நம்பிக்கையில்லாத் தீர்மானம்: குட்டிச்சுவரைக் கட்டி அழாதீர்!

இந்த நாடாளுமன்றம் எப்பேர்ப்பட்டதாக இருக்கிறது, நாட்டின் 99 சதவிகித மக்கள் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரிந்துகொள்ள விரும்பாத ஒரு இடம். ஏனெனில் அவர்களது அன்றாடப் பிரச்சினைகளையும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளையும் பற்றி அங்கு விவாதிக்கப்படுவதாக அவர்கள் கருதுவதில்லை. அப்படிப்பட்ட நாடாளுமன்றத்தில்தான், மோடியை அம்பலப்படுத்த வேண்டுமென்பதற்காக, நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர், எதிர்க்கட்சிகள்.

ற்போது நாடாளுமன்றத்தில் நடக்கும் விவகாரங்கள் தொடர்பான விசயத்தில், அப்படி ஒரு முரண் வெளிப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் நமது நாட்டின் பிரதமரை நாடாளுமன்றத்தில் பேசவைக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளின் ‘பகீரத முயற்சி’களின் விளைவாக உருவாகியிருக்கும் முரணாகும்.

‘பகீரத முயற்சி’ என்று சொல்லும் போது நமது இளந்தலைமுறையினருக்கு அது குறித்து தெரியாமல் இருக்கலாம். இராமாயணத்தில் வரும் ஒரு கிளைக்கதையின் நாயகன் பகீரதன். அவன் இராமனின் முன்னோர்களில் ஒருவன். தனது அறுபதாயிரம் முன்னார்களுக்கு கபில முனிவரால் நிகழ்ந்த சாபத்தை நீக்கி புனிதப்படுத்தி சொர்க்கத்திற்கு அனுப்ப விரும்பிகிறான். இதன் பொருட்டு கங்கை நதியை பூமிக்கு அழைத்துவர பிரம்மன், கங்கை, சிவன் ஆகியோரை நோக்கி பலமுறை, பல ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்ததாகச் சொல்கிறது அந்தப் புராணக் கதை. விடாமுயற்சியும் கடும் உழைப்பும் இருந்தால் வெற்றியடையலாம் என்பதற்குச் சான்றாக பார்ப்பனர்கள் இந்தக் கதையைக் கூறுவார்கள். அற்பக் காரணங்களுக்காக பார்ப்பனர்கள் மற்றவர்களை அலைக்கழித்தாலும் தன்மான உணர்வு குறித்து சிந்தனை கொள்ளாமல் அதனை ஏற்று அவர்கள் சொல்வதை செய்ய வேண்டும் என்ற அடிமைப் புத்தியை இக்கதை தந்திரமாக விதைக்கிறது.

தன் முன்னோர்களை நரகத்தில் இருந்து மீட்க வேண்டும் என்பதற்காக தவம் புரியும் பகீரதன் – ராமாயணக் கதை

சரியாக சொன்னால், நமது நாட்டின் பிரதமர் மணிப்பூர் விசயத்தில் பேச வேண்டும் என்பதில் எந்த அளவிற்கு நியாயம் இருந்தாலும், அவரது நடவடிக்கைகள் நாட்டையும் மக்களையும் அவமானப்படுத்துபவையாக இருக்கின்றன. ஒரு பிரதமர் என்ற முறையில் அவர் முன்வந்து இந்த கலவரங்களைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவரது கட்சியும் பார்ப்பனிய சிந்தாந்தத் தலைமையும்தான் இந்தக் கலவரங்களின் சூத்திரதாரிகள். இந்தக் கலவரங்களை வளர்க்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அவர் இந்தப் பிரச்சினையில் வாயைத் திறக்காமல் இருக்கும் நடவடிக்கையானது, கலவரங்களைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், அதில் இருந்து திசைத்திருப்பும் ஒரு தந்திரமும் ஆகும்.

மேலும், இப்பிரச்சினை குறித்து பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வெளியே கருத்துகளைத் தெரிவித்துவிட்டார். அவர் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தைரியம் இல்லாதவர் என்பது ஒரு உண்மையாக இருந்தாலும் அவர் கருத்து சொல்லி ஆக வேண்டும் என்று கட்டாயமில்லை.

