ன்றைய தினத்தில் பிரச்சினை இல்லாத மக்கள் பிரிவினர் என்று யாருமே இந்த நாட்டில் இருக்கமுடியாது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வால் மதவெறி ஊட்டப்பட்ட கும்பல் சிறுபான்மையினரை படுகொலை செய்கிறார்கள். முஸ்லிம்களும், தலித்துகளும் இந்த குடிமை சமூகத்தின் எல்லா அரங்கங்களிலும் ஒடுக்கப்படுகிறார்கள். நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அரைப்பட்டினி கிடக்கிறார்கள். மக்கள் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்திற்காக தங்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப் படுகிறார்கள். அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் செயல்பாட்டாளர்களும், அறிவுத்துறையினரும் அரசு நிறுவனங்களின் மூலமாக வேட்டையாடப்படுகிறார்கள்.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஏழை எளிய  மாணவர்கள் கல்விச் சூழலில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். வேலையின்மை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தொழிலாளர்கள் வரலாறு நெடுக போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுகின்றன. விலைவாசி உயர்வால் தங்களது ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தமுடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றவாளிகள் எந்தவித பயமுமின்றி நாடாளுமன்றத்தில் சுற்றித் திரிகிறார்கள்.

இவற்றிற்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகின்றனர். இந்த வெவ்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்து இந்திய அளவில் பாசிசத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டமாக வளர்த்தெடுக்கும் கட்சி ஏதுமில்லை. எல்லா கட்சிகளும் தேர்தல் என்ற வரம்பை ஒட்டிய செயல்படுகின்றன. ஆனால் பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு மேற்சொன்ன எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால் இதை எப்படி சாதிப்பது?


படிக்க: நவம்பர் – 7 ரசியப் புரட்சி நாள்! உலக உழைக்கும் மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய நாள்!


வரலாறு காலத்திற்கேற்ப நம்மிடம் மாறுபட்ட கேள்விகளைக் கேட்கிறது. “மாற்றம் வேண்டுமா?” என்ற கேள்விக்கு நாம் எல்லோரும் “ஆம்” என்று பதில் சொல்லிவிட்டோம். ஆனால் “அந்த மாற்றத்தை எப்படி சாதிப்பது?” என்ற கேள்விதான் வரலாற்றில் நமது இடத்தை தீர்மானகரமாக நிர்ணயிப்பதாக இருக்கிறது. இந்த கேள்விக்கு இந்தியா முழுவதும் எத்தனை விதமான கட்சிகள், இயக்கங்கள் இருக்கின்றதோ, அத்தனை விதமான பதில்கள் இருக்கும். ஆனால், புறநிலை யதார்த்தமானது ஒன்றுதான்; தீர்வுக்கான இயக்கவியல் பூர்வமான வழி என்பதும் ஒன்று தான் இருக்க முடியும்.

அந்த வழியென்பது, “இந்த தேர்தல் முறையும் அரசியலமைப்பும் தான்  ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் பாசிசம் வேர்விட்டு வளர வாய்ப்பளித்தது. இந்த ஜனநாயகமற்ற அரசமைப்பு தான் அதைப் பாதுகாக்கிறது. இதற்கு மாற்றாக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து  பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிறுவும் வகையில் பலதரப்பட்ட போராட்டங்களை ஒருங்கிணைந்து நடத்தவேண்டும்” என்பதுதான்.

இந்த தீர்வினை மக்களுக்கு பல்வேறு வகையான பிரச்சாரங்கள் மூலமாக விளக்கி,  தேர்தல் அமைப்பிற்கு வெளியே மக்கள் திரளை அமைப்பு ரீதியாக திரட்டி, நிறுவன ஒழுங்கமைப்புடன் போராட்டங்களை மேற்கொள்ளல் என்பது பெரும் இயக்கப்பணியாகும். இப்படியொரு மக்கள் இயக்கத்தை கட்டியமைக்க சித்தாந்த ரீதியாக வலுவான அமைப்பு என்பது எத்தனை அவசியமானது என்று வரலாற்றில் இதுவரை நடத்தப்பட்ட புரட்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக ரஷ்யப் புரட்சியின் போல்ஷிவிக் கட்சியின் பாத்திரம், அதன் சித்தாந்த‌ வலிமை, லெனினின் மேதமை போன்றவை பற்றிய தெளிவான புரிதல்,  நடப்பு காலத்தில் நமது நாட்டின் நிலையை செழுமையாகப் புரிந்துகொள்ள உதவும்; தேர்தலுக்கு வெளியிலான ஒரு இயக்கம் சாத்தியம் என்பதை உணர்ந்தும்.

அதற்காகத் தான் ரஷ்யப் புரட்சியின் வரலாற்றை பற்றிய இந்த தொடரை கொண்டுவருகிறோம்.

இந்த தொடரை எழுதுவதற்கான பெரும்பாலான விவரங்கள் ஜான் ரீட் எழுதிய “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.

(தொடரும்..)


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க