சொற்களின் கூட்டுக்குள்
ஓர் மௌனப் பறவை!

தனிமைப் பெருவெளியில் நின்றபடி
பெயர் தெரியாத அப்பறவை
பெருந்துயரத்தில் ஆழ்ந்திருந்தது!

துடைத்தெறிய முடியாத துயரம்
அதன் கண்களில்!

நூற்றாண்டு களைப்பைச்
சுமந்திருந்தது அதன் உடல்!
துயரத்தின் நிலத்திலிருந்து
வந்திருக்க வேண்டும் அப்பறவை!

நான் கேட்டபோது
மெல்ல என் காதுகளில்
பாலஸ்தீனத்திலிருந்து வருவதாகச் சொன்னது ஒரு சமயம்!

ஈழத்திலிருந்து
என்றது மற்றொரு சமயம்!

பொய் சொல்கிறதா
உற்றுப் பார்த்தேன்!

அதன் சிறகுகளில்
குண்டு துளைத்த
துளைகள் இருந்தன!

அலகின் நுனி பெயர்ந்து
உணவைக் கொத்துவதற்கு
சிரமப்பட்டது!

ஒற்றைக் கால்
சேதமடைந்திருந்தது!

அதிகமாகப் பேசவில்லை
அப்பறவை!

உனக்கு ஏற்பட்ட துயரத்தை நினைத்து வருந்துகிறாயா
எனக் கேட்டேன்!

குண்டு வெடிப்பில்
வேரோடு மரம் சாய்ந்து
தன்னுடைய குஞ்சுகள்
தன்கண் முன்னே
இறந்ததைச் சொல்லுகையில்..

அண்ணாந்து பார்த்து நெஞ்சுக்குழிக்குள் இழுத்து மறைத்தது
கண்களில் வழிந்த துயரத்தை!

நூற்றுக்கணக்கான தாய்மார்கள்
குழந்தைகளை இழந்து
இப்படித்தான் துடித்தார்கள்!

அவர்கள் கதறி வெடித்த சொற்களை
தன்னால் மறக்க இயலாதெனக் கூறிவிட்டு..

தன் மனதில் அடக்கியிருந்த
வேதனை மிக்க அந்த
சொற்களையே கூடாக்கி
அந்த கூட்டில் நுழைந்து
மௌனத்தில் ஆழ்ந்தது
அப்பறவை!


செங்குரல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க