ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!
சுற்றிவளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!
மாநாட்டிற்கான தீர்மானங்கள்
தீர்மானம் 11:
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசின் அனைத்து கல்வி நிலையங்களிலும் வேத மற்றும் பார்ப்பனிய கருத்துக்களைப் பாடமாக கொண்ட கல்விமுறை உடனடியாக ஒழித்துக் கட்டப்பட வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள துணைவேந்தர்கள் ஆளுநரின் கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் ஊதுகுழல்களாக செயல்பட்டு, மாணவர் அமைப்புகளை ஒழித்துக் கட்டுவதை முக்கியமான வேலையாக கொண்டுள்ளனர். ஆகவே, ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆதரவாகச் செயல்படும் அனைத்து துணைவேந்தர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஜனநாயகப்பூர்வமாக மாணவர் அமைப்புகள் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 12:
காந்தி தற்கொலை செய்துகொண்டார் என்றும், திப்பு சுல்தானைக் கொன்றது உரி கவுடா, நஞ்சே கவுடா என்ற இந்து மன்னர்கள் என்றும், மாப்ளா முஸ்லிம் விவசாயிகள் இஸ்லாமியக் குடியரசுக்காக போராடியவர்கள் என்றும், வீரத் தெலுங்கானா போராட்டம் முஸ்லிம் நிஜாம் அரசுக்கு எதிரான இந்து விவசாயிகளின் போராட்டம் என்றும் வரலாற்றுக்கு காவிச் சாயம் பூசும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் முயற்சிகளை அனுமதிப்பது பேரபாயமிக்கதாகும். காவிக் கும்பலின் வரலாற்றுத் திரிபை அம்பலப்படுத்துவதோடு, உண்மையான வரலாற்றின் பக்கங்கள் பார்ப்பனக் கொடுங்கோன்மையின் வரலாறாக, இக்கொடுங்கோன்மைக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்ட வரலாறாக இருந்திருக்கிறது என்பதையும் நாம் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்று இம்மாநாடு புரட்சிகர – ஜனநாயக சக்திகளைக் கோருகிறது.
தீர்மானம் 13:
இந்துராஷ்டிர முன்மாதிரியான உத்தரப் பிரதேசத்தில் யோகி அரசின் பாசிச பயங்கரவாதங்களை தம் தாய்மொழியான போஜ்பூரியில் நையாண்டிப் பாடல்களின் மூலம் அம்பலப்படுத்திவரும் நேஹா சிங் ரத்தோர் என்ற நாட்டுப்புற பாடகியை இம்மாநாடு பாராட்டுகிறது. பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும், “சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற பாடலைப் பாடி, பார்ப்பனியத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் கர்நாடக இசைப் பாடகரான டி,எம். கிருஷ்ணாவை இம்மாநாடு பாராட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்திற்கு எதிராக குமுறிக்கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் குரலை பாடல்களாகப் பாடவும், கவிதைகளாக வடிக்கவும், சித்திரமாகத் தீட்டவும், நாடகங்களாகவும் குறும்படங்கள்-திரைப்படங்களாக காட்சிப்படுத்தவும் முன்வருமாறு நாட்டுப்பற்றுள்ள அனைத்து பாசிச எதிர்ப்புக் கலை-இலக்கியவாதிகளையும் இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.
தீர்மானம் 14:
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை, நீட்-கியூட் நுழைவுத் தேர்வுகள், சூழலியல் தாக்க மதிப்பீட்டு மசோதா, தேசிய கடல் மீன்வள மசோதா, தேசிய நதிநீர் ஆணையம், அணைகள் பாதுகாப்பு மசோதா, இந்திய துறைமுகங்கள் சட்டத் திருத்த மசோதா, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்துகொள்ளும் புதிய விதிகள், ஒரே நாடு – ஒரே ரேஷன் திட்டம், மின்சாரச் சட்டத் திருத்தம் – போன்ற சட்டங்கள் மாநிலங்களின் பெயரளவிலான அதிகாரங்களையும் பறித்து ஒன்றிய அரசின் காலனிகளாக்கி வருகின்றன. இவை, அம்பானி – அதானி போன்ற பார்ப்பன – பனியா – குஜாரத்தி வகையறா கார்ப்பரேட் கும்பலுக்கு மாநிலங்களின் இயற்கை மூலவளங்களையும் மக்களின் உழைப்பையும் சூறையாடக் கொடுக்கும் திட்டங்களாகும் என்று இம்மாநாடு அறிவிக்கிறது. இத்தகைய சட்டங்கள், சட்டத் திருத்தங்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டுமெனவும் இம்மாநாடு ஜனநாயக இயக்கங்களைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 15:
அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டத்திற்கு விசுவாசமாகச் சேவை செய்யும் வகையில் உருவாகியுள்ள அமெரிக்காவின் “குவாட்” ராணுவக் கூட்டணியில் மோடி அரசு இந்தியாவைப் பிணைத்துள்ளது. போர்வெறியும் குறுகிய தேசிய வெறியும் கொண்டு பல்லாயிரம் கோடிகளை இராணுவத்துக்கு வாரியிறைத்துக் கொண்டிருக்கிறது. வேலையின்மை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் மற்றும் வறுமை, பட்டினியில் நாட்டு மக்களைத் தள்ளிவிட்டுள்ள பாசிசக் கும்பல், பணவீக்கம், உற்பத்தித் தேக்கம் எனும் முதலாளித்துவ நெருக்கடிகளை மக்கள் மீது மூர்க்கமாகத் திணித்துவருகிறது. உலக வங்கியின் ஆணைக்கிணங்க, மோடி அரசானது ரேஷன் கடைகளை படிப்படியாக ஒழித்து, அதற்கான மானியத்தை மக்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தும் முறையைப் புகுத்தி வருகிறது. பிறகு, படிப்படியாக அந்த மானியத்தையும் நிறுத்துகிறது.
நாட்டையும் மக்களையும் பேரழிவுக்குள் தள்ளிவிட்டு, பாசிச பயங்கரத்தைத் திணிக்கத் துடிக்கும் பாசிச மோடி அரசின் இந்நடவடிக்கைகளை இம்மாநாடு கடுமையாக எதிர்க்கிறது.