23.05.2023

விஷசாராய பலிகள்: திமுக அரசே முதல் குற்றவாளி!
மூடு டாஸ்மாக்கை!

அன்பார்ந்த உழைக்க்கும் மக்களே!

சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்  கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர்களின் எண்ணிக்கை 25-ஐ தொட்டுவிட்டது. இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்  கொடுத்து அந்த குடும்பங்களின்  ஒப்பாரியை முடிவுக்கு கொண்டு வந்தது திமுக அரசு. தமிழ்நாட்டின் டிஜிபி ஆனால் சைலேந்திரபாபு, இது கள்ளச்சாராயம் இல்லை, மெத்தனாலை திருட்டுத்தனமாகக் கொண்டு வந்து விற்றுள்ளார்கள் என்று சொல்கிறார்.கள்ளச்சாராய மரணங்களுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்றால் எதற்காக போலீஸ் காரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்? எதற்காக கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்?

டாஸ்மாக்கை ஏன் மூடவில்லை என்று திமுக அரசை கேட்டால்,  கடந்த 2016 ஆம் ஆண்டு நாங்கள் கொடுத்த வாக்குறுதி அது; 2021 ஆம் ஆண்டு தேர்தலில் டாஸ்மாக்கை மூடுவோம் என்று வாக்குறுதி கொடுக்கவில்லை என்கிறார்கள். இப்படி எல்லாம் தங்களுடைய தவறை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது சமூக நீதி’ திமுக அரசு.

டாஸ்மாக்கால் பாதிக்கப்படுவோர் யார்? கூலி வேலை செய்யும் மக்கள் மட்டுமல்ல; கல்லூரி, பள்ளி செல்லும் மாணவர்களும் தான்.

ஏழை எளிய மக்களின் உழைப்பையும் உயிரையும் பறித்து மனித வளத்தையும் மொத்த சமூகத்தையும் முடமாக்கி அதில் கிடைக்கும்  வருமானம் தான் தமிழ்நாட்டின் பெருமையா?

கீழடி பெருமை பேசும் தமிழ்நாட்டில் தான் ஆண்டுக்கு ரூபாய்  400 கோடி டாஸ்மாக்கில் வருமானம் வருகிறது! அடடா இதை எந்த கல்வெட்டில் எழுதுவது?

டாஸ்மாக்கை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் ஆறாக பெருகும் என்கிறார்கள் . கள்ளச்சாராயம், நல்லச்சாராயம் ,கஞ்சா ,விஷச்சாராயம் , சந்துக்கடை ,பொந்துக் கடை  எல்லாமே போலீசுக்கு தெரியாமல் தான் நடக்கிறதா என்ன?

போலீசின் ஒத்துழைப்போடு தான் தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம், டாஸ்மாக், கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதை பொருள்களும் மாறாக ஓடுகின்றனவே!

ஒரு நாளைக்கு பத்து, பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளி டாஸ்மாக் கடையில் சுருண்டு கிடக்கிறான். அவனால் தனது உரிமைகளைப் பற்றி பேச முடியாது. வேலை இன்றி தவிக்கும் இளைஞர்களும் கல்வி உரிமை மறுக்கப்பட்ட  மாணவர்களும் சாராய போதையில் மிதக்கும் போது எப்படி சமூக மாற்றத்தை பற்றி சிந்திப்பார்கள்?

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகளின்  சுரண்டலுக்கு எதிராக யாரும் சிந்திக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஆண் –  பெண் பேதமின்றி அத்தனை பேரும் நுகர்வு கலாச்சாரத்திலும் சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களிலும் சிக்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

மொத்த சமூகத்தையே சாராய போதையில் சீரழித்து விட்டு பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவேன் என்பதும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பதும் தேர்தல் அரசியலுக்கு பயன்படுமே தவிர எவ்வகையிலும் பெண்களையோ அல்லது இந்த சமூகத்தையோ உயர்த்துவதற்கு ஒருபோதும் பயன்படாது.

மூடு டாஸ்மாக் என்பது டாஸ்மாக் கடைகளை மூடுவது என்பது மட்டுமல்ல ; கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட அனைத்து விதமான போதை பொருட்களையும் ஒழித்துக் கட்டுவது தான்.

கோன் எவ்வழியோ குடிகள் அவ்வழி என்பது போல   அரசே டாஸ்மாக் கடைகளை நடத்தும் போது குடிமக்களில் சிலர் கஞ்சாவையும்  சாராயத்தையும் விற்று வருகின்றனர். ஆக கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும் இந்த அரசுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பதே உண்மை.

சாராயத்தை விற்பதற்கு ஒரு துறையை உருவாக்கி அதற்கு ஒரு அமைச்சரை உருவாக்கி இருக்கும் இந்த அரசிடம்  டாஸ்மாக்கை மூடுங்கள் என்று கோரிக்கை வைப்பதும் கெஞ்சுவதும் ஒருபோதும் பயனில்லை.

ஆகவே டாஸ்மாக் ஆகட்டும்,  கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களுகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் மக்களாகிய நாம் அமைப்பாக அணி திரண்டு போராட வேண்டும்!

மூடு டாஸ்மாக்கை!

தோழமையுடன்
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு- புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க