.

படிக்க : புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2023 | அச்சு இதழ்

தாமரை, சாணக்யா, மாரிதாஸ் பதில்கள் போன்ற சானல்கள் வெளிப்படை சங்கிகளாக உள்ளன. ‘நடுநிலை’ என்ற போர்வையில் செயல்படும் இதுபோன்ற ஊடக புரோக்கர்கள்தான், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலின் நிழல் கோயல்பல்சுகளாக செயல்படுகின்றனர் என்பது நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய ஆபத்தான விசயம்.

மாட்டுக்கறி தமிழனின் உணவு இல்லை, பிபிசி ஆவணப்படம் மூலம் பிரிட்டிஷ் இன்னும் நம்மை ஆள நினைக்கிறது போன்ற சங்கி கருத்துக்களை பரப்பும் ராஜவேல் நாகராஜன் “பேசு தமிழா பேசு”, “ஹலோ தமிழா”, “அக்னி சிறகே”, “எல்.கே.ஜி”, “திருவருள் டிவி”, “லவ் டாக்ஸ்” உள்ளிட்டு ஐந்துக்கும் மேற்பட்ட சேனல்களை வைத்துள்ளார். இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிசக் கருத்துக்களை பல்வேறு வடிவங்களில் தமிழ்நாட்டு மக்களிடையே கொண்டுசெல்லும் கருவிகளாக உள்ளன.

ஓரளவு பா.ஜ.க. மீது விமர்சன பார்வை கொண்டவராக அறியப்பட்ட மதன் கௌரி பிபிசி ஆவணப்படத்திற்கு எதிராக பேசுகிறார். அறிவியலை எளிய முறையில் இளைஞர்களை கவரும் வகையில் அறியத்தந்த எல்.எம்.இ.எஸ் சாணல், புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக காணொளி போட்டது. ஜீவா டுடே, பரிதாபங்கள் ஆகிய சேனல்கள் தமிழினவெறியை கிளப்பிவிடுகின்றன.

நம்மால் எளிதில் உணர்ந்துகொள்ள முடியாத ஒரு மறைமுகப் போர் நம் சிந்தையின் மீது தொடுக்கப்பட்டுள்ளது. எதிரி யாரென்றே தெரியாமல், அவனுக்கு நம்மை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அச்சு செய்தித்தாள்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என எதில் பரப்பப்படுகின்ற கருத்தாக இருந்தாலும் சரி, யார் பரப்புரை செய்கின்ற கருத்தாக இருந்தாலும் சரி, அதை நடைமுறையில் உரசிப் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும். ஒரு ஊடகம் சொல்கின்ற கருத்தை விட, நடைமுறையில் மக்களிடம் வேலை செய்கின்ற கட்சிகள், அமைப்புகள் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும். அந்த அமைப்புகள் முன்வைக்கும் அரசியலில் இருந்து அவர்களது கருத்தைப் பரிசீலிக்க வேண்டும். இவைதான் உண்மையை அறிந்துகொள்வதற்கான வழியாக இருக்க முடியும்.


துலிபா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க