கோவை: சைதன்யா பள்ளியை அரசுடைமையாக்கு!

சின்மயா (மிதுன் சக்ரவர்த்தி), கலாச்சேத்ரா (ஹரி பத்மநாதன்), பத்ம சேசாத்ரி(சிவசங்கர் பாபா) என தனியார் பள்ளிகளின் பாலியல் சுரண்டல் தொடர்ந்து கொண்டே தான் போகிறது. கார்ப்பரேட் கும்பல்களும், சாமியார் கும்பல்களும் தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தி மாணவிகள் மீது பாலியல் சுரண்டலை அரங்கேற்றி வருகின்றனர்.

கோவை: ஸ்ரீசைதன்யா தனியார் பள்ளி மாணவிகளுக்கு பொறிக்கி ஆசிரியர்கள் பாலியல் தொல்லை! பள்ளியை உடனே கையகப்படுத்து!

ந்திய அளவில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனம் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளை நடத்தி வருகிறது. அதன் தலைமையிடம் தெலுங்கானாவைச் சேர்ந்த ஹைதராபாத்தில் உள்ளது.

அதில் கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ தனியார் பள்ளியில் கடந்த ஆறு மாதங்களாக  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.

பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் முரளிதரன் (35) மற்றும் ஆசிரியராக உள்ள பள்ளி நிர்வாக அதிகாரி விஜயகுமார் ஆகியோர் மீது மாணவிகளும் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், மாணவிகளும் பெற்றோர்களும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அவசர உதவி மையம் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர். மாவட்ட கலெக்டர், குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள், போலீசு அதிகாரிகள் விசாரணை நடத்திய பின் முரளிதரன் (35) மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரையும் போக்சோவில் கைது செய்துள்ளனர். மாணவிகளின் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் பள்ளி துணை முதல்வர் அஞ்சிபாபுவும் (38) போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


படிக்க: சின்மயா மிஷன் பள்ளி சாதி புத்தி – வன்கொடுமை சட்டம் பாயுமா? | மருது வீடியோ


மாணவிகளின் பெற்றோர் பள்ளி மாணவிகளிடம் விசாரித்தபோது இந்த இரண்டு ஆசிரியர்களும் மாணவிகளிடம் அத்துமீறி பேசுவது, தவறாக தொடுவது போன்ற செயலில் ஈடுப்பட்டது அம்பலமாகியுள்ளது.

காமவெறிப்பிடித்த இந்த பொறுக்கிகள் பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனை வெளியே கூறினால் மாணவிகளின் பெற்றோரிடம் அவர்களைப் பற்றி தவறாகக் கூறி விடுவதாக மிரட்டியுள்ளனர்.

பள்ளி முதல்வர் கிளாடிஸ் டியானா அவர்களை தொடர்பு கொண்டபோது “Punishment கொடுத்ததற்கு இப்படி மாணவிகள் பொய் சொல்கிறாகள்” என்று கூறினார். “அப்படியென்றால் ஏன் இரு ஆசிரியர்கள் கைது கைது செய்யப்பட்டனர்” என்று கேட்டதற்கு அழைப்பைத் துண்டிதுவிட்டார். பெண் ஆசிரியர்களே மாணவிகள் மீதான பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருப்பது இந்த சமூகத்தின் அவலத்தைக் காட்டுகிறது. சைதன்யா பள்ளி நிர்வாகம் ஆறு மாதத்திற்கும் மேலாக மாணவிகள் மீதான பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்துள்ளது. இதே தான் சின்மயா பள்ளியிலும் நடைபெற்றது. அங்கு பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் மாணவி தற்கொலை செய்துக்கொண்டார்.

***

தனியார் பள்ளியில் தான் கட்டுப்பாடு, ஒழுக்கநெறி கற்றுக்கொடுக்கப்படுவதாகவும் சரியான கல்வி கொடுக்கப்படுவதாகவும் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் பள்ளி எனும் கல்வி சிறைச்சாலையால் தான் பல மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வது இதுநாள்வரை அரங்கேறி வருகிறது.

சின்மயா (மிதுன் சக்ரவர்த்தி), கலாச்சேத்ரா (ஹரி பத்மநாதன்), பத்ம சேசாத்ரி(சிவசங்கர் பாபா) என தனியார் பள்ளிகளின் பாலியல் சுரண்டல் தொடர்ந்து கொண்டே தான் போகிறது. கார்ப்பரேட் கும்பல்களும், சாமியார் கும்பல்களும் தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தி மாணவிகள் மீது பாலியல் சுரண்டலை அரங்கேற்றி வருகின்றனர். இந்த கும்பலை பாதுகாக்கும் வேலையை அதிகார வர்க்கம் திறம்பட செய்து வருகிறது. தனியார் பள்ளிகளை அரசு கையகப்படுத்தாமல் மாணவிகளுக்கெதிரான பாலியல் சுரண்டல் ஒழியப்போவதில்லை.

தொடர்ந்து தனியார் பள்ளிகள் மீது பல குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், அதற்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளை காப்பாற்றுவதுதான் அரசின் கொள்கையாகவும், கடமையாகவும் இருக்கும் போது இவையாவும் சாத்தியமில்லை. தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்குவது மட்டுமே ஒரே தீர்வு.

ஆறு மாதத்திற்கும் மேலாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!
உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகத்தை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது!
ஸ்ரீ சைதன்யா பள்ளியை உடனே அரசு கையகப்படுத்த வேண்டும்!


மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க