பாலஸ்தீனம்: பாசிச மோடி கும்பலின் துரோகம்!

ஐ.நா. மன்ற தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணித்ததன் மூலம் மோடி அரசானது, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் மறைமுகமாகத் தனது ஆதரவை நிரூபித்துக் காட்டி, பாலஸ்தீன மக்களின் முதுகில் குத்தியுள்ளது.

பாலஸ்தீன காசா பிராந்தியத்தின் மீதான இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இப்போரை உடனடியாக நிறுத்தி அமைதியை நிலைநாட்டக் கோரியும், பாலஸ்தீன மக்களுக்குக் குடிநீர், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கக் கோரியும் ஐ.நா. மன்றம் அக்டோபர் 28-ஆம் தேதியன்று ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது.

இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 14 நாடுகள் எதிர்த்தன. ரஷ்யா, சீனா உள்ளிட்ட 120 நாடுகள் ஆதரித்தன. இந்தியா, இத்தாலி, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி முதலான 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

இவ்வாறு வாக்கெடுப்பைப் புறக்கணித்ததன் மூலம் மோடி அரசானது, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் மறைமுகமாகத் தனது ஆதரவை நிரூபித்துக் காட்டி, பாலஸ்தீன மக்களின் முதுகில் குத்தியுள்ளது. ஐ.நா. மன்றமும் அதன் தீர்மானங்களும் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டதல்ல என்ற போதிலும், இத்தகைய காகிதத் தீர்மானத்திற்குக் கூட ஆதரவு தெரிவிக்காமல், பாசிச மோடி கும்பல் பாலஸ்தீன மக்களுக்குத் துரோகமிழைத்துள்ளது.

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதியன்று பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதலைத் தொடங்கியவுடனேயே, இந்தியப் பிரதமர் மோடி இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டார். இஸ்ரேலிடமிருந்து, தொலைபேசியை வேவு பார்க்கும் “பெகாசஸ்” எனும் மென்பொருளை வாங்கி இந்திய மக்களைக் கண்காணிப்பது, இஸ்ரேலிடமிருந்து பெருமளவில் ஆயுத இறக்குமதி செய்வது, இஸ்ரேலிலுள்ள “ஹைஃபா” துறைமுகத்தை வாங்கியுள்ள இந்திய கார்ப்பரேட் முதலாளி அதானியின் நலனைப் பாதுகாக்க இஸ்ரேலின் இனவெறி பயங்கரவாதத்தை ஆதரிப்பது, இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளைக் கொண்ட “ஐ2யு2” (I2U2 -INDIA,ISREAL,UAE,US) எனப்படும் “குவாட்” போன்றதொரு கூட்டணியை மேற்காசியாவில் நிறுவத் துடிக்கும் அமெரிக்காவின் முயற்சிகளை ஆதரிப்பது என்பதாக பாசிச மோடி கும்பலின் கொள்கை அமைந்துள்ளது.


படிக்க: பாலஸ்தீன இனப்படுகொலை – பாசிஸ்டுகள் உலகளவில் ஒன்றிணைகிறார்கள்!


இருப்பினும், இஸ்ரேலின் இனவெறி பயங்கரவாதப் போரை எதிர்த்து உலகின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தெழுந்து, பாலஸ்தீனத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த மோடி அரசுக்கு எதிராக சர்வதேச அரங்கில் கண்டனங்கள் பெருகத் தொடங்கியது. உடனே வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கை மூலமாகவும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் முகமது அப்பாசுடனான தொலைபேசி உரையாடலின் மூலமாகவும் சமாளிப்பு முயற்சிகளை பாசிச மோடி அரசு மேற்கொண்டது. ஆனால், இவையனைத்தும் வெறும் நாடகம் என்பதை, ஐ.நா. தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்ததன் மூலம் மோடி அரசு நிரூபித்துக் காட்டிவிட்டது.

ஏற்கெனவே தனது காவி – கார்ப்பரேட் பாசிசத் தாக்குதல்களால் இந்திய மக்களிடம் அம்பலப்பட்டுப் போயுள்ள பாசிச மோடி கும்பல், இப்போது உலக அரங்கிலும் அம்பலப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை சாதகமாக்கிக் கொண்டு இப்பாசிச கும்பலை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியசைக் கட்டியமைப்பதற்கான போராட்டத்தை இந்திய உழைக்கும் மக்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இத்தகைய குடியரசுதான், இனவெறி பயங்கரவாத இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு, அமெரிக்காவுக்கு வால்பிடித்துச் செல்லும் இந்தியாவின் கேடுகெட்ட வெளியுறவுக் கொள்கைக்கு முடிவு கட்டும்.

யூத இனவெறிபிடித்த இஸ்ரேலை பயங்கரவாத நாடாக அறிவித்து, அந்நாட்டுடனான அனைத்து உறவுகளையும் ரத்து செய்! போரை நிறுத்தி, பாலஸ்தீன மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளைச் செய்! – என இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அனைத்து நாடுகளின் ஆளும் கும்பல்களுக்கு எதிராகப் போராடுவதென்பது அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தின் கடமை; நம் கடமை.


தலையங்கம்,
புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க