ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவில் (Expert Appraisal Committee – EAC) அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy Limited – AGEL) நிறுவனத்தின் முக்கிய ஆலோசகரான ஜனார்தன் சவுத்ரி (Janardan Choudhary) இடம்பெற்றுள்ளார். இக்குழுவானது (EAC) சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் திட்டங்களை மதிப்பீடு செய்து பரிந்துரை வழங்கும் பணியைச் செய்யும்.
ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் நீர்மின்சாரம் மற்றும் நதி பள்ளத்தாக்கு திட்டங்களுக்கான நிபுணர் மதிப்பீட்டுக் குழுவை செப்டம்பர் 27 அன்று மறுசீரமைத்தது. அதன் ஏழு நிறுவனம் சாரா உறுப்பினர்களில் ஒருவராக ஜனார்தன் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய நீர்மின் சக்தி நிறுவனத்தில் (National Hydroelectric Power Corporation) 36 ஆண்டுகள் பணியாற்றிய ஜனார்தன் சவுத்ரி, தொழில்நுட்ப பிரிவில் இயக்குநராக இருந்து கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஓய்வு பெற்றார். அதன் பிறகு 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதானி நிறுவனத்தின் முழுநேர ஆலோசகராகப் பொறுப்பேற்றார். இந்த ஜனார்தன் சவுத்ரி தற்போது இடம்பெற்றுள்ள நிபுணர் குழுதான், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் திட்டங்களை மதிப்பீடு செய்து, அவற்றின் தாக்கங்களை அளவிட்டு அரசுக்கு பரிந்துரை வழங்கப்போகிறது.
மறுசீரமைக்கப்பட்ட EAC குழுவின் கூட்டம் அக்டோபர் 17-18 அன்று நடைபெற்றது. அதில் மகாராஷ்டிராவின் சதாரா (Satara) மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள அதானியின் AGEL-இன் 1500 மெகாவாட் தரலி பம்பிங் சேமிப்புத் திட்டம் (Tarali pump storage project) பரிசீலனைக்கு வந்தது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த அக்கூட்டத்தில், அக்டோபர் 17 அன்று ஜனார்தன் சவுத்ரி பங்கேற்றார். அதைக் கூட்டக் குறிப்புகள் உறுதி செய்கின்றன.
அதானி நிறுவன ஆலோசகருக்கு நிபுணர் மதிப்பீட்டுக் குழுவில் பொறுப்பு தரப்பட்டுள்ளதற்கும், அவர் இக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டதற்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விசயம் தற்போது பேசு பொருளானதும், அதானி நிறுவனத்தின் திட்டத்திற்கான விவாதத்தின்போது அதில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டதாக ஜனார்தன் சவுத்ரி ஒரு வியக்கத்தக்க விளக்கத்தை அளித்துள்ளார். இருப்பினும், அவர் கூட்டத்திலிருந்து விலகியதாக கூட்டக் குறிப்புகளில் குறிப்பிடப்படவில்லை. இது குறித்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகமும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, கேரள காங்கிரஸ் கட்சி ஆகியோர் ”இந்த குழு அதானியின் ஆறு திட்டங்களுக்கு (10,300 மெகாவாட்) ஒப்புதல் அளித்துவிடும்” என்று தங்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் விமர்சனங்களைப் பதிவிட்டுள்ளனர்.
படிக்க: நேரத்திற்கு ஏற்ப மின் கட்டணம்: அதானி மயமே மோடியின் இலட்சியம்!
ஏற்கெனவே, அதானி குறித்து கேள்வி எழுப்பியதற்காக ராகுல் காந்தி பதிவிநீக்கம் செய்யப்பட்டார்; மஹுவா மொய்த்ரா மக்களவை நெறிமுறைக் குழுவால் விசாரிக்கப்பட்டு பதவிநீக்கம் செய்யப்படும் தறுவாயில் உள்ளார். இது அதானிக்கும் பாசிச மோடி அரசிற்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியது.
தற்போது ஒன்றிய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவில் அதானி நிறுவனத்தின் ஆலோசகரான ஜனார்தன் சவுத்ரி நியமிக்கப்பட்டிருப்பதானது அதானியும் பாசிச மோடி அரசும் வேறல்ல என்பதைப் பட்டவர்த்தனமாக்கியுள்ளது. அதானி நிறுவனத்தில் பணிபுரிந்த நபரே அதானி நிறுவனத்தின் திட்டங்களுக்கு பச்சைக் கொடி காட்டுவாராம். அடடா! என்னவொரு ஜனநாயகம்!!
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube