சந்திரயான் -3 கொண்டாட்டமும் தேசபக்தியும்

ஜூன் 14 அன்று சந்திரயான் -3 விண்வெளியில் ஏவப்பட்டது. இதே காலகட்டத்தில் தான் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வெறிபிடித்த மிருகங்களால் தெருவில்  இழுத்துச் செல்லப்பட்டனர்.

ந்த ஏகபோக முதலாளித்துவ சமுதாயத்தில் வல்லரசு நாடுகள் என்று அழைக்கப்படுகின்ற ஏகாதிபத்திய நாடுகள் உலகமக்களை வெறியுடன் சுரண்டி வருகின்றன. ஏற்கனவே, நிலவையும் செவ்வாய் கிரகத்தையும் ஏகாதிபத்திய நிதி ஆதிக்கக் கும்பல்கள் ஆக்கிரமித்து தத்தமது பிராந்தியங்களை உருவாக்கி வருகின்றன. நிலவில் சுரங்கங்கள் அமைத்தல், செவ்வாயில் குடியிருப்புகளை அமைத்தல், விண்வெளியில் நடைபாதை அமைத்தல், பிற நட்சத்திரங்களுக்கு செல்வதற்கான நட்சத்திரக் கப்பல்களை உருவாக்குதல் போன்ற தங்களின் ஏகாதிபத்திய போட்டாபோட்டியை விண்வெளியிலும் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் நிலவில் தங்களின் மேலாதிக்கத்தை நிறுவும் வகையில் ஏற்கெனவே தரையிரங்கிவிட்டன. கனிமங்களைச் சுரண்டுவதற்கான வழிவகைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றன. உதாரணமாக சீனா 2013-இல் முதன்முதலாக நிலவில் கால் பதித்ததிலிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி 2030-ஆம் ஆண்டுக்குள் சாங் (Chang’e) 6, 7 மற்றும் 8 என்ற திட்டத்தின்படி நிலவில் கிடைக்கும் கனிமவளங்களை கொண்டு மறுபயன்பாட்டின் மூலம் நீண்டகால மனித வாழ்விடத்தை உருவாக்குவதே இதன் உச்சபட்ச திட்டமாகும். ரஷ்யா ஏவிய “லூனா-25” தோல்வியடைந்த நிலையில் அடுத்தகட்டமாக லூனா-26, 27 மற்றும் 28 ஆகிய செயற்கைக்கோள்களை 2030 ஆம் ஆண்டிற்குள் நிலவிற்கு அனுப்பி மனித வாழ்விடத்தை உருவாக்குவதே அதன் திட்டமாகும்.

இதன் தொடர்ச்சியாகவே இந்தியாவும் தன்னை இந்த போட்டியில் ஈடுப்படுத்திக்கொண்டு சந்திராயன் – 3ஐ நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி நிலவின் தென் துருவத்தில்  கால் பதித்த முதல் நாடானது. இதை இந்திய நாடே தேசபக்தியில் கொண்டாடியது. NASA போன்ற ஒற்றையாதிக்க நிறுவனங்கள் கூட ISRO-வையும்  இந்தியாவையும்  வாழ்த்தின. முதலாளித்துவ ஊடகங்கள், “சந்திரயான்-3 நிலவை முத்தமிட்ட தருணம்”  என்று தலையங்கம் வெளியிட்டு குதூகலித்தன. சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் பெரிய திரையில் சந்திராயன்-3 நிலவில் தரையிறங்குவதை நேரலையாக  பார்த்து வெடி வெடித்து கொண்டாடி தேசபக்தியை வெளிப்படுத்தினர். சந்திரயான் -3 ஏவப்படுவதை சுமார் 85,000 மக்கள் நேரலையில் பார்த்தனர். மொத்தம் 7.5 கோடி மக்கள் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

சந்திரயான் – 3 நிலவில் தரையிறங்கியிருப்பதை ஒரு அறிவியல் முன்னேற்றமாக பார்க்கலாமே தவிர அதை ஒரு ரசிகர் மனோபாவத்துடன் கொண்டாடவேண்டிய அவசியம் இல்லை. நிலவின் தென் துருவத்தை கண்டு மகிழ்ந்த நாம் இந்தியத் தொழிலாளர்களின் நிலையைக் கண்டதுண்டா? நாம் பார்க்கக்கூடாது என்பதற்கு தான் இந்த தேசபக்தி முகமூடி!


