அக்டோபர் 31 அன்று காசாவில் உள்ள ஜபாலியா (Jabalia) அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 130-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி ஒருவரைக் கொல்வதற்காக முகாமில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது ஆறுக்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஹமாஸின் பதுங்குமிடங்கள் பலவற்றை அழித்துள்ளதாகவும் இஸ்ரேல் மார்தட்டிக் கொள்கிறது. தாக்குதலால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதலுக்குப் பிறகு காசா பகுதியுடனான அனைத்து தகவல்தொடர்புகளும் இணைய சேவைகளும் முற்றிலுமாக தடைப்பட்டுவிட்டதாக பாலஸ்தீன தொலைத்தொடர்பு நிறுவனமான பால்டெல் (Paltel) இன்று (நவம்பர் 1) கூறியது. முன்னதாக அக்டோபர் 27 அன்று இஸ்ரேலின் தாக்குதலால் காசா இணையத்தை இழந்தது. அதன் பின்னர், சர்வதேச அழுத்தங்களால் அக்டோபர் 29 அன்று சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு முகாமிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் தரையில் உருவான பெரிய பள்ளங்களை, தாக்குதல் ஏற்படுத்திய பேரழிவைக் காட்டுகின்றன.
படிக்க: காசா: இஸ்ரேலின் குண்டு வீச்சால் சிதைந்து போன ரஃபா நகரம்
இஸ்ரேலின் தாக்குதலை நேரில் பார்த்த முகமது இப்ராஹிம் “நான் ரொட்டி வாங்க வரிசையில் காத்திருந்தபோது, திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி ஏழெட்டு ஏவுகணைகள் வந்து விழுந்தன. தரையில் ஏழெட்டு பெரிய துளைகள் உருவாயின. கொல்லப்பட்டவர்களின் பிணங்களும், உடல் பாகங்களும் அப்பகுதியெங்கும் நிறைந்திருந்தன. அது உலகத்தின் முடிவு போலக் காட்சியளித்தது” என்று கூறினார்.
இத்தாக்குதலில் அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் பொறியாளர் முகமது அபு அல்-கும்சானின் குடும்ப உறுப்பினர்கள் 19 பேர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கு எதிராகத் தனது கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.
Al Jazeera denounces the Israeli massacre that killed 19 family members of Al Jazeera’s SNG engineer Mohamed Abu Al-Qumsan in Gaza's Jabalia refugee camp. pic.twitter.com/NNHHY89hU7
— Al Jazeera English (@AJEnglish) October 31, 2023
காயமடைந்தவர்களில் பலர் அல் ஷிஃபா (Al Shifa) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். “சிறு குழந்தைகள் ஆழமான காயங்களுடனும் கடுமையான தீக்காயங்களுடனும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். அதில் பலர் குடும்பத்தினரை இழந்திருந்தனர். பல குழந்தைகள் கதறி அழுது தங்கள் பெற்றோரைக் கேட்டனர். மருத்துவமனை நோயாளிகளால் நிரம்பியிருந்ததால், அவர்களுக்கான ஒரு இடம் கிடைக்கும் வரை நான் அவர்களுடன் இருந்தேன்” என்று மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியரான முகமது ஹவாஜ்ரே கூறினார்.
இம்மருத்துவமனையில் ஜெனரேட்டர்களுக்கான எரிபொருள் விரைவில் காலியாகவிருப்பதாகவும், இதனால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
ஜபாலியா அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு சர்வதேச அளவில் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால், அமெரிக்காவின் முழுமையான ஆதரவோடு இந்த இனப்படுகொலையை இஸ்ரேல் நிகழ்த்தி வருவதால் சர்வதேச நாடுகளின் கண்டனங்களை அது பொருட்படுத்துவதில்லை.
அக்டோபர் 7 முதல் இன்று (நவம்பர் 1) வரை காசாவில் 3,648 குழந்தைகள் உட்பட 8,796 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 22,219-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தனது நர வேட்டையைத் தொடர்கிறது.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube