உத்தரப் பிரதேசம் முசாஃபர்நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியர் திரிப்தா தியாகி என்பவர் முஸ்லீம் மாணவர் ஒருவரை, அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர்களை வரிசையாக வரவழைத்து, தாக்க சொல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆசிரியர், “ஏன் மெதுவாக அடிக்கிறாய்? வேகமாக அடி”என்று கூறுவதும் அவ்வீடியோவில் பதிவாகியுள்ளது.
அந்த முஸ்லீம் மாணவர் கணக்கு வாய்ப்பாட்டை ஒழுங்காக சொல்லாததே, ஆசிரியர் இந்த கொடூர தாக்குதலை தொடுக்க சொன்னதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், “இஸ்லாமிய மாணவர்களின் தாய்மார்கள் அவர்களின் குழந்தைகளின் படிப்பில் கவனம் கொடுக்கமாட்டார்கள்” என இஸ்லாமியர்கள் மீதான தனது மத வெறுப்பை அந்த ஆசிரியர் மாணவர்களிடம் கக்கியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பள்ளியில் தனது பிள்ளைக்கு பாதுகாப்பில்லை என அஞ்சிய முஸ்லீம் மாணவனின் தந்தை, இனி பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் தாக்குதலுக்குள்ளான மாணவனுக்கும், ஆசிரியரின் தூண்டுதலால் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் என்ன மாதிரியான மனநிலை ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்று பார்க்க வேண்டும்.
தாக்கப்பட்ட மாணவனுக்கு இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்தினால், இத்தனை நாட்களாக ஒரே வகுப்பில் படித்து வந்த தனது நண்பர்களே தன்னை தாக்குகிறார்களே என்ற அச்ச உணர்வும், அடித்த மாணவர்களுக்கு இனி இஸ்லாமியர்களை கண்டாலே தாக்க வேண்டும் என்ற மத வெறுப்புணர்வும் ஒருசேர ஏற்பட்டிருக்கும்.
இந்த மனநிலையைத்தான் நாடுமுழுவதும் காவி பயங்கரவாதிகள் ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்கள். சமீபத்தில் மும்பை இரயிலில் பயணித்த மூன்று அப்பாவிகள் முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் சேத்தின் குமார் சௌத்ரி என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
அதேபோல், கடந்த வாரம் மும்பை பந்தரா இரயில் நிலையத்தில் இந்து பெண் தோழியுடன் பேசிக்கொண்டிருந்தவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் இந்துத்துவ குண்டர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார்.
தனது மதவெறி பிரச்சாரத்தாலும், கலவரங்களாலும் இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை காவிக்கும்பல் நிறைவேற்றி வருகிறது என்பதைத்தான் இந்த சம்பவங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அதற்கு ஆசிரியர் திரிப்தா தியாகி போன்று காவிகளால் மதவெறி உணர்வூட்டப்பட்ட பலநூறு காவிக் குண்டர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதே நம்மை அச்சுறுத்தும் எதார்த்தமாக உள்ளது.
சிறுபான்மையினர்களுக்கு எதிரான இந்த ஆர்.எஸ்.எஸ்–பா.ஜ.க இந்துத்துவ கும்பலை அனைத்து துறைகளில் இருந்தும் விரட்டியடிக்கவேண்டும். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை தடை செய் என்று முழக்கவேண்டும்!
புதிய ஜனநாயகம்
26.08.2023