ஊழல் என்ற கூக்குரல் பா.ஜ.க கும்பலின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு!

‘வளர்ச்சி’யின் நாயகனாக முன்னிறுத்தப்பட்ட மோடி மற்றும் பா.ஜ.க. கட்சியின் பிம்பம் மக்கள் மத்தியில் சரிந்துவருவதால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்னசெய்வதென்று தெரியாமல் வெறி பிடித்து பைத்தியக்காரத்தனமாக தன் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்கிறது, மோடி அரசு.

0

மிழ்நாட்டில் பாசிச மோடி அரசின் ஏவல்நாயான அமலாக்கத்துறை, முன்னாள் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது பாய்ந்துள்ளது. செந்தில் பாலாஜியை விசாரிக்க தொடங்கி ஒரு மாத கால இடைவெளியில் அடுத்த அமைச்சரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது. இது எதிர்க்கட்சிகளை உடைப்பதற்காகவும் ஒடுக்குவதற்காகவும் மிரட்டிப் பணிய வைப்பதற்காகவும் மோடி அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ‘சட்டப்பூர்வ’ பாசிச நடவடிக்கை ஆகும்.

மூன்று முறை சட்டவிரோதமாக பதவி நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறார் என்று உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட அமலாக்கத்துறைத் தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் மூலமாகவே இதனை நடத்தியுள்ளது மோடி அரசு.

அமைச்சர் பொன்முடியை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே, 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது பதியப்பட்ட வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளது, அமலாக்கத்துறை. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவ்வழக்கை ரத்து செய்ய பொன்முடி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், ‘வழக்கை ரத்து செய்ய முடியாது; விசாரணையை தொடரலாம்’ என்று வழங்கப்பட்ட தீர்ப்பு அமலாக்கத்துறைக்கு மேலும் சாதகமாக அமைந்தது. இதே போலத்தான் செந்தில் பாலாஜி வழக்கிலும் நடந்தது.

2006 முதல் 2011 வரை ஐந்து ஆண்டுகள் தமிழக கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அக்காலத்தில் தன் அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி செம்மண் குவாரியை தன் மகன் கவுதம சிகாமணிக்கு எடுத்துக்கொடுத்தாகவும்; அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு செம்மண் முறைகேடாக அள்ளப்பட்டுள்ளதாகவும்; தமிழக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பொன்முடி மற்றும் அவரது மகன் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதியப்பட்டது.


படிக்க: சி.பி.ஐ – அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலம் நீட்டிப்பு அவசரச்சட்டம் !


2012-ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடரப்பட்ட வழக்கில், முறைகேடாக ஈட்டப்பட்ட பணத்தின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்து இருப்பதாக பத்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி, தற்போது சோதனையை நடத்தியுள்ளது, அமலாக்கத்துறை.

ஜூலை 17 அன்று, பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், அறக்கட்டளை மற்றும் அதன்கீழ் உள்ள கல்லூரிகள் உட்பட ஒன்பது இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. காலையில் 6.30 மணியில் இருந்து 13 மணி நேரம் சோதனை நடைபெற்றது. கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணமும், 70 லட்சம் மதிப்பிலான இந்திய பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோதனைகளுக்குப் பிறகு, பொன்முடி மற்றும் அவரது மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர், அமலாக்கத்துறை அதிகாரிகள். நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலகத்தில் இரவு ஒன்பது மணியில் இருந்து மூன்று மணி வரை விசாரணையை நடத்தி விடுவித்துள்ளனர். மீண்டும் மறுநாள் (ஜூலை 18) மாலை நான்கு மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மோடி அரசின் இத்தகைய பாசிச நடவடிக்கைக்கு காங்கிரஸ், சி.பி.எம்., ம.தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகள் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

“எதிர்க்கட்சியினரை மிரட்டி, அவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் மோடி அரசின் ஸ்க்ரிப்ட்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மோடி அரசின் நோக்கத்தை அம்பலப்படுத்தி காட்டியிருந்தார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், “தமிழ்நாட்டை பொறுத்தவரை எங்களுக்கான தேர்தல் பரப்புரையை ஆளுநர் ரவி செய்துக்கொண்டிருந்தார். தற்போது அவருடன் அமலாக்கத்துறை கைகோர்த்துள்ளது. அதனால் தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக இருக்கும்” என தமிழக மக்களின் மனநிலை அறிந்து வேடிக்கையாக பதிலளித்து இருந்தார்.

பாசிச மோடி அரசு எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறையை ஏவி ஒடுக்குகின்றது என்ற கருத்து பெரும்பாலான தமிழக மக்கள் மத்தியிலும் நிலவுகிறது. இந்நடவடிக்கைகள் பாசிச மோடி அரசிற்கு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாதகமாகவே அமையும் என்று ஜனநாயக சக்திகள் கூறுவதும், மக்களின் மனநிலையில் இருந்துதான்.

