மாமன்னன்: ரத்னவேல் கதாபாத்திரத்தின் கொண்டாட்டமும்! ஆதிக்க சாதிவெறி மனோபாவமும்!

எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியல் பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த மாதிரியான சில்லறைகளின் புலம்பல்களும் சேர்ந்துவருவது இயல்புதான்.

மீப காலமாக சாதிய வன்கொடுமைக்கு எதிரான திரைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழ் ரசிகர்களும் இப்படங்களுக்கு சரியான அங்கீகாரத்தையும் விமர்சனங்களையும் தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கர்ணன் பரியேறும் பெருமாள் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ்-இன் படைப்பான மாமன்னன் திரைப்படம் கடந்த  ஜூன் 29-ஆம் அன்று வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. படம் வெளியாவதற்கு முன்பாகவே இசை வெளியீட்டு விழாவில் மாரி பேசியது சர்ச்சையானது.

“அமைதியாக இருக்கும் சமுதாயத்தில் மாரி செல்வராஜ் சாதி வெறியைத் தூண்டுகிறார். தேவர்மகன் திரைப்படத்தில் இசக்கி என்ற கதாபாத்திரம் தாழ்த்தப்பட்டவராக காட்சிப்படுத்தப்படவில்லை; அவர் ஆதிக்க சாதினரை போலத்தான் காட்சிப்படுத்தப்பட்டார். மாரி தேவையற்ற வதந்திகளைக் கிளப்பி விடுகிறார்” என்று தங்கள் தரப்பு நியாயங்களை கூறி மாரிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தனர்.

“மேலும் ஒருபடி மேலே போய் தென்தமிழகத்தில் மாமன்னன் திரைப்படத்தை ஓடவிடமாட்டோம்! திரையரங்குகளை முற்றுக்கையிடுவோம்” என்று ஆதிக்க சாதிவெறியர்கள்  ஆர்ப்பரித்தார்கள். இதற்கு பதிலடியாக “இந்த சம்பவத்திற்கு முன்பாகவே தேவர்மகன் படத்தைப் பற்றி கமல்ஹாசனுக்கு அவரது கண்டனத்தை மாரி செல்வராஜ் ஒரு கடிதமாக எழுதியிருந்தார். கமல்ஹாசன் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்ட தக்கசமயமாக இசை வெளியீட்டு விழாவைப் பயன்படுத்திக் கொண்டார்” என்று இன்னொரு தரப்பினர் தங்களது நிலைப்பாட்டினை முன்நிறுத்தி தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் சண்டைப்போட்டுக் கொண்டார்கள்.


படிக்க: ஆதிக்கசாதி ஹீரோவாக மாறிய ரத்னவேல் மாமன்னன்| தோழர் மருது


இசைவெளியீட்டு விழாவில் மாரி பேசிய “இந்த நிலை மாறனும்” என்ற வசனத்தை வைத்து கிண்டல் கேலி செய்து வந்தனர்.

“இரயில் நிலையகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய சென்றால் கூட கவுண்டர்ல கேட்கனும்” என்று பதிவிட்டு அதன்கீழ் “இந்த நிலை மாறனும் சார்” என்று தொடர்ந்து மாரியை கீழ்தானமாக சித்தரித்து சாதிய வன்மத்தை உமிழ்ந்தார்கள்…

மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பகத்பாசில் ஆதிக்கசாதி வெறியனான ”ரத்னவேல்” என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். தனது சுயநலத்திற்காக எதையும் செய்யும் கொடூரனாககவும், தான் வளர்த்த நாய் ஒரு தாழ்த்தப்பட்டவர் வளர்த்த நாயிடம் தோல்வியுற்றதால் அதை அடித்தே கொல்லும் மனிதத்தன்மை அற்றவனாகவும் அக்கதாப்பாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பகத்பாசில்  நடித்த ரத்னவேல் கதாபாத்திரத்தை mash up ஆக எடிட் செய்து சாதிப் பெருமை பேசும் பாடல்களோடு பொறுத்தி trend செய்துவருகிறார்கள் சாதிவெறியர்கள். இவ்வாறு செய்துவிட்டு “பாவம் மாரி” என்று ஏளனமாக சிரித்தனர். இந்த ரத்னவேல் கதாப்பாத்திரத்தைத் தூக்கிப்பிடித்து பேசுவதை ஏதோ மாரியை இழிவுபடுத்துவதற்காக ட்ரெண்ட் செய்யப்படும் ஒன்றாக கருதக்கூடாது.