எதிர்க்கட்சிகள் கோருவதெல்லாம், பிரதமர் மணிப்பூர் விசயத்தில் விவாதிக்க முன்வரவேண்டும் என்பது அப்பதவிக்குரிய தார்மீகப் பொறுப்பு, நாடாளுமன்ற மரபு என்ற வகையில் மட்டுமே.

சரி, நமது பிரதமர் என்ன கருத்துகளைச் சொல்வார் என்பதும் நமக்கெல்லாம் தெரிந்த விசயம்தான். அவரது கருத்துகள் என்னவாக இருக்கும் என்பதற்கு நாடாளுமன்றத்திற்கு வெளியே 21-07-2023 அன்று அவர் தெரிவித்த கருத்துகள், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைச்சர் ஸ்மிருதி இராணி போன்றவர்கள் தெரிவித்த கருத்துகளைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். இதனைத் தவிர அவரது வாயில் எந்தக் கருத்துகளும் வந்துவிடப் போவதில்லை, கலவரங்களைத் தடுப்பதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளப் போவதில்லை, இந்தக் கலவரங்களுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளப்போவதுமில்லை.

அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டத்தைப் பற்றி கருத்து தெரிவித்த அமித்ஷா, அவர்களை இந்திய முஜாகிதீன்கள் என்று கூறுகிறார். அதாவது, ஆளுங்கட்சியை மொன்னையான வகையில் விமர்சனம் செய்வதைக் கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லை என்பதுதான் பா.ஜ.க.வின் நிலை.

இருப்பினும், நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றைக் கோரிக்கையாக இருக்கிறது.

இந்த நாடாளுமன்றம் எப்பேர்ப்பட்டதாக இருக்கிறது, நாட்டின் 99 சதவிகித மக்கள் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரிந்துகொள்ள விரும்பாத ஒரு இடம். ஏனெனில் அவர்களது அன்றாடப் பிரச்சினைகளையும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளையும் பற்றி அங்கு விவாதிக்கப்படுவதாக அவர்கள் கருதுவதில்லை. அப்படிப்பட்ட நாடாளுமன்றத்தில்தான், மோடியை அம்பலப்படுத்த வேண்டுமென்பதற்காக, நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர், எதிர்க்கட்சிகள்.

இதுஒருபுறமிருக்க, நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியின் மீது நம்பிக்கையில்லை என்பதை விவாதித்து, அதன் மீது வாக்கெடுப்பு நடத்துவதாகும். அவ்வாறு வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி தோற்றால், ஆட்சி கலைந்துவிடும். ஆனால், ஆகப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியை இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதையும் செய்துவிடாது என்பதும் எதிர்க்கட்சிகளுக்கு நன்கு தெரியும்.

நமது பிரதமரோ ஒரு ஃபாசிச சித்தாந்தவாதி, கொடுங்கோலன். ஆனால், அவர் எப்படிப்பட்ட கொடுங்கோலன் என்பதுதான் முக்கியமானது.

மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை செய்தியாளர்கள் பலரும் விளக்குகின்றனர். சான்றாக, ஊடகங்களில் வெளிவந்த ஒரு வீடியோவில் பின்வருமாறு ஒரு காட்சி இருக்கிறது. ஒரு குக்கி இன இளம் பெண் நாற்பது ஐம்பது மெய்தி இன ஆண்கள், பெண்கள் மத்தியில் மாட்டிக்கொண்டு அச்சத்தில் நிலைகுலைந்து நிற்கிறாள். அங்கிருக்கும் மெய்தி இனப் பெண்கள் அந்த குக்கி இனப் பெண்ணை நிர்வாணமாக்கி அவளை வன்புணர்வு செய்யுமாறு மெய்தி ஆண்களைப் பார்த்துக் குரல் எழுப்புகின்றனர். ஆகையால், மணிப்பூரில் நடப்பது ஆர்.எஸ்.எஸ்.யின் தூண்டுதலாலும் அரசின் ஆதரவுடனும் மெய்தி இனத்தினர் குக்கி இனத்தினர் மீது நடத்தும் வன்முறை மட்டுமல்ல, ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக நடத்தும் வன்முறையாகும்.

