மே 15, 2023, மதுரை மாநாட்டிற்கான தீர்மானங்கள் – பாகம் 4

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!
சுற்றிவளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!

மாநாட்டிற்கான தீர்மானங்கள்

தீர்மானம் 16:

நாட்டின் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தீவிரவாதத்தைத் தடுப்பது என்ற பெயரில் நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமையை (NIA) விரிவுபடுத்தி அப்பாவி இளைஞர்கள் சிறையிடப்படுகிறார்கள். சொந்த நாட்டு மக்களையே உளவு பார்க்கும் இத்தகைய நடவடிக்கைகள் அப்பட்டமான பாசிச சர்வாதிகாரமாகும். தேசிய புலனாய்வு முகமைக்கு தமிழ்நாடு அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

பேராசிரியர்கள், அறிவுத்துறையினர், பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டு அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது. பாசிச ஆள்தூக்கிச் சட்டமான “ஊபா” (UAPA) எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை முற்றாக ரத்து செய்யப் போராடுமாறு உழைக்கும் மக்களை இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது. பல ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்த மாநாடு கோருகிறது.

தீர்மானம் 17:

கிறித்தவ தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடவைப்பதற்கு மக்களைத் தூண்டிவிட்டதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒரு கட்டுக்கதையை தயாரித்துள்ளது; அதை அடியொற்றி பரப்புரை செய்கிறார், தமிழ்நாட்டு ஆளுநரும் பாசிச உளவாளியுமான ரவி. இதனூடாக, ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பதற்கான சதியை முறியடிக்க வேண்டும்; ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு தமிழ்நாடு அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும்; ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கு தனிச்சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மாநில அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

ஸ்டெர்லைட் படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்துள்ளபடி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான `17 போலீசார் மீதும், 4 மாவட்ட போலீசு அதிகாரிகள் மீதும் கொலை வழக்கைப் பதிவு செய்து சிறையில் அடைக்குமாறும், அவர்களின் சொத்துக்களைப் பறித்து, அவர்களது அரசியல் உரிமைகளையும் ரத்து செய்யுமாறும் இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் 18:

கோவை வெள்ளியங்கிரி மலையில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஜக்கி வாசுதேவின் அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட வேண்டும். அந்த மடத்தில் நடைபெற்ற பல்வேறு மரணங்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக உரிய விசாரணை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம், தமிழ் பிரச்சார சபா என்று தமிழை வளர்ப்பதாக நாடகமாடும் ஆர்.எஸ்.எஸ். கும்பல், இன்னொருபக்கம் தயிரை “தஹி” என அழைக்குமாறு இந்தியைத் திணிக்கிறது. உறவாடிக் கெடுக்கும் இந்த பார்ப்பன சதிகளை முறியடிக்க வேண்டும்.

வயலூர் முருகன் கோயிலில் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களை நீக்கிய மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முறியடிக்கவும், கருவறைத் தீண்டாமைக்கு முடிவுகட்டவும் சட்டரீதியாகப் போராடுவது ஒருபுறமிருக்க, களப் போராட்டங்களை கட்டியமைக்கவும் இந்த மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

தீர்மானம் 19:

காசு வாங்கிக் கொண்டு யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துருவாக்கும் வேலையில் ஈடுபடும் அய்யப்பன், மாதேஷ், ரவீந்திரன் துரைசாமி, சவுக்கு சங்கர், ராஜவேல் நாகராஜன், முக்தார் போன்றோரை மதனின் ஸ்டிங் ஆபரேஷன் அம்பலப்படுத்தியுள்ளது. ஊடக புரோக்கர்களான இவர்களைப் போன்றோர்தான் பாசிச பா.ஜ.க.விற்கு நிழல் கோயபல்சுகளாகச் செயல்படுகிறார்கள் என இம்மாநாடு அடையாளப்படுத்துகிறது.

தீர்மானம் 20:

இரண்டாவது முறையாக பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, போலீசு பாதுகாப்போடு அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட காவி வானரப் படையினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்டுள்ளனர். 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு மக்களும் புரட்சிகர-ஜனநாயக சக்திகளும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலுக்கு எதிராக சளையாது வினையாற்றிவந்த போதிலும், நீதிமன்றத் தீர்ப்புகளையும், போலீசின் அனுமதிகளையும் பெற்று இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இவற்றோடு இவை முடிவடைந்துவிடாமல், அடுத்தடுத்து தமது காவி நிகழ்ச்சிநிரல்களை நீதிமன்றங்கள், போலீசின் துணைகொண்டு காவிக் கும்பல் நடைமுறைப்படுத்த முயற்சிக்கும். இவற்றை நாம் அனுமதிக்க முடியாது என்றும், எந்த வகையான சட்டப் பாதுகாப்புகளோடு வந்தாலும் தங்கள் சதித் திட்டங்களை தமிழ்நாட்டில் அவ்வளவு எளிதாகச் செயல்படுத்த முடியாது என்ற நிலையை பாசிசக் கும்பலுக்கு உருவாக்க வேண்டுமென்றும் தமிழ்நாட்டு மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 21:

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் ஆணவப் படுகொலைகளுக்கும், சாதிவெறி தாக்குதல்களுக்கும் எதிராக புரட்சிகர – ஜனநாயக அமைப்பினர் ஒன்றிணைந்து போராட வேண்டுமெனவும், சாதி மறுப்பு திருமணங்கள் உள்ளிட்டு சாதி – தீண்டாமைக்கு எதிரான பல்வேறு முற்போக்கு – சீர்திருத்தப் பண்பாட்டை ஓர் சமூக இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. ஏனெனில், காவி பாசிசத்திற்கு எதிரான போராட்டமும் சாதி – தீண்டாமைக்கு எதிரான போராட்டமும் வேறானவை அல்ல என்று இம்மாநாடு தெளிவுபடுத்துகிறது.

தீர்மானம் 22:

ரவுடிகள்-பொறுக்கிகளைக் கட்சியில் சேர்த்துக் கொண்டும், பல்வேறு சாதிச் சங்கங்களை – ஆதிக்கச் சாதித் தலைவர்களை கைக்குள் போட்டுக் கொண்டும், பணத்தை தண்ணீராக இறைத்தும் தமிழ்நாட்டில் தனது கட்சியை பா.ஜ.க. வளர்த்து வருகிறது. மகளிர் குழுக் கடன், ஒன்றிய அரசின் திட்டங்கள், கோயில் திருவிழாக்கள், குத்துவிளக்கு பூசை – பக்தி – பஜனை என பல்வேறு வடிவங்களில் தமிழ்நாட்டு மக்களையும் தனது கட்சிக்குள் ஈர்ப்பதற்காக வேலை செய்கிறது, அண்ணாமலைக் கும்பல். எந்த வடிவத்தில் வந்தாலும், இந்த பாசிசக் கும்பலை இனங்கண்டு விரட்டியடிக்க வேண்டியது ஜனநாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமை என்று இம்மாநாடு அறிவுறுத்துகிறது.

தீர்மானம் 23:

இந்துமதவெறி பாசிசமும் கார்ப்பரேட் முதலாளிகளின் பாசிசமும் கலந்த வீரிய ஒட்டுரக பாசிசம் முன்னேறித் தாக்கிவரும் தற்போதைய சூழலில், அதனை வீழ்த்துவதற்கான களப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், சிறுவணிகர் சங்கங்கள், மாணவர் – இளைஞர் சங்கங்கள் – என அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளும் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைத்து, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிறுவ அணிதிரளுமாறு இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க