பி.எம் விஸ்வகர்மா யோஜனா எனும் குலத்தொழில் திட்டம்!

மக்கள் தங்கள் சாதி அடிப்படையிலான தொழில்களில் பிணைக்கப்பட்டதிலிருந்து தப்பிக்கவும், தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த கல்வி கிடைப்பதற்காகவும் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். இந்த விஸ்வகர்மா திட்டம் அவர்களை மீண்டும் கிராமங்களில் அவர்கள் மேற்கொண்ட (பாரம்பரிய) தொழிலுக்குள் தள்ளும்.

டந்த செப்டம்பர் 17-ஆம் தேதியன்று பிரதமர் மோடி அவர்களால் “PM விஸ்வகர்மா யோஜனா” என்ற திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டது. கைவினைஞர்களுக்கு கடன், பயிற்சி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு ஆதரவை வழங்கும் ஒரு முன்னோடி திட்டம் என்று பிம்பப்படுத்தி அமல்படுத்தியுள்ளது பாசிச பாஜக அரசு.

இந்தத் திட்டமானது ஆகஸ்ட் 15 ’சுதந்திர’ தினத்தன்று பிரதமர் மோடியின் உரையில் அறிவிக்கப்பட்டது. விஸ்வகர்மா ஜெயந்தியான செப்டம்பர் 17 அன்று தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2023-2024 முதல் 2027-2028 வரை 5 ஆண்டுகள் அமலில் இருக்கும்.

இந்தத் திட்டம் பொற்கொல்லர்கள், நெசவாளர்கள், கொல்லர்கள், தச்சர்கள், சலவை தொழிலாளர்கள், முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 18 பாரம்பரிய கைவினைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு 5 இலட்சம் குடும்பங்கள் என சுமார் 30 லட்சம் கைவினைஞர் குடும்பங்களை இத்திட்டம் சென்றடையும் எனக் கூறப்படுகிறது. இத்திட்டத்திற்காக ஐந்தாண்டுகளுக்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவுசெய்து விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் ஐ.டி கார்டு பெற்றுக்கொண்டவர்களுக்கு 5 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.


படிக்க: கல்வியுரிமையைப் பறித்து… குலத் தொழிலைத் திணித்து…


”பாரம்பரிய திறன்களுடன் வாழும், கருவிகள் மற்றும் சொந்தக் கைகளால் வேலை செய்யும் மக்களுக்கு சுமார் ரூ13,000 – ரூ.15,000 கோடி ரூபாய் வழங்குவோம். ஓ.பி.சி (OBC) சமூகத்தில் இருக்கக்கூடிய நம் தச்சராக இருந்தாலும், பொற்கொல்லராக இருந்தாலும், கொல்லராக இருந்தாலும், கொத்தனாராக இருந்தாலும், சலவை தொழிலாளியாக இருந்தாலும், முடி திருத்தும் சகோதரர்களாக இருந்தாலும் சரி, சகோதரிகளாக இருந்தாலும் சரி” என்று ’சுதந்திர’ தின உரையில் மோடி பேசினார்.

ஆனால் இத்திட்டமானது OBC சமூகங்களின் தலைவர்களிடமிருந்து எதிர்க் கருத்துகளைத் தான் ஈர்த்துக் கொண்டுள்ளது. இந்த திட்டம் சாதி அடிப்படையிலான தொழில்களை வலுப்படுத்தும் என்றும் சமூக உறுப்பினர்களின் உண்மையான முன்னேற்றத்தை இது மறுக்கும் என்றும் ஆணித்தரமாக அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் காவி பாசிஸ்டுகளின் இந்துராஷ்டிர திட்டமான குலத் தொழில் திட்டம் இது என்பதை அறியாத சிலர், இத்திட்டம் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஒரு முக்கியமான நலம் புரியக்கூடிய நடவடிக்கை என்று கருதுகிறார்கள்.

இந்நிலையில் திட்டம் குறித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மன்றத்தின் (Most Backward Classes Forum) தலைவரான பி.சி. பதஞ்சலி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “இந்த திட்டம் கைவினைஞர் சாதியைச் சேர்ந்தவர்கள் வசதியான வாழ்க்கை வாழ உதவாது. இதற்கு மாறாக அவர்களின் முன்னேற்றத்தை மறுக்கும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “இந்த மக்கள் தங்கள் சாதி அடிப்படையிலான தொழில்களில் பிணைக்கப்பட்டதிலிருந்து தப்பிக்கவும், தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த கல்வி கிடைப்பதற்காகவும் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். இந்த விஸ்வகர்மா திட்டம் அவர்களை மீண்டும் கிராமங்களில் அவர்கள் மேற்கொண்ட (பாரம்பரிய) தொழிலுக்குள் தள்ளும் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான நல்ல கல்விக்கான வாய்ப்பையும் பறிக்கும். அவர்கள் தொழில் முனைவோராகவோ அல்லது முக்கிய கல்வி அல்லது நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவோ மாற முடியாது” என்று அவர் கூறினார்.


படிக்க: ‘கல்வியை காவிமயமாக்குதலில் என்ன தவறு’ : நவீன குலக்கல்விக்கு எத்தனிக்கும் காவிக்கும்பல் !


இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகைகள் உண்மையில் சிறந்த வாழ்க்கையை உருவாக்குவதற்கு போதுமானதாக இருக்காது என்றும் பதஞ்சலி மேலும் கூறினார். “அரசு கைவினைஞர் சாதிகளை அடையாளம் கண்டு, கிரீமி லேயரில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளித்திருக்க வேண்டும், மேலும் உதவித்தொகை, குடியிருப்பு, பள்ளி மற்றும் பயிற்சி மூலம் கூடுதல் ஆதரவை வழங்கி இருக்க வேண்டும். விருப்பமுள்ள தொழில் முனைவோருக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவி வழங்கியிருக்க வேண்டும் ” என்று அவர் கூறினார்.

இந்த கார்ப்பரேட் பாசிச பாஜக கும்பல் தன்னுடைய இந்துராஷ்டிரக் கனவை நோக்கி விரைவாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்தான் இந்த குலத்தொழில் நாசகரத் திட்டமும். குலக்கல்வி குலத்தொழில் என மீண்டும் மனு சாஸ்திரத்தை இங்கிருக்கும் சட்ட வழிமுறைகளைப் பயன்படுத்திக்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது இந்தக் கும்பல்.

நாம் என்ன வேலை செய்ய வேண்டும், நமது குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவுசெய்ய வேண்டும். அதற்கு, நாம் தேர்தலுக்கு அப்பால் இணைந்து நூறு ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கார்ப்பரேட் அடியாள் கும்பலை வீழ்த்தி மக்கள் ஜனநாயக குடியரசைக் கட்டியமைக்க வேண்டும்.


தென்றல்



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க