”ஜி.எஸ்.டி வரி” என்பதே ஒரு மோசடி! அதை வைத்து கொள்ளையடிக்கும் குற்றவாளிகள்!

லஞ்சம், ஊழலில் ஊரிப்போயுள்ள இந்த அரசு அதிகாரிகள் இதை கண்டுகொள்ள போவதில்லை. எனவே உழைக்கும் மக்களாகிய நாம்தான் மக்களுக்கு விரோதமான ஜிஎஸ்டி வரிமுறையை கேள்வியெழுப்ப வேண்டும்.

narendra-modi-gst

மோசடிக்கு அழைத்து செல்லும் ஜி.எஸ்.டி வரி!

ஜிஎஸ்டி நடைமுறைபடுத்திய பின்பு பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்று கூறிவந்த நிதியமைச்சர் முதல் மோடியின் விசிறிகள் வரை இந்த மோசடிக்கு என்ன சொல்ல காத்துருக்கின்றனர் என்று தெரியவில்லை.

“எளிமையான வரி” மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என்று முழங்கிகொண்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு “ஒரே நாடு, ஒரே வரி” என்னும் வரிக்கொள்கைக் கொண்டு வந்தது ஒன்றிய அரசு. எந்தவொரு வணிகத்தின் விற்பனை வரம்பும் ரூ.40 லட்சம், ரூ.20 லட்சம் அல்லது ரூ.10 லட்சத்தை தாண்டினால், வணிக உரிமையாளர் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் தன்னை ஒரு சாதாரண வரிக்கு உட்பட்ட நபராக பதிவு செய்ய வேண்டும். