காசா மீதான போரைக் கண்டித்து அமெரிக்க வெளியுறவுத்துறை இயக்குனர் ராஜினாமா!

”வாஷிங்டன் (அமெரிக்கா) பல பத்தாண்டுகளாக செய்து வரும் அதே தவறை, ஜோ பைடன்‌ நிர்வாகமும் தொடர்ந்து செய்து வருகிறது. இனிமேலும் நான்‌‌ அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை.”

0

மெரிக்க அதிபர் ஜோ பைடன் அக்டோபர் 17 அன்று யூத இனவெறி இஸ்ரேலின் காசா மீதான இன அழிப்புப் போருக்கான போர் உதவிகளை அதிகரிக்கப் போவதாக அறிவித்தார். இந்த முடிவைத் தொடர்ந்து, அக்டோபர் 18 அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை இயக்குனர்களுள் ஒருவரான ஜோஸ் பால் (Josh Paul) தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இவர் 11 ஆண்டு காலமாக அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் ராஜினாமா செய்வதற்கான காரணத்தை அவர் கடிதம் ஒன்றில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர், “வாஷிங்டன் (அமெரிக்கா) பல பத்தாண்டுகளாக செய்து வரும் அதே தவறை, ஜோ பைடன்‌ நிர்வாகமும் தொடர்ந்து செய்து வருகிறது. இனிமேலும் நான்‌‌ அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை” என்று எழுதியுள்ளார்.

மேலும், “இஸ்ரேலின் (பாலஸ்தீன) ஆக்கிரமிப்பும், தற்போதைய (காசா) தாக்குதலும் இவற்றிற்கான அமெரிக்க ஆதரவும் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு பெருந்துயரை ஏற்படுத்துகிறது. இஸ்ரேலுக்கு பேரழிவு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருவதை இனிமேலும் என்னால் பொறுத்துக் கொண்டு இருக்க முடியவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


படிக்க: இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்து உலகு தழுவிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்


இதனைத் தொடர்ந்து, தி நியூயார்க் டைம்ஸ்-க்கு அவர் அளித்த நேர்காணலில் “இஸ்ரேலுக்கு அதன் ஒரு தலைமுறை எதிரிகளைக் கொல்வதற்கான கட்டற்ற சுதந்திரத்தை (அமெரிக்கா) அளிப்பது மற்றுமொரு தலைமுறை எதிரிகளைத் தோற்றுவிப்பதற்கே உதவும். அது ஒருபோதும் அமெரிக்காவின் நலன்களுக்கு உதவாது” என்று கூறியுள்ளார்.

“எப்படியாவது, பாலஸ்தீன மக்களை பலி கொடுத்தாவது, பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று கருதுவது இறுதியில் பாதுகாப்பின்மையே ஏற்படுத்தும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7-ஆம் தேதிக்கு பின், இஸ்ரேலிய பயங்கரவாதத்தால் 3500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 13,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த பயங்கரவாதத்தைக் கண்டித்து உலகம் முழுவதிலும் அமெரிக்கா – இஸ்ரேலுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஜோஸ் பால் அமெரிக்காவின் ‘தேச நலனை’ பிரதிபலிப்பவர் தான். ஆனால் அப்படிப்பட்ட நபரால் கூட அமெரிக்கா துணைகொண்டு இஸ்ரேல் நிகழ்த்திவரும் இனப்படுகொலையை சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அறச்சீற்றம் கொண்ட ஒவ்வொருவரும் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் கண்டிக்க வேண்டும்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க