இது குஜராத்தில் இசுலாமியர்களுக்கு எதிராக நிகழ்ந்த இனப்படுகொலையைப் போன்றதல்ல. அது மதவெறியூட்டப்பட்ட கும்பல் அரசின் ஆதரவுடன் திட்டமிட்டு இசுலாமியர்களுக்கு எதிராக நடத்திய வன்முறை வெறியாட்டமாகும். ஆகையால், மணிப்பூரில் நடப்பது நமது நாட்டில் இதற்கு முன்னர் நிகழ்ந்திராத ஒரு வன்முறை வெறியாட்டமாகத்தான் இருக்கும்.

இப்படி ஒரு கொடூரம் அரங்கேறிக்கொண்டிருக்கும் நேரத்தில் கூட அதனைத் தடுக்கமனமில்லாமல், வெளிநாடுகளுக்குச் சுற்றிவருவது, இசைநிகழ்ச்சிகளைக் கேட்பது, கேலிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் நமது பிரதமர் செய்துவருகிறார்.

எதிர்க்கட்சிகளின் இந்த பகீரதப் போராட்டங்கள் நடக்கும் இந்த ஒருவார காலத்தில் பிரதமரின் செய்கைகளைப் பார்த்தாலே, அவர் எந்த அளவுக்கு கொடூரமான ஃபாசிஸ்டு என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மணிப்பூர், ஹரியானா பற்றி எரிகிறது, நாடாளுமன்றமோ முடங்கிக் கிடக்கிறது. ஆனால், மோடியோ ஃபிரான்சில் ஊர்சுற்றிக் கொண்டிருக்கிறார். அங்கு யோகா பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். விருந்துகளில் பங்கேற்கிறார். அம்ருதா களசம் என்று ஒரு யாத்திரையைப்பற்றி பேசுகிறார். திலகர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

இன்னொருபக்கம், ஹரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் என்ற குண்டர்படை கலவரங்களை அரங்கேற்றி வருகிறது. மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன; இப்பாசிச குண்டர் படையினர் துப்பாக்கிகளைக் கொண்டு போலீசையும் சுட்டுக்கொன்றுள்ளனர்; நுஹ் இமாம் கொல்லப்பட்டுள்ளார். அந்த மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சிதான். இந்த வன்முறைகளை உடனடியாக தடுப்பதற்கான எந்த முயற்சியையும் ஹரியானா முதல்வர் எடுப்பதாகத் தெரியவில்லை.

ஹரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் குண்டர்படை அரங்கேற்றிய கலவரங்கள்

ஜெய்ப்பூர் எக்பிரஸ் இரயிலில் ரயில்வே காவலராக இந்து பயங்கரவாதி சேத்தன் சிங், ஒரு இரயில்வே உயரதிகாரியையும் மூன்று இசுலாமியர்களையும் சுட்டுக்கொன்ற பயங்கரவாதமும் நடந்துள்ளது. இந்த பயங்கரவாதத்தை அரங்கேற்றும்போது “இவர்கள் எல்லோரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்; பாகிஸ்தானின் உளவாளிகள்; இந்தியாவில் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் மோடிக்கும் யோகிக்கும்தான் வாக்களிக்க வேண்டும்” என்று கத்தியுள்ளான். ஒன்றிய அரசோ, கொல்லப்பட்ட இரயில்வே அதிகாரியின் குடும்பத்தினருக்கு மட்டும் இழப்பீட்டை வழங்கியுள்ளது. ஆனால், கொல்லப்பட்ட இசுலாமியர்களின் குடும்பத்தினருக்கு இதுவரை நிவாரணமே அறிவிக்கவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜெய்ப்பூர் எக்பிரஸ் இரயிலில் இசுலாமியர்களை தேடிச் சுட்ட இந்து பயங்கரவாதி சேத்தன் சிங்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இப்படி நாள்தோறும் பயங்கரவாதங்கள் அரங்கேற்றப்படும். இதற்கெல்லாம் எதிராக பிரதமர் வாய் திறக்கமாட்டார். வாய் திறக்கச் சொல்லிப் போராடுவதால் மட்டும் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

இறுதியாக, ஆகஸ்டு 8-ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும் என்று நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் அறிவித்துள்ளார். அதற்குள் நமது நாட்டில் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரியது. ஆனால், மோடி-அமித்ஷா கும்பல், அதற்குள் பல்வேறு அடக்குமுறைகள், சம்பவங்களை நிகழ்த்தி மணிப்பூர் விசயத்தைப் பழைய நிகழ்வாக்கிவிடும் என்பது உறுதி.

