அரசு நிர்வாகத்தின் துணையோடு ஆசிரியர் பணி வழங்குவதாக நீம் பவுண்டேசன் மோசடி!

ஆசிரியர்களிடம் நீம் பவுண்டேசனில் உறுப்பினராக சேருவதற்கும், சிறப்பு பயிற்சி எடுப்பதற்கும் ரூ. 50,000 கட்டினால், மாதம் ரூ. 15,000 சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தற்போது வரை 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நீம் பவுண்டேசன் என்கிற நிறுவனம் ஆசிரியர்களாக நியமித்துள்ளது. கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கு கற்றலை மேம்படுத்துவதற்குப் பயிற்சியளிப்பதாகக் கூறி பெண் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்குப் பணி நியமனம் வழங்கியுள்ளது அந்த நிறுவனம்.

ஆசிரியர்களிடம் நீம் பவுண்டேசனில் உறுப்பினராக சேருவதற்கும், சிறப்பு பயிற்சி எடுப்பதற்கும் ரூ. 50,000 கட்டினால், மாதம் ரூ. 15,000 சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் ஆசிரியர்கள்  சேர்ந்துள்ளனர். அதில் சிலருக்கு மட்டும் நவம்பர் மாதமும், டிசம்பர் மாதமும் சம்பளம் கொடுத்துள்ளார்கள். அதன் பின்னர் ஜனவரி மாதத்திலிருந்து இன்றுவரை 8 மாதமாக யாருக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று பின்னர் தான் அவர்களுக்குத் தெரிந்தது.

இதனையடுத்து ஜூலை மாதம் மாவட்ட கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் புகார் மனு கொடுத்தனர். அப்போது “நீங்கள் படித்து என்ன பிரயோஜனம்? நாங்கள் இதுபோன்று பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் என்று விளம்பரம் பண்ணுகிறோம்; அதை படிக்க மாட்டீர்களா?” என்று பாதிக்கப்பட்டவர்களை நோக்கி எதிர் கேள்வி கேட்டுள்ளனர்.

அதன் பிறகு  நீம் பவுண்டேசன் நிறுவனர் லூயிஸ் ராஜ்குமாரை அலுவலகத்திலேயே வைத்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முற்றுகையிட்டு உள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணம் கொடுப்பதாக செய்தியாளர் முன்னிலையில் பத்திரத்தில் எழுதிக்  கொடுத்துள்ளார் நிறுவனர் லூயிஸ் ராஜ்குமார்.


படிக்க: அசாம் பலதார மணம் தடை மசோதா: பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியே!


ஆனால் ஆகஸ்ட் 31-ஆம் தேதியிலிருந்து நீம் பவுண்டேசன் நிறுவனர் தலைமறைவானார். அதன் பிறகு 04.09.2023 அன்று மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் புகார் கடிதம் கொடுத்து முறையிட்டனர்.

அப்போது மாவட்ட ஆட்சியர், மோசடி வழக்கில் தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ”மாவட்ட கல்வி நிர்வாகிகளுக்கும் பங்கு உள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியபோது, மாவட்ட ஆட்சியரோ, ”அதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா?” என்று கேட்டார்.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்களோ, ”எங்களிடம் ஆதாரம் இல்லை. ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில்  தான் நடக்கும். அது மட்டுமல்லாமல்  பள்ளிக் கல்வி துறையின்  குழந்தைகள் இடைநிற்றலை தடுக்கும் பணிக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஓட்டப்பிடாரம்  வட்டாரக் கல்வி அலுவலர்கள், சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் களப் பணியாளர்கள், அரசு உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள்  இப்படி எண்ணற்றோர் நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்துள்ளனர்” என்று கூறியபோது, மாவட்ட ஆட்சியரோ, ”நானும் மாவட்ட நீதிபதியும் கூட…  உங்களிடம் மாவட்ட கல்வி நிர்வாகம் சார்பாக வேலை கொடுக்கப்பட்டது என்று எழுத்துப்பூர்வ ஆதாரம் இருக்கிறதா?  அப்படி இருந்தால் நான் மாவட்ட கல்வி நிர்வாகம் மேல் நடவடிக்கை எடுக்கிறேன். இல்லையென்றால்  இப்போதைக்கு மோசடி வழக்கில் தனியார் நிறுவனத்தின் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்” என்று கூறினார்.