“2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தி.மு.க. முக்கிய பங்காற்றுவதால் தி.மு.க.வை பார்த்து பா.ஜ.க. பயப்படுகிறது” என்று தி.மு.க. ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாசிசக் கும்பலிடம் பயபீதி நிலவுவது உண்மைதான். அது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பற்றிய பயபீதி. தி.மு.க.வை மட்டுமல்ல, பாசிசக் கும்பலை எதிர்க்கும் எல்லா எதிர்க்கட்சிகள் மீதும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற ஏவல்நாய்கள் பாய்ந்து வருவதே அதற்கு சான்று.

பிபிசி ஆவணப்படம், ஹிண்டன்பர்க் அறிக்கை, கர்நாடகா தேர்தல் தோல்வி, ஒடிசா ரயில் விபத்து, மணிப்பூர் கலவரம், அமெரிக்காவிலும் மோடிக்கு எதிர்ப்பு போன்றவற்றால் ‘வளர்ச்சி’யின் நாயகனாக முன்னிறுத்தப்பட்ட மோடி மற்றும் பா.ஜ.க. கட்சியின் பிம்பம் மக்கள் மத்தியில் சரிந்துவருவதால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்னசெய்வதென்று தெரியாமல் வெறி பிடித்து பைத்தியக்காரத்தனமாக தன் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்கிறது, மோடி அரசு.


படிக்க: கட்சித் தாவல்களும் மத்திய புலனாய்வு முகமைகளும்!


எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் ஒடுக்க விழைவதும் அதன் ஒரு அங்கம்தான். இந்நடவடிக்கைகள் பாஜகவிற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தவே செய்யும். 2024 தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்து இருப்பதற்கு, பா.ஜ.க. தங்கள் கட்சிகளை இல்லாமல் அழித்துவிடும் என்ற அச்சமே பிரதான காரணம்.

ஏனென்றால் பாஜக கும்பலின் கொள்கை, ‘ஒரே நாடு; ஒரே கட்சி’ என்பதாகும். இந்துராஷ்டிரத்தை நிறுவதற்கு எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டுவது ஒரு முன்நிபந்தனை. எதிர்க்கட்சிகளுக்கு இரு வழிகள் தான் உள்ளன. ஒன்று, பா.ஜ.க. கும்பலுக்கு அடிபணிவது; மற்றொன்று, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.க. கும்பலை வீழ்த்துவது. தற்போது பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இரண்டாவது வழியில் பயணித்து வருகின்றன.

எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக எதிர்க்கட்சிகளின் பலவீனமான கண்ணியில் தாக்குதல் நடத்துகிறது, பாசிச மோடி அரசு. எதிர்க்கட்சிகளின் பலவீனமான கண்ணி, ஊழல். சமீப காலமாக, பாஜக கும்பல் ‘ஊழல்’ ‘ஊழல்’ என்று முழங்குவது அதிகரித்து இருப்பது எதிர்க்கட்சிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்துவதற்காகவும், ஒடுக்குவதற்காகவும், ஊழல் ஒழிப்பு நாயகராக மோடியை முன்னிறுத்துவதற்காகவும் தான்.

ஆம், எதிர்க்கட்சிகளின் ஊழல் முறைகேடுகள் பாசிசக் கும்பலுக்கு கொள்ளைப்புற வழியாக செயல்படுகின்றன. வட மாநிலங்களில் பாசிசக் கும்பலின் எதிர்க்கட்சிகளின் ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஒரளவுக்கு தாக்கம் செலுத்தவே செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதன் தாக்கம் குறைவு தான். பாசிச மோடி அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிரான, பாசிசக் கும்பலின் நோக்கத்தை அம்பலப்படுத்தும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் பிரச்சாரமே அதற்கு காரணம்.

பாசிச பா.ஜ.க. கும்பல் பின்வாங்கப் போவதில்லை. அதற்கு கும்பலுக்கு வேறு வழியும் இல்லை. எனவே இனிவரும் காலங்களில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கவே செய்யும். இது எதிர்க்கட்சிகளை உடைப்பது, ஒடுக்குவது, மிரட்டிப் பணிய வைப்பது, பணியாத கட்சிப் பிரமுகர்களை சிறையில் வைப்பது என்று பல்வேறு வடிவங்களில் நடக்கும். இவை எதிர்கட்சிகளை ஒழித்துக்கட்டிவிட்டு ‘சுதந்திரமாக’ தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. செய்யும் சதியாகும்.

பாசிசக் கும்பலின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கைகளையும், சதி நடவடிக்கைகளையும் முறியடிக்க வெறும் சட்டப் போராட்டம் மட்டும் போதாது. அது பாசிசக் கும்பலுக்கு தான் சாதகமாக அமையும். இக்கால கட்டத்தில் பாசிஸ்டுகளை பணிய வைக்கும் களப்போராட்டங்களே இன்றியமையாதது ஆகும்.


பிரவீன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க