இத்துடன் செண்ட்ரல் விஸ்தா என்ற புதிய நாடாளுமன்றக் கட்டிடமும் இருக்கிறது. அதற்குள் இந்த விவாதத்தை வைக்க இருப்பதாகக் கூட மோடி-அமித்ஷா கும்பல் அறிவிக்கக் கூடும். இந்துத்துவத்தின் மன்றாமாக்கப்பட்டுள்ள அந்த கட்டிடத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டியிருக்கும்.

எதிர்க்கட்சிகளுக்கு தற்போது அமித்ஷாதான் பதிலளித்து வருகிறார். அதனால், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசாமல் இருக்கலாம், அவர் பதிலளிக்காமலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்த முடியும் என்று இந்திய ஜனநாயகத்தின் அவலநிலையை ஊடகங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ஒருவேளை பிரதமர் நாடாளுமன்றத்தில் வாய்திறப்பாரானால், அதற்காக எதிர்க்கட்சிகள் எடுத்துக் கொண்ட பகீரத முயற்சிகள் எல்லாம் பலவகைகளில் கோமாளித்தமானவையாக ஆக்கப்பட்டுவிடும்.

ஏனென்றால், இந்த நாடாளுமன்றக் கரையான் புற்றில் இருந்துதான் பா.ஜ.க. என்ற நாகப் பாம்பு குட்டிபோட்டு வளர்ந்து வந்துள்ளது. இந்த புற்றின் சந்துபொந்துகள் மீது அதற்கு எந்த பயபக்தியும் கிடையாது. அதுமட்டுமல்ல, இன்று பா.ஜ.க.வும் மோடியும் 1999-இல் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் போன்று குட்டி அல்ல. அனகோண்டவாக வளர்ந்துவிட்ட நாகப் பாம்பு. இந்த பாசிச அனகோண்டாவின் வலிமை மற்றும் அசைவுகள் காரணமாக நாடாளுமன்றம் என்ற கரையான் புற்றே இடிந்து வருகிறது. தனது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உற்ற துணையாக இருந்து இன்று பயனற்று குட்டிச்சுவராகிக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத்தைத் தூக்கிவீசிவிட்டு ஓட இருக்கிறது அனகோண்டா.

ஆனால், எதிர்க்கட்சிகளோ இந்த அனகோண்டாவை குட்டிச்சுவர்களை வைத்து தடுக்கப் போவதாக நம்பிக்கைக் கொண்டிருக்கின்றன. இந்த நம்பிக்கைக்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிதான் நம்பிக்கையில்லா தீர்மானமாம். சொற்களில் இருக்கும் இந்த முரண், பொருளிலும் அமைந்துவிட்டதுதான் காலப் பொருத்தமாகும்!

ஆகையால், எதிர்க்கட்சிகள் அந்தக் ‘குட்டிச்சுவர்’ மீது நம்பிக்கை வைப்பதையும் அந்த ஆளைப் பேசச்சொல்லும் மொக்கையான விசயத்தையும் கைவிட்டு, வீதியில் இறங்க வேண்டும். மக்களைத் திரட்டிப் போராட வேண்டும். நாடாளுமன்றத்தைவிட நாட்டை முடக்கும் வகையில் பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுப்பதுதான் சரியான பதிலடியாகும். மற்றொருபுறம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. தடை செய்யப்பட வேண்டும். சங்கப் பரிவார அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும். மதவெறியைத் தூண்டுகின்ற, ஜனநாயகத்தை இழிவுப்படுத்தி செய்யப்படும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிரச்சாரங்கள் எல்லாம் தடைசெய்யப்பட வேண்டும். மக்கள் உரிமை, ஜனநாயகத்திற்கு எதிராக பாசிசக் கருத்துகளை ஆதரித்துப் பேசும் ஊடகவியலாளர்கள், அறிவுஜீவிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இதுதான், மோடியை மணிப்பூர் விசயத்தைப் பேச வைப்பது மட்டுமல்ல, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டுவரும்!

மணிப்பூருக்காக தமிழ்நாட்டு மாணவர்கள், ஜனநாயாக சக்திகளின் போராட்டமும் பத்ரி கைதும் சரியான பாதையிலான ஒரு முன்னேற்றமாகும். இந்த திசையில் பாசிசத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரட்டும்.


தங்கம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க