இதைக் கேட்ட ஆசிரியர்களோ நம்பிக்கை இழந்து அங்கிருந்து வெளியேறினர். அடுத்ததாக மாவட்ட கல்வி நிர்வாகத்திடம் சென்று  கேட்டபோது ”எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று சொல்லிவிட்டார்கள்.


படிக்க: உலகையே உலுக்கும் மொராக்கோ நிலநடுக்கம் | படக்கட்டுரை


ஒரு பக்கம் குறைந்தபட்ச கூலி, சாதிப் பாகுபாடு, பணி நிரந்தரம் கிடையாது, 12 மணி நேர வேலை  ஆகியவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு  தனியார் பள்ளிக்கூடத்தில் வேலை செய்து வந்தவர்களும், வேலை தேடிக் கொண்டிருந்தவர்களும் இதை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதி தங்கள் நகைகளை அடகு வைத்தும், வட்டிக்குப் பணம் வாங்கியும் ரூ.50,000-ஐ திரட்டி கொடுத்துள்ளனர்.

தினமும் வேலைக்குச் செல்வதற்கு பெட்ரொலுக்கும், பேருந்துக்கும், கையில் பணம் இல்லாமல் நண்பர்களிடமும், உறவினர்களிடமும், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பணம் வாங்கியும்,  வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல் தவித்தும் கிட்டத்தட்ட 250 நாளுக்கும் மேலாக  மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாகியுள்ளனர்.

ஆசிரியர்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்?

பள்ளிக்கல்வித் துறையில் தற்காலிக பணிகளோ, அரசின் திட்டங்களோ, அரசு-தனியார் கூட்டு நிறுவனம்  (Public Private Partnership)  வழியே செய்யப்படுகிறது. பெரும்பாலும் தனியார் நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் தான் இத்திட்டங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால்தான், தனியார் தன்னார்வ நிறுவனங்கள் ஆசிரியர்களை  சுலபமாக ஏமாற்றுகின்றன.

அரசு நிர்வாகமும் இது போன்ற மோசடிகளுக்கு உடந்தையாக இருக்கிறது. மாவட்ட கல்வி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குத் (ஆட்சியர்) தெரியாமல் ஒரு தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் கூடங்களில் பணி நியமனம் செய்ய முடியுமா என்பதே இங்கு நாம் எழுப்பும் கேள்வி.

பிள்ளைகளைக் கல்வி எனும் கடலுக்குள் அழைத்துச் செல்வதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என்று சொல்ல வைக்கும்  அரசும், மாவட்ட கல்வி நிர்வாகமும் கல்வியையும், கல்வி நிறுவனங்களையும் இடைவிடாது தனியார்மயமாக்குவதையே உயிர் மூச்சாகச் செய்து வருகின்றன. இதில் ஆசிரியர்களின் வாழ்க்கை மட்டுமல்ல, குழந்தைகளின் எதிர்காலமும் அடங்கியுள்ளது. எந்த அரசாக இருந்தாலும் அது கார்ப்பரேட் மாடல் அரசாகவே செயல்படுகிறது! இந்த அரசுகள் கல்வியையும் பாதுகாக்காது; பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் துணை நிற்காது.

எனவே, மக்கள் தான் கல்வியைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் துணை நிற்கவும் வேண்டும். தனியார்மயமாக்கலை எதிர்த்துப் போராட வேண்டும். அதன் வழியாகத்தான் நம் குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்க முடியும்.


கள ஆய்வு
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
93853 53605

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க