பாடகர் கத்தார் இறந்து விட்டார்…

கத்தாரை போல நெஞ்சுறுதியோடு இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள்,  கத்தாரைப் போல மிக மோசமான ஒரு வாழ்க்கையை இறுதி காலத்தில் அடையக் கூடாது என்றே நினைப்பார்கள்.

ந்திராவைச் சேர்ந்த பாடகர் கத்தார் இறந்து விட்டார். புரட்சிப் பாடகர்,  புரட்சியின் நாயகன் என்றெல்லாம் விளிக்கப்பட வேண்டிய ஒருவர் வெறும் பாடகராக மட்டுமே இறந்து போயிருக்கிறார் என்பதே வேதனையான உண்மை.

நக்சல்பாரி இயக்கத்துக்கு உறுதுணையாக தன் குரலையும் தன் உடலையும் சிந்தனையையும் அர்ப்பணித்திருந்தார். இரண்டாயிரத்தின் தொடக்க காலகட்டத்தில் அவர் நடத்திய கூட்டத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அவரை கொலை செய்வதற்கு பலமுறை போலீஸ் முயற்சி செய்தும் ஒவ்வொரு முறையும் தப்பித்தார். அவரது உடலில் இன்னும் அகற்றப்படாத குண்டுகள் இருக்கின்றன.

எரி மலையாய்  வெடித்த அவரது குரல் ஆளும் வர்க்கத்துக்கு கொலை நடுக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்காக அவர் பட்ட பாடுகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

பாசிசம் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான்,  அவர் நக்சல்பாரி இயக்கத்தை விட்டு வெளியேறினார். அது மட்டுமல்ல பார்ப்பனர்களின் காலை கழுவினார். வேதங்களிலும் இதிகாசங்களிலும் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையை தேடிக் கொண்டிருந்தார்.  இதுவரை எந்த சித்தாந்தத்தில் இருந்தாரோ அதற்கு நேர் எதிராக மாறிப் போனார். உண்மையைச் சொல்லப்போனால் அப்பொழுதே புரட்சிப் பாடகர் கத்தார் இறந்து விட்டார். இப்போது இறந்தது வெறும் பாடகர் கத்தார் மட்டும்தான்.


படிக்க: தமிழகத்தின் ராஜபக்சேவே! தலைநகருக்கு வராதே!!


நிகழ்காலத்திலேயே ஒரு புரட்சியின் நாயகன் எப்படி சீரழிந்து போனார் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு. அவர் எப்படி சீரழிந்து போனார் என்பதை விளக்கியவர்களில் சிலர் இப்போது அரசியல் ரீதியிலும் சீரழிந்ததை எண்ணிப் பார்க்கிறேன்.

எப்பொழுதேனும் உழைக்கும் மக்களுக்கு எதிரான தத்துவத்தின் பக்கம் சென்று விடாதீர்கள். உங்களை தலையில் தூக்கி வைத்த உழைக்கும் மக்கள் காரி துப்பி விடுவார்கள்.

விமர்சனம் என்பது இருபக்கமும் கூரான வாள், கைப்பிடி கிடையாது. வைக்கும் விமர்சனங்கள் அத்தனையும் வைக்கின்ற நபரை திருப்பித் தாக்கும். அதற்கேற்றபடி தான் அவர் தன்னுடைய வாழ்க்கையையும் சிந்தனையையும் அரசியலையும் தெரிவு செய்ய வேண்டும். அவர் சுழற்றிய அந்த வாளே நெஞ்சை கிழிக்கும்.

கத்தாரே சீரழிந்து போய்விட்டார். நீ எல்லாம் எம்மாத்திரம் என்று யாராவது வந்து சொன்னால், அதுதான் இயங்கியல். வாழ்நிலை தான் சிந்தனையை தீர்மானிக்கிறது. ஒரு கம்யூனிஸ்டுக்கு சிந்தனை வாழ்நிலையை தீர்மானிக்கும். அதனால்தான் அவன் உழைக்கும் மக்களுக்கான வாழ்க்கையை தெரிவு செய்து கொள்கிறான்.

கத்தாரை போல நெஞ்சுறுதியோடு இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள்,  கத்தாரைப் போல மிக மோசமான ஒரு வாழ்க்கையை இறுதி காலத்தில் அடையக் கூடாது என்றே நினைப்பார்கள்.


மருது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க