தாங்களும் ரத்னவேல் என்ற கதாபாத்திரத்திற்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல; தாங்களும் சாதிவெறியின் பிரதிபலிப்புதான் என்று எண்ணுவதன் வெளிப்பாடு தான் அது.

இவ்வாறு சாதிவெறியை வெளிப்படுத்தும் காணொளிகளைப் பரப்பும் வகையில் இளைஞர்கள் இருப்பதென்பதை ஒட்டுமொத்த சமூகத்திற்குமான பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்.

மேலும் இவர்கள் மாரியை “சொரியாசிஸ் தாக்கப்பட்டான்”, “சொந்த காசுல சூனியம் வைத்துக்கொண்டான்”, “மாரியின் கதறல்” போன்ற மீம்ஸ் போட்டு தங்களின் சாதிவெறியைத் தீர்த்துக்கொள்ள இந்த விடயத்தை பயன்படுத்திக்கொண்டனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது.


படிக்க: நாங்குநேரி கொடூரம்: மாணவர்களிடையே அதிகரித்துவரும் சாதிவெறி!


மாரி செல்வராஜ் அமைதியாக இருக்கும் சமுதாயத்தில் சாதிவெறியை தூண்டுகிறார் என்று கதறிய சாதிவெறி சங்கிகளுக்கு ஒரு கேள்வி.

சாதி ஆதிக்கம் குறைந்து விட்டதாக பேசப்படும் இந்த காலகட்டத்திலேயே சாதி வெறியனாக நடித்த ஒருவரின் கதாபாத்திரத்தை ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராகத் தூக்கிப்பிடித்து வன்மங்கள் கக்கப்படும்போது 1992-ஆம் ஆண்டில் வெளிவந்த தேவர்மகன் திரைப்படம் தலித் மக்கள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக, பொது புத்தியாக சமூகத்துக்கு எதிரான ஒரு செயல் அம்பலமாகும் போது அதை எதிர்க்காமல்  அமைதியாக இருக்கிறோம் என்பதன் பொருள் நாமும் அதை ஏற்றுக் கொண்டோம் என்பதே. இதற்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வினையாற்றினர். ஆனால், அது மட்டும் போதாது. சாதி குறித்தான விவாதங்கள் மாணவர் – இளைஞர் மத்தியில் தொடர்ந்து நடத்தப்படவேண்டும்.

எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியல் பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த மாதிரியான சில்லறைகளின் புலம்பல்களும் சேர்ந்துவருவது இயல்புதான்.

ஆனால் தற்போது ஏன் அதிகமாக பேசப்படுகிறது? இந்தியா முழுவதும் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடந்தேறிவரும் சாதிய வன்கொடுமைகள் மற்றும் மணிப்பூரில் நடக்கும் குக்கி பழங்குடியின மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் சாதிவெறியர்களுக்கு ஒரு புதிய தெம்பைத் தந்துள்ளது.

மேலும், இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ் இன் ஊடுருவல் அதிகரித்துள்ளது என்பதுதான்.

ஆகவே தோழர்களே இந்த சங்பரிவார கும்பல்களை கருவருத்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற இயலும்.

மதக்கலவரத்தை தூண்ட  முடியாமல் போனதால் அடுத்த நகர்வாக சாதி வெறியைத் தூண்டிவிடுவதுதான் சங்கப்பரிவார கும்பலின் நோக்கம். அதற்கு எதிராக தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்திப்பிடிப்போம்.


சிவா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க