நாட்டை முடக்குவோம்!

நாடாளுமன்றம் பாசிஸ்டுகளின் ‘விளையாட்டு மைதானம்’. அதில் அவர்களால் மட்டும் தான் ‘சிக்ஸர்’ அடிக்க முடியும்.

0

ருவழியாக நாடாளுமன்றத்திற்குள் வந்து பேசி விட்டார், பிரதமர் மோடி. மணிப்பூர் கலவரத்தைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக எதிர்க்கட்சிகளின் “இந்தியா” (I.N.D.I.A.) கூட்டணி பற்றியும், எதிர்க்கட்சிகளை குறிப்பாக காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வை விமர்சித்துப் பேசியுள்ளார். நாடாளுமன்றத்தை தன்னுடைய அரசியல் கட்சியின் பிரச்சார மேடையாக மாற்றிவிட்டார்.

கடந்த ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மணிப்பூர் கலவரத்தை ஒட்டி பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மோடி நாடாளுமன்றத்துக்கு வரவே இல்லை.

எனவே மணிப்பூர் கலவரத்தை ஒட்டி மோடியைப் பேச வைக்க வேண்டும் என்பதற்காக, ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 8-ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இரு நாட்களாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் பதிலளித்து ஒன்றிய அமைச்சர்களும் பா.ஜ.க மக்களவை உறுப்பினர்களும் பேசினர். இந்த இரு நாட்கள் விவாதங்களில் மோடி கலந்துகொள்ளவில்லை.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தான் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 10-ஆம் தேதி (இறுதி நாள்) தான் கலந்துகொண்டார், மோடி. இரண்டு மணி நேரம் பன்னிரண்டு நிமிடங்கள் ஆற்றிய உரையில் மணிப்பூரைப் பற்றி சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்களுக்குப் பிறகே மணிப்பூரைப் பற்றி பேசினார். வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசினார்.


படிக்க: பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் “ஸ்டண்ட்” பலிக்காது!


“மணிப்பூரில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றன. வரும் காலத்தில் மணிப்பூரில் அமைதி திரும்பும் என மக்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். மணிப்பூரின் பெண்கள், மகள்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது எல்லாம் நாடு உங்களோடு இருக்கிறது என்பதைத் தான்” என்று பேசினார், மோடி.

மணிப்பூர் கலவரத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுக்கும், காங்கிரஸ் கட்சி முன்வைத்த கேள்விகளுக்கும் எந்த பதிலும் கூறவில்லை. கலவரம் நடந்து 100 நாட்களைக் கடந்தும் பிரதமர் மோடி ஏன் மணிப்பூருக்குச் செல்லவில்லை? மணிப்பூரைப் பற்றி மவுனம் கலைக்கப் பிரதமர் 80 நாட்களை எடுத்துக் கொண்டது எதற்காக? இத்தனை வன்முறைக்குப் பின்னரும் கூட மணிப்பூர் முதல்வர் பதவி நீக்கம் செய்யப்படாதது ஏன்? ஆகியவையே காங்கிரஸ் முன்வைத்த கேள்விகள் ஆகும்.

மாறாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களை அதிகாரப் பசி கொண்டவர்கள் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும் இழிவுபடுத்தும் வகையில் பேசினார், மோடி. NDA என்பதில் கூடுதலாக இரண்டு ‘I’ சேர்த்து I.N.D.I.A. என எதிர்க்கட்சிகள் தங்கள் அணிக்குப் பெயர் வைத்துள்ளன. இதில் ஒரு ‘I’ 26 கட்சிகளின் “தான்” என்ற ஆணவத்தையும், மற்றொரு ‘I’ ஒரு குடும்பத்தின் “தான்’ என்ற ஆணவத்தையும் குறிக்கிறது என்று கொச்சையாகப் பேசினார்.

ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்திலும் இதுதான் நடந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் “அதானி, அதானி” என்று முழக்கமிட்டுக் கொண்டு இருக்கும் போது, அதானியின் பங்குச்சந்தை மோசடி குறித்துப் பேசுவதற்குப் பதிலாகக் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து இந்திராகாந்தியின் அவசரநிலை ஆட்சி பற்றி நெஞ்சுப்புடைக்க உரையாற்றினார் மோடி. எதைப் பற்றிப் பேச வேண்டுமோ அதை விடுத்து, எதிர்க்கட்சிகளைத் தாக்கி பேசுவதையே ஒரு யுக்தியாகக் கையாண்டு வருகிறார், மோடி.

90 நாட்களைக் கடந்தும் மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டுதான் இருக்கிறது. மேய்தி இனவெறியர்களால் அப்பாவி குக்கி பழங்குடியின மக்கள் அடித்தும் சுட்டும் கொல்லப்படுவதும், பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படுவதும் இன்றுவரை நடந்துகொண்டு தான் இருக்கின்றன. தினந்தோறும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


படிக்க: அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!


மோடி அரசும் மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பாஜக அரசும் கலவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஒரு பொய்த்தோற்றத்தை நாட்டு மக்களிடம் ஏற்படுத்திவிட்டு, ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட அரம்பை தெங்கால் மற்றும் மேய்தி லீபன் ஆகிய மேய்தி இனவெறி அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு திட்டமிட்டு கலவரத்தை நடத்தி வருகின்றன.

மேய்தி இன வெறியர்கள் மாநில போலீசு உதவியுடன் அரசின் ஆயுதக் கிடங்குகளிலிருந்து துப்பாக்கிகள், சிறு பீரங்கிகள் உள்ளிட்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்களையும், ஆறு லட்சம் தோட்டாக்களையும் கொள்ளையடித்து இருப்பதும், கடந்த மாதத்தில் மேய்தி இனவெறியர்களால் நிர்வாணமாக இழுத்து வரப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் போலீசு தான் தங்களை இனவெறிக் கும்பலிடம் ஒப்படைத்தாக கூறியதுமே அதற்குச் சான்று.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் மணிப்பூரில் இக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்துவதாக வரம்பிட்டு பார்க்கின்றனர், எதிர்க்கட்சிகள். இக்கலவரங்கள் மூலம் மதமுனைவாக்கத்தையும் இனமுனைவாக்கத்தையும் தீவிரப்படுத்துவதன் மூலம் பரந்துப்பட்ட மேய்தி இன மக்களை தங்கள் பக்கம் திரட்டிக் கொண்டு இந்துராஷ்டிர கனவை நோக்கி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் முன்னேறிக் கொண்டு இருப்பதை பார்க்கத் தவறுகின்றனர்.

மேலும் இக்கலவரத்தின் மூலம் குக்கி பழங்குடி இன மக்களை வெளியேற்றி, அவர்கள் வாழும் மலைப்பகுதிகளில் புதைந்துள்ள கனிமவளங்களை அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட் கும்பல்கள் சூறையாடத் திட்டமிட்டுள்ளது. அதற்கு வழிவகை செய்யும் வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவையும் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளது மோடி அரசு.

எனவே இனி வருங்காலங்களில் குக்கி பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கவே செய்யும். இப்படிப்பட்ட சூழலில் மோடி, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டால் மணிப்பூரில் மேய்தி இன வெறியர்களின் குக்கி பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்கள் நின்றுவிடப் போகின்றனவா? இல்லை.

மோடி கூறுவதைப் போல, நாடாளுமன்றம் பாசிஸ்டுகளின் ‘விளையாட்டு மைதானம்’. அதில் அவர்களால் மட்டும் தான் ‘சிக்ஸர்’ அடிக்க முடியும். மணிப்பூர் கலவரத்தை அடக்க வேண்டுமென்றால் மோடியைப் பேச வைப்பதோ, நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதோ, முடக்குவதோ தீர்வாகாது. நாட்டை முடக்குவது தான் ஒரே தீர்வு.


பிரவீன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க