படிக்க: சந்திராயன் 3 ஏவப்பட்டதற்கு பின் இருக்கும் அரசியல் என்ன? | தோழர் சிவா


ஜூன் 14 அன்று சந்திரயான் -3 விண்வெளியில் ஏவப்பட்டது. இதே காலகட்டத்தில் தான் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வெறிபிடித்த மிருகங்களால் தெருவில்  இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த கொடூரம் அரங்கேறியபோது, ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக பாசிச  மோடி சந்திரயானை பார்த்து முத்தமிட்டு தேசபக்தியில் உச்சிமுகர்ந்தார்.

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டதாக கொண்டாடும் நாம், இன்னும் மனித மலத்தை மனிதனே வெறும் கையில் அள்ளும் அவலம் தொடர்ந்து கொண்டிருப்பதை அனுமதித்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த குழந்தைகளை தூக்க வக்கற்று இருக்கிறோம். தற்போது எழும் கேள்வி சந்திரயான் -3 யாருக்குப் பலன் என்பதுதான். சாமானிய மக்களுக்குப் பயன்படவில்லையெனில் அதில் கொண்டாடுவதற்கு ஏதுமில்லை. ஆனால், இதனையெல்லாம் மூடிமறைக்கவே ஆளும் வர்க்கம் தேசபக்தியைக் கற்பிக்கிறது.

உதாரணமாக மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துசென்ற வீடியோ வெளியாகி நாடே கொந்தளித்த போது அதை திசை திருப்பும் விதமாக கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் ராமர் கோவில் கட்டிடத்தின் புகைப்படத்தை வெளியிட்டது இந்த சங்கி கும்பல். மேலும், இன்றுவரை மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஹரியானாவில் சங்கப் பரிவாரக் கும்பல் திட்டமிட்டு  அரசின் துணையோடு மதக் கலவரத்தை தூண்டி நடத்தி வருகிறது.

கடந்த மூன்று வாரத்துக்கு முன்பு நெல்லை நாங்குநேரியில் 17 வயதான சின்னதுரை எனும் மாணவனை அதே பள்ளியில் படிக்கும் ஆதிக்கச் சாதிவெறி பிடித்த மாணவர்கள் காழ்ப்புணர்ச்சியால் வீடு புகுந்து சரமாரியாக வெட்டினர். பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டது. தடுக்க வந்த சின்னதுரையின் தங்கையையும் சரமாரியாக வெட்டினர்.  இதனை நேரில் கண்ட சின்னதுரையின் தாத்தா அதிர்ச்சியில் அதே இடத்தில் உயிரிழந்தார்.

இந்தாண்டு மட்டும் ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரத்தில் நீட், ஜே.ஈ.ஈ (JEE) தேர்வு பயிற்சிபெறும் மாணவர்கள் 22 பேர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் அதனை தடுக்கும் வகையில் கோட்டா மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் மின்விசிறிகளில் ஸ்ப்ரிங் பொறுத்த உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் கோவத்தை மடைமாற்றும் இந்நடவடிக்கை நம்மை ஆத்திரமடையச் செய்யும்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மட்டும் இதுவரை 22 மாணவர்கள் ’தற்கொலை’ செய்து  கொண்டனர். அண்மையில் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று நீட் தேர்வில் அரசு மருத்துவக் கல்லூரியில் போதிய மதிப்பெண் எடுக்க முடியாததால் ஜெகதீசன் எனும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணம் படைத்தவர்களுக்குத்தான் மருத்துவம் என்பதை ஜெகதீசன் நண்பர் ஃபயாஸ்தீன் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தினார்.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க கிரிமினல் பிரவேஷ் சுக்லா பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த கொடூரத்தின் சூடு தணிவதற்குள், அங்கு தாழ்த்தப்பட்ட தொழிலாளர் கையில் இருந்த கிரீஸ், ஆதிக்க சாதி வெறி பிடித்த தொழிலாளரின் கையில் பட்டதால் தாழ்த்தப்பட்ட தொழிலாளர் முகத்தில் மலத்தை பூசிய கொடூரமும் அரங்கேறியது. கொடூரத்தின் உச்சகட்டமாக 17 வயதே நிரம்பிய தாழ்த்தப்பட்ட சிறுவனின் ஆசனவாயில் சிரஞ்சியில் மிளகாய்த் தூள் ஏற்றி உள்ளன ஆதிக்க சாதி வெறி பிடித்த மிருகங்கள்; சாதிவெறி அடங்காமல் சிறுநீரையும் குடிக்க வைத்துள்ளனர்.

