சங்கியுடன் ஒரு பயணம்

சங்கிகள் எல்லோரிடமும் எல்லாவற்றையும் பேசுவதில்லை. ஏதாவது ஒன்றில் எதையாவது பேசி, அதில் மக்களிடம் ஏதாவது அதிருப்தி இருப்பின் அதன் மீதேறி அதன் மூலம் மோடி செய்வது எல்லாம் சரி என்று நிறுவுகிறார்கள்.

துரைக்குச் செல்ல வேண்டும். குருவாயூர் ரயிலைப்பிடிக்க வேண்டும். முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு காத்திருப்புப் பட்டியலிலேயே காத்துக்கிடந்து காலாவதியாகிவிட்டது. ஏறத்தாழ முக்கால் மணி நேரம் காத்திருப்புக்குப்பின்னர் ரயில் வந்தது. முன்பு ஒரு பெட்டி, பின்னால் ஒரு பெட்டி என மொத்தமே முன்பதிவற்றப் பெட்டிகள் இரண்டுதான். முன்பதிவில்லாத பெட்டியில் அடித்துப் பிடித்துக்கொண்டு ஏறினேன். காவி வேட்டியுடன் இடம் இல்லாமல் அலைந்து திரிந்து கொண்டிருந்த முதியவர் ஒருவருக்கு எனது அருகிலேயே இடம் பிடித்துத்தந்தேன்.

ரயில் பயணங்களில் எப்போதும் அருகில் இருப்பவர்களுடன் உரையாடுவது வழக்கம் என்பதால் பெரியவரிடம் விசாரிக்க ஆரம்பித்தேன். “ நாகர் கோயில்ல இருந்து வேலையா வந்தேன். எம்.எல்.ஏ ஹாஸ்டல்ல பத்து நாள் தங்கி இருந்தேன். காந்தி தெரியுமா? கால்ல செருப்பு போடாம நடப்பாரு. ரொம்ப தங்கமான மனுசன். பெரிய பணக்காரரு. கல்யாணமே பண்ணல, யாரு வந்து கேட்டாலும் எம்.எல்.ஏ ஹாஸ்டல் சாவிய தந்துடுவாரு” என்று புராணம் பாட ஆரம்பித்தார்.

“அடுத்த மொற காங்கிரஸ் ஜெயிக்குமா?” என்றேன்.

“ராகுல்காந்திக்கு நாக்குல சனி, ஆமா, மோடிங்குறது வட இந்தியாவுல தலித் சாதி, தலித்துங்குள தப்பா பேசுனான், அதான் பதவிய கோர்ட் புடுங்கிடுச்சு, அவன்கிட்ட 50 லட்சம் கோடி சொத்து இருக்கு , உருப்பட மாட்டான்” என்று கொந்தளிக்க ஆரம்பித்தார்.

“மோடிங்குறது சாதியா யாரு சொன்னா, அப்படியெல்லாம் இல்லையே, ஆதாரம் இருந்தா கொடுங்க” என்றேன்.

ஆதாரம் கேட்டதும் பெரிசு பொங்கினார் “நான் சொல்றது உண்மைதான் உண்மைதான் ” என்றார்.

“நரேந்திர மோடி, நீரவ் மோடி, லலித் மோடி எல்லாம் ஒரே ஜாதியா என்ன? அப்படின்னா வி.பி சிங்கும் ஹர்பஜன் சிங்கும் ஒரே ஜாதியா? எல்லாம் தெரிஞ்ச மாரி சும்மா வாய்க்கு வந்தத எல்லாம் பேசக்கூடாது. மோடிங்கற பேரை பார்சி கூட பயன்படுத்துறாங்க தெரியுமா” என்றேன்.

முனகிக் கொண்டே அமைதியானார்.


படிக்க: இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிகப்பு அலை பாடல் | வீடியோ


தாம்பரத்தில் ஒருவர் தன் மகனுடன் ஏறினார். திருவெற்றியூரில் இருந்து தினமும் தடாவுக்கு வேலைக்கு செல்கிறார். கொஞ்ச நேரத்திலேயே மோடியையும் அதானியையும் கார்ப்பரேட்டுகளையும் வெளுத்து வாங்க ஆரம்பித்தார். சங்கியோ கண்ணை மூடிக்கொண்டு காதைத்திறந்து கொண்டு தூங்கி’க் கொண்டு இருந்தது. நாங்கள் இருவரும் மாறி மாறி மோடி – அமித்ஷா – அம்பானி – அதானியை வாரிக்கொண்டு இருந்தோம். தாம்பரத்தில் ஏறியவர் திண்டிவனத்தில் இறங்கினார்.

எனக்கு எதிர் இருக்கையில் இந்தவரிடம் என்ன செய்கிறீர்கள் என்று விசாரிக்க ஆரம்பித்தேன். அவர் மாதவரத்தில் இருக்கிறார். திருப்பெரும்புதூரில் உள்ள கல்லூரியில் பேருந்து ஓட்டுனராக 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். விருது நகரில் இறங்க வேண்டியவர். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. காவியிடம் இருந்த தினமலர் நாளிதழை வாங்கினார். போபர்ஸ் ஊழலை வெளியே கொண்டுவந்தவருக்கு சிலை என்று தலைப்பிடப்பட்ட செய்தியை என்னிடம் காட்டி,
“ ஏன் சமூக நீதிக்காவலர்னு வி.பி. சிங்ன்னு போட்டா என்ன கேடு இவனுக்கு, அட்லீஸ்ட் முன்னாள் பாரதப்பிரதமர்ன்னு போட வேண்டியதுதானே” என்றார்.

