பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இஸ்ரேல்

பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் என்பது சிறுவிவசாயமும், மீன்பிடித்தலும்தான். இஸ்ரேலின் அநீதியான கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும் பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது.

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததிலிருந்தே அந்நிலத்தின் மக்களைக் கொன்றொழித்து வருகிறது, இஸ்ரேலிய யூத இனவெறி அரசு. தற்போது, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் என்பது ஒரு இன அழிப்பின் உச்சம். காசா துண்டு நிலத்தில் சிறைப்படுத்தப்பட்ட மக்களின் மீது குண்டுகளைவீசி கொத்துக் கொத்தாக கொன்று வருகிறது இஸ்ரேல். கட்டிடக் குவியல்கள், இடிபாடுகளிடையே சிக்கி தனித்தனி பாகங்களாக எடுக்கப்படும் சடலங்கள், நிராதரவாகப்படும் குழந்தைகள், சுதந்திரத்தை விரும்பும் எஞ்சிய பாலஸ்தீனக் குழந்தைகள்… பாலஸ்தீனத்தினத்தின் மீதான கொடூரம் நெஞ்சை உலுக்குகிறது.

பாலஸ்தீனத்தின் மீது,  உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்கா மற்றும் அதன் ஏவல்நாயான இஸ்ரேல் நடத்தும் இந்த காட்டுமிராண்டித்தனமான இன அழிப்புப் போரை உலகமே கண்டிக்கிறது. உலகெங்கும், சுதந்திர பாலஸ்தீனத்திற்கு ஆதரவான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் ஒலித்தாலும், பாலஸ்தீனத்தின் இந்த நிலைக்குக் காரணம் ஹமாஸ் கடந்த அக்டோபரில் தொடுத்த தாக்குதல்தான் என்று கூறி, பாலஸ்தீன சுதந்திர வேட்கையின் எதிர் நடவடிக்கையையும், இஸ்ரேலின் இன அழிப்பையும் சமப்படுத்திப் பார்க்கின்ற பார்வை இருக்கத்தான் செய்கிறது. பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் போர் என்பது இன்று தொடங்கியதல்ல. அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது.

காசா மீது போரை நடத்திக் கொண்டிருக்கும் போதே, காசாவிற்கான தண்ணீர், மின்விநியோகம், எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை நிறுத்தியது; பாதுகாப்புப் பகுதி என்று அறிவித்த தெற்கு பகுதியிலும் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது; அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவது ஆகியன ஒரு இன அழிப்பின் உச்சத்தைக் குறிக்கிறது.


படிக்க: என் குரல் கேட்கலையா… | காசா | சிவப்பு அலை பாடல்


தற்போது மட்டுமல்ல, பல்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அம்மக்கள் மீது ஒரு அறிவிக்கப்படாத இன அழிப்புப் போரை இஸ்ரேல் நடத்தியிருக்கிறது.

பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் என்பது சிறுவிவசாயமும், மீன்பிடித்தலும்தான். இஸ்ரேலின் அநீதியான கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும் பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது.

காசா என்பதே ஒரு துண்டு நிலம்தான். அந்த நிலத்தின் வாழும் மக்களின் விவசாய நிலங்களில் 35 சதவீதத்தை தடைசெய்யப்பட்ட பகுதியாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இப்பகுதியில், நிலம் வைத்திருக்கின்ற 113,000 சிறுவிவசாயிகள் அந்த நிலத்தைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

“பாலஸ்தீனிய மக்களுக்கு  தங்கள் வாழ்க்கை, நிலம் மற்றும் இறையாண்மைக்கான உரிமை  உண்டு” (The Palestinian people have a right to their lives, land and sovereignty) என்ற தலைப்பில் வெளியான ஆய்வறிக்கை, இஸ்ரேலின் வாழ்வாதார அழிப்பை அம்பலப்படுத்துகிறது.

பாலஸ்தீனியர்களின் விவசாய நிலத்தில் 90 சதவீதம் ஜோர்டானை ஒட்டியுள்ள மேற்குகரையில்தான் இருக்கிறது. 1993 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்திற்கும் இடையில் ஒஸ்லோ ஒப்பந்தம் போடப்பட்டத்திலிருந்தே, இந்த மேற்குகரை இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான்  இருக்கிறது. இங்குள்ள நிலத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் உள்ள 76 கேட்களில், 12 கேட்கள் வழியாக மட்டுமே தினமும் விவசாயிகள் சென்று வர முடியும்.

அதுமட்டுமின்றி, மேற்கு கரையில் உள்ள நீராதாரங்களை இஸ்ரேல் தன்னுடையக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. 1982 ஆம் ஆண்டிலிருந்தே, நீருக்காக இஸ்ரேலை நம்பியிருக்கின்றனர் பாலஸ்தீனியர்கள். பாலஸ்தீனியர்களுக்கு வழங்கும் நீரைவிட மேற்குகரையில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆறுமடங்கு நீரை அதிகமாக இஸ்ரேல் வழங்குகிறது என்பதும், ஒருவருக்கு 20 லிட்டர் எனுமளவிற்கே பாலஸ்தீனிய மக்களுக்கு நீர் வழங்கப்படுகிறது என்பதும் அம்பலமாகியிருக்கிறது.