இந்த கொடூரங்களுக்கெல்லாம் இந்த தேசப்பற்றாளர்கள் பதில் கூற வேண்டும் அல்லவா? நாம் எதிர்பார்க்கும் நீதி எல்லாம் இந்துராஷ்டிரத்தின் மனுதர்மத்தில் எழுதப்படவில்லை! நாம் எதிர்பார்க்கும் நீதியை இந்த ’தேச பக்தர்கள்’ வழங்கவில்லை என்றால் அவர்கள் கூறும் தேசப் பெருமிதத்தை ஏன் நாம் உச்சி முகர வேண்டும்!


படிக்க: ஏன் சந்திராயன் 3 தேச பெருமிதமாக காட்டப்படுகிறது? | தோழர் ரவி


இந்திய உழைக்கும் மக்கள் மீது பாசிஸ்டுகள் கட்டற்ற தாக்குதலை தொடுத்துள்ளனர். இனி இந்த கொடூரங்களை சகித்துக் கொண்டு இவர்கள் கூப்பாடு போடும் தேச பெருமிதத்திற்கு இசைந்தால் நம் முகத்திலும் நாளை மனித மலத்தையும் மூத்திரத்தையும் வாரி இறைப்பார்கள். ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பல்களின் நலனுக்கு தான் சந்திராயன் 3 உதவும் என்று நாம் கூறுகிறோம். அதற்கு எதற்கு தேச பெருமிதம் என்று கேட்டால், நீங்கள் எல்லாம் அறிவியலுக்கும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் எதிரானவர்கள் என்று நம்மைப் பார்த்து ஏசுகிறார்கள், ‘தேசப்பற்றாளர்கள்’.

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இஸ்ரோ(‌ISRO) இப்பொழுது முழுவதுமாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது பாசிச மோடி அரசு. விண்வெளி நடவடிக்கைகள் மசோதாவுக்கான (Space Activities Bill, 2017) வரைவு உருவாக்கப்பட்டுள்ளது; 2019-ஆம் ஆண்டில் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (New Space India Limited) என்ற பொதுத்துறை நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய புவியியல் கொள்கை 2022 (National Geospatial Policy 2022), இந்திய விண்வெளிக் கொள்கை 2023 (Indian Space Policy 2023) போன்ற கொள்கைகள் மூலம் இந்திய விண்வெளி துறையை லாபவெறி பிடித்த கார்ப்பரேட் கும்பல்களிடம் ஆத்ம நிர்பார் பாரத் என்ற பெயரில் அடகு வைக்கும் வேலையை செய்து வருகிறார் ‘தேசப் பிதாமகன்’ நரேந்திர மோடி.

ராக்கெட் ஏவுதளங்களை (Rocket Launching Facility) தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், செயற்கைக்கோளை உருவாக்கும் குழுக்களில் (Satellite Designing and Fabricating Committee) தனியார் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகளும் மேலாளர்களும் இடம்பெறலாம், செயற்கைக்கோள் பூமிக்கு அனுப்பும் தகவல்களையும் பூமியில் இருந்து செயற்கைக்கோளுக்கு அனுப்பும் தகவல்களையும் (Satellite communications) கண்காணிக்கும் Ground Station-யையும்   தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் அதில் வரும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என ஒட்டு மொத்த இந்திய விண்வெளித் துறையையும் தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு முற்றும் முழுதாக தாரைவார்க்கும் விதமாக சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது பாசிச மோடி அரசு. இதன் வெளிப்பாடுதான் சந்திரயான் 3 உருவாக காரணமாக இருந்த ராஞ்சி கனரக பொறியியல் நிறுவனத்தின்  மூவாயிரதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு 17 மாதங்களாக ஊதியம் வழங்காதது. இதை நாம் எப்படி தேசபெருமிதமாக கொண்டாடமுடியும்?

பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான ஆட்சி அதிகாரத்தில்தான், பாட்டாளி  வர்க்க சர்வாதிகாரத்தில்தான் அறிவியலும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் மக்களுக்கானதாக இருக்கும். அப்போது மட்டுமே அறிவியலுக்கு உயிர் ஊட்ட முடியும்.


அசுரன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க