இஸ்ரேலால் இனப்படுகொலை செய்யப்படும் பாலஸ்தீன மக்கள்: இரட்டைவேடம் போடும் ஐநா சபை

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு உட்பட்டே ஐநாவின் ஒவ்வொரு செயல்பாடும் அமைந்திருக்கிறது என்பதை பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.

காசா பகுதியில் 2,704 குழந்தைகள், 1,584 பெண்கள் உள்ளிட்ட 6,546 பேரை இஸ்ரேல் இதுவரை கொன்று குவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 24) மட்டும் 350 குழந்தைகள் உட்பட 704 பேரை இஸ்ரேல் ராணுவம்  கொன்றுள்ளது. 17,439 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காசாவில் உள்ள 10 லட்சம் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், 50,000 கர்ப்பிணி பெண்களுக்கு போதுமான மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை எனவும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹிரோஷிமாவில் அமெரிக்காவால் வீசப்பட்ட அணு ஆயுதத்திற்கு இணையாக 12 ஆயிரம் டன் வெடிபொருட்களை பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

காசாவில் 22 மருத்துவமனைகளை உடனே காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு போட்டிருக்கிறது. இதனைக் காயம் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கான மரண தண்டனை என்று உலக சுகாதார நிறுவனம்  குறிப்பிட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட மோசமான சூழலில் ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியா குட்டரெஸ், இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை மென்மையாகக் கண்டிக்கிறார். ”ஐ.நா தீர்மானங்கள் மற்றும் முந்தைய ஒப்பந்தங்களின்படி சுதந்திரமான தேசத்தை பாலஸ்தீனர்கள் காண வேண்டும். இஸ்ரேல் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை மீறுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை” என்று குட்டரெஸ் தெரிவித்துள்ளார். உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலுக்கும்  ஹமாசுக்கும் ஒரே நேரத்தில் கோரிக்கை வைக்கிறார். உண்மையில் போரை நடத்திக் கொண்டிருப்பது இஸ்ரேல். இது என்ன வகை நடுநிலைமை?


படிக்க: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல் | காணொளி


எந்த விதமான சர்வதேச விதிகளையும் கடைப்பிடிக்காமல் பாலஸ்தீனியர்களை கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறது இஸ்ரேல். யூத இனவெறி இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரை நேரடியாக ஆதரித்து ஆயுத உதவி செய்து பின்னால் இருந்து போரை நடத்துகிறது அமெரிக்கா. ஐநா நியாயமாக அமெரிக்காவை கண்டித்திருக்க வேண்டும். இஸ்ரேலின் மீது போர்க்குற்றத்திற்காக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். போரை உடனே நிறுத்துவதற்கு முயன்றிருக்க வேண்டும். அமெரிக்காவைக் கண்டிக்காமல் இஸ்ரேலின் மீது எந்த  நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே வருத்தமளிப்பதாக இரட்டை வேடம் போடுகிறார் குட்டரெஸ்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுத உதவி செய்வது ஐநாவுக்கு தெரியாமலா நடக்கிறது? உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் முழுதும் நடத்திய எல்லா ஆக்கிரமிப்புப் போர்களிலும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடு இதுதான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு உட்பட்டே ஐநாவின் ஒவ்வொரு செயல்பாடும் அமைந்திருக்கிறது என்பதை பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.

உலக ஏகாதிபத்திய அமைப்பில் இன்று அமெரிக்காவின் அடியாளாகத்தான் ஐக்கிய நாடுகள் சபை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீதி என்னவோ, அதைத்தான் கொஞ்சம் மாற்றி ஐநாவும் பேசும். குட்டரெஸ் கூறும் சர்வதேச சட்டங்கள் எல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விருப்பத்திற்கேற்பத்தான் நடைமுறைப்படுத்தப்படும். ஒருக்காலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பயன்படுத்தப்படாது. அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் ஐநா என்ற ஒன்று இருக்காது. இந்த உண்மைகளையெல்லாம் பார்க்காமல் ஐக்கிய நாடுகள் சபை என்பது ஏதோ நடுநிலையான நீதி அமைப்பாக பார்க்கப்படுவது அபாயகரமானது.

இன்றைக்கு உலகில் நடக்கும் பெரும்பாலான ஆக்கிரமிப்புப் போர்களுக்குப் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களே அடிப்படையாக உள்ளது. அமெரிக்க பயங்கரவாதத்தை முறியடிக்காமல் உலக மக்கள் நிம்மதியாக வாழமுடியாது என்பதே வரலாறு உணர்த்தும் உண்மை. உலக மக்களின் முதன்மை எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை துணைநிற்கவா போகிறது. சர்வதேச அளவிலான உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலமே அதற்கு தீர்வு காண முடியும்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க