படிக்க: இஸ்ரேல் நர வேட்டை — ஜபாலியா அகதிகள் முகாம் மீது தாக்குதல்!


மேலும், கிணறுகள் அமைப்பது, மழைநீர் சேகரிக்கின்ற உரிமையையும் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு மறுக்கிறது. அத்தகையக் கட்டுமானங்களை இஸ்ரேலிய இராணுவம் அடிக்கடி அழிக்கவும் செய்கிறது. இதனால் குடிநீருக்காகக்கூட இஸ்ரேலிடம் கையேந்த வேண்டியிருக்கிறது பாலஸ்தீனம். குடிநீருக்கே இப்படியென்றால், விவசாயத்திற்கான நீரின் நிலை குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அவ்வாறு விவசாயம் நடைபெற்றாலும் அதை இஸ்ரேல் விடுவதுமில்லை. விதைகளுக்காகவும், உரங்களுக்காகவும் இஸ்ரேலை நம்பியிருப்பதால், இந்திய விவசாயிகளைப் போலவே பாலஸ்தீன விவசாயிகளும் கடனிலும், வறுமையிலும் உழல்கின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்,  அறுவடைக் காலங்களில், காசாவை நோக்கிக் காற்றடிக்கும் பொழுதெல்லாம், பயிர் அழிப்பு விமானங்கள் மூலம் கிளைபோசேட் என்ற களைக்கொல்லியை அடிக்கிறது இஸ்ரேல். இவ்வாறு, வானிலிருந்து களைக் கொல்லிகளை அடித்ததனால், பாலஸ்தீனத்தில் கடந்த 2020 ஜனவரியில் மட்டும் 281 ஹெக்டேர் பயிர்கள் அழிக்கப்பட்டன. இதனால் நேரடியாக 350 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த கிளைபோசேட் என்ற களைக் கொல்லியானது, உலக சுகாதார நிறுவனத்தால், புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என்று அறிவிக்கப்பட்டதாகும். அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் விலங்களிலும், மனிதர்கள் மீதும் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகளவிலான கிளைபோசேட் புற்றுநோயை உருவாக்குகிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த களைக் கொல்லியானது, தாவரங்களில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்சைம்களை நேரடியாகத் தாக்குவதாகும். இந்த கிளைபோசேட் மற்றும் அதன் சேர்மானங்கள், நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த கிளைபோசேட்டானது, உடலின் இரத்த ஓட்டத்தைப் பாதிப்படையச் செய்து உடலில் உள்ள திசுக்களைக் கொல்கிறது (நெக்ரோசிஸ்) என்று கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தத்தில் ஒரு செல் உயிரியிலிருந்து பல செல் உயிரிவரை பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய கிளைபோசேட்டை பாலஸ்தீனத்திற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது, இஸ்ரேல்.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக, பாலஸ்தீனிய மக்களின் வாழ்வுடன், பண்பாட்டுடனும் கலந்தது மீன்பிடித் தொழில்.  சர்வதேச சட்டத்தின்படி, பாலஸ்தீனத்திற்கு கடலில் 60 நாட்டிகல் மைல் வரை இறையாண்மை உரிமை இருக்கிறது. ஆனால், பாலஸ்தீனியர்களுக்கு 6 நாட்டிகல் மைல் வரை செல்லத்தான் அனுமதிக்கிறது இஸ்ரேல்; காசாவின் சில பகுதிகளில் 3 நாட்டிகல் மைல் வரை செல்ல மட்டுமே அனுமதிக்கிறது. அதுவும், இஸ்ரேலிய அரசால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே மீன்பிடிக்கச் செல்ல முடியும். இந்த எல்லையைத் தாண்டும் பாலஸ்தீன மீனவர்களை இஸ்ரேலிய அரசு சிறைப்படுத்துகிறது அல்லது சுட்டுக் கொல்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் நிலைதான் பாலஸ்தீனியர்களுக்கும். இதனால், 35,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. பாலஸ்தீன மக்களுக்குச் சேரவேண்டிய, காசாவில் இருந்து 13 நாட்டிகல் மைல் தொலைவில் கிடைக்கின்ற, இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை இஸ்ரேல் அபகரித்து வருகிறது.

இதுதவிர, போருக்கு முன்பிருந்தே பாலஸ்தீன மக்களிடையே வேலைவாய்ப்பின்மை 45 சதவிகிதமாக இருக்கிறது. அவர்களின் வாழ்க்கை, பாலஸ்தீனத்திலிருந்து வெளியே சென்று பிறநாடுகளில் உழைப்பவர்களையும், ஐ.நா. உதவிகளையும் நம்பியே இருக்கிறது.

ஆகவே, இஸ்ரேலை இன அழிப்புக் குற்றவாளியாக்கித் தனிமைப்படுத்துவதும், இஸ்ரேல் ஆக்கிரமித்த நிலங்களை பாலஸ்தீனியர்களுக்கு மீட்டுக்கொடுப்பதும், சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்குவதுமே பாலஸ்தீன மக்களுக்கான நீதியாகும்.

நன்றி: Countercurrents


அப்பு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க