ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!
சுற்றிவளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!
மாநாட்டிற்கான தீர்மானங்கள்
தீர்மானம் 6:
பிரிட்டிஷ் காலனியாதிக்க காலத்தில் உருவாக்கப்பட்டு, இன்னமும் இன்றைய போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் ஒரு அங்கமாக இருக்கும், ‘பொம்மை’ பதவி என்று கூறப்படும் ஆளுநர் பதவியையே, ஆர்.எஸ்.எஸ். பாசிசக் கும்பல் தனது ஐந்தாம் படையாகப் பயன்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் எனப்படும் ஒன்றிய அரசின் கங்காணி பதவி ஒழிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை கொண்டிருப்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் இழிவுபடுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். மேலும், அவர் பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நடந்த விவாதத்தின் மூலம் வெளிவந்துள்ளது. எனவே, பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட ரவி மீது வழக்கு செய்து பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று இந்த மாநாடு கோருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்த மாநாடு வரவேற்கிறது. நாகாலாந்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழ்நாட்டை விட்டே விரட்டியடிப்பதை நோக்கி அடுத்த கட்டப் போராட்டங்களுக்கு தயாராக வேண்டுமென தமிழக மக்களுக்கு இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
தீர்மானம் 7:
தமிழ்நாட்டில் உள்ள பல நூறு ஆதிக்கச் சாதி அமைப்புகளை வளைத்தும், புதிதாக சாதிச் சங்கங்களை உருவாக்கியும், தனது ஏஜெண்டுகள் மூலம் தலித் அமைப்புகளைப் பிளவுபடுத்தி, அவற்றின் ஒரு பிரிவினரை பாசிசப் படைக்குள் அணிசேர்த்தும் வருகிறது, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிசக் கும்பல். தலித் கட்சித் தலைவர்களும், தலித் மக்களுக்கு உண்மையில் அரணாக இருக்கும் பிரமுகர்களும், பாசிசக் கும்பலின் சதி நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களும் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஆண்ட சாதி பெருமை பேசுவதும், இனத்தூய்மை பேசுவதும் இதன் வழியே மேற்கொள்ளப்படுகிறது. பா.ம.க. போன்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டக் கட்சிகளில் ஊடுருவி, அதில் தனது பாசிச அடியாட்களை உருவாக்கி வருகிறது.
அதன் விளைவாகவே, அருந்ததியினருக்கு எதிராக சாதிவெறிப் பிரச்சாரங்களை சங்கி கும்பலும் சீமான் போன்ற கோடாரிக் காம்புகளும் மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய கோடாரிக் காம்புகளை அடையாளம் கண்டு தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என இந்த மாநாடு கோருகிறது.
தீர்மானம் 8:
சாதி-மதவெறி அமைப்புகளைக் கொண்டு, ஏகாதிபத்திய எதிர்ப்பு – தேச விடுதலைப் போராட்ட வீரர்களை சாதித் தலைவர்களாகவும் இந்து தேசியத்திற்காகப் போராடியவர்களாகவும் திரித்துப் புரட்டி வருகிறது ஆர்.எஸ்.எஸ். பாசிசக் கும்பல். ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்ட மரபை இந்து மரபாக, இஸ்லாமிய எதிர்ப்பு மரபாகத் திரித்துப் புரட்டி தனது பாசிச வலையை விரித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். கம்யூனிஸ்டுகள், தலித்துகள், இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே உண்மையான விடுதலைப் போராட்ட வீரர்களை இருட்டடிப்புச் செய்து வருகிறது. பாசிசத்திற்கு எதிராகப் போராடிவரும் உழைக்கும் மக்கள், காலனியாதிக்கத்துக்கு எதிரான விடுதலைப் போராட்ட மரபை, பாசிச எதிர்ப்புப் போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.
பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, வரலாறுகளை அழித்து இந்து-இந்தி-இந்தியா என்ற சித்தாந்தத்தை திணிப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் இந்து ராஷ்டிரத்தை கட்டமைத்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் பல்வேறு தேசிய இனங்களும், தேசிய இனச் சிறுபான்மையினரும் தத்தமது மண்ணில் நிலவிவரும் பார்ப்பன எதிர்ப்பு மரபுகளை பாசிசத்திற்கெதிராக உயர்த்திப் பிடிக்க வேண்டும் என இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 9:
மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்டு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற ராமநவமி ஊர்வலங்களை இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கலவர நாளாக அறிவித்துள்ளது காவி பாசிசக் கும்பல். அனைத்து இந்துப் பண்டிகைகளையும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல் நாளாகவும், இந்து மதவெறியை தூபம்போட்டு வளர்க்கும் நாளாகவும் மாற்ற முனையும் பாசிசக் கும்பலின் தாக்குதல்களை முறியடித்து, சிறுபான்மை மக்களுக்கு அரணாக நிற்க வேண்டிய கடமை புரட்சிகர-ஜனநாயக சக்திகளுக்கு உள்ளது என்று இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.
தீர்மானம் 10:
மல்யுத்த கூட்டமைப்பில் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. தலைவர், கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்த பார்ப்பனப் பொறுக்கி ஹரிபத்மன், இதற்கு முன்பு பத்மா ஷேசாத்ரி போன்ற தனியார் பள்ளிகளில் சிறுமிகளுக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் – என பல்வேறு நிகழ்வுகள் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் ஆசிபெற்ற, பார்ப்பன ஆதிக்க சாதியினர் கோலோச்சும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பெண்களுக்கு எதிரான மையங்களாக விளங்குவதை எடுத்துக் காட்டுகின்றன. தலித், பிற்படுத்த மாணவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு இடங்களில் பார்ப்பன சாதியைச் சேர்ந்த மாணவர்களே இக்கயவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பார்ப்பனர்களுக்கே எதிரானதுதான் பார்ப்பன பாசிசம் என்பதற்கு இது ஓர் சாட்சி. அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் நிர்வாகத்தின் தலையீடில்லாத மாணவர் சங்கங்களை அமைப்பதை சட்டப்பூர்வ நிபந்தனையாக மாற்றுவதற்காக போராடும்போது மட்டுமே இக்கொடுமைகளுக்கு முடிவுகட்ட முடியும்.