“பத்திரிக்கையில இடம் வேணாமா? ஒவ்வொருத்தரு பேரையும் முன்னாள் பிரதமர்ன்னு எழுதிக்கிட்டு போவமுடியுமா” சங்கி பதிலளித்தது.

“லால்பகதூர் சாஸ்திரி எத்தன வருசம் பிரதமரா இருந்தாரு? அவருக்கு மட்டும் முன்னாள் பிரதமர்ன்னு போடறான். இவனுக்கெல்லாம் திமிரு” என்றார்.

சங்கிக்கோ கோபம் கொப்பளிக்க “அவரு சொதந்திரப் போராட்ட வீரரு” என்றது.
“வி.பி. சிங் சமூக நீதிப்போராட்ட வீரர் தெரியுமா?” என்றார்.

“ யாரத்தான் நாட்டுக்காகப் போராடுனவருன்னு ஒத்துக்குவீங்க, வாஜ்பாய்தான் விடுதலைக்குப் போராடுனாரா” என்றேன்.

“வாஜ்பாயை நான் சொதந்திரப் போராட்ட வீரர்னு நான் சொன்னனா” என்று சங்கி குழறியது.

“இந்த ஸ்டாலின் பாருங்க 12 மணி நேர வேலைன்னு ஆக்கிட்டார்” என்று பேச்சை மாற்றியது சங்கி.

“ஸ்டாலின் செஞ்சது தப்புதான், தி.மு.க ஒன்னும் தமிழ்நாட்டுக்கு அத்தாரிட்டி இல்ல. தமிழ்நாட்டுக்கு அத்தாரிட்டி தமிழ்நாடுதான், ஏன் 12 மணி நேர வேலையை மோடி எதிர்க்கல” என்றேன்.

சுமார் அரை மணி நேரம் சங்கி எதுவும் பேசவில்லை. விருதுநகருக்கு போக வேண்டிய ஓட்டுநரோ , சதாசிவம் முதல் லோயா, ரஞ்சன் கோகய் வரை கிழித்து நார் நாராகத் தொங்கவிட்டார்.

இந்தித் திணிப்புப் பற்றி நான் பேசத்துவங்கினேன். உடனே சங்கி மீண்டும் பேசத்துவங்கியது “நம்மள படிக்க வேணாம்னுட்டு எல்லாம் அவனவன் பசங்கள இந்தி படிக்க வச்சுச்சு முன்னேறிட்டான்”

“இவரு என்ன உலகம் தெரியாம இருக்காரு, இந்தி படிச்சா வேலை கெடைக்குமா? அப்புறம் ஏன் இங்க வேலைக்கு வராங்க” என்று அந்த இருக்கையில் இருந்த 4 வட இந்தியர்களை காட்டினார்.

“இந்த தி.மு.க காரனெல்லாம் அவன் பசங்கள படிக்க வெச்சுட்டான், நாம படிக்க முடியல” என்றது சங்கி.

“அய்யா இந்தி வேணும்னா படிங்க யாரு தடுத்தா? திணிக்காதீங்கன்னு சொல்றோம். சொல்றது புரியலையா” என்றார்.

“உங்களுக்கு தமிழ்ல்ல 123 தெரியுமா, தெரியாதுல்ல, அப்புறம் பேசறீங்க, இந்திக்காரங்கனுக்கு புரியணும்னு இங்க இந்தியில எழுதி போட்டுருக்கு, சும்மா தமிழ் தமிழ்ன்னு பேசி முன்னேற உடமாட்டீங்க” என்றது.

“நீங்களே போதும்யா தமிழ அழிச்சுடுவீங்க” என்றார் அவர்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒரு நடுத்தரவயது பெண் “இச், இச்” என்று சொல்லிக்கொண்டு வந்தார். நாம் பேசுவது பிடிக்கவில்லை என்று நினைத்திருந்தேன்.

“நீங்களே போதும்யா தமிழ அழிச்சுடுவீங்க” என்ற வாக்கியம் அவரை அதிகம் பாதித்துவிட்டது போல!

அந்தப் பெண் “ என்ன அய்யா ரொம்ப பேசறீங்க, எங்களுக்கு எது வேணுமோ அப்படி பேசுறோம், உங்களுக்கு என்ன பிரச்சின, தமிழ்ல 123ன்னு எழுதத்தெரியாதுன்னா தமிழன் இல்லைன்னு ஆயிருமா? அப்ப இருந்து பாக்குறேன் தமிழுக்கு எதிரா பேசிட்டே இருக்கீங்க ? திருச்சிக்கு டிக்கெட் வேணும்னு தமிழ்ல்ல தான கேக்குறோம். உங்க மாதிரி 2 பேரு இருந்தா போதும் தமிழை சீக்கிரம் அழிச்சிடுவீங்க, எதுக்கு ரயில்ல இந்தியில எழுதியிருக்கான், இது மாதிரி வட இந்தியாவுல தமிழ்ல எழுதுவானா ? அயோக்கியப்பசங்க” என்ற படி வெடித்தார்.

சங்கி மீண்டும் பிளைட் மோடுக்கு சென்றது , கண்டிப்பாக நாகர்கோயில் வரை சங்கி நார்மல் மோடுக்கு வராமல் அங்கிருப்பவர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

சங்கிகள் எல்லோரிடமும் எல்லாவற்றையும் பேசுவதில்லை. ஏதாவது ஒன்றில் எதையாவது பேசி, அதில் மக்களிடம் ஏதாவது அதிருப்தி இருப்பின் அதன் மீதேறி அதன் மூலம் மோடி செய்வது எல்லாம் சரி என்று நிறுவுகிறார்கள். ஆனால் அந்த மோடி வித்தைகள் எல்லாம் இங்கு பலிக்குமா? கஷ்டம்தான்.

இது தமிழ்நாடு!

வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!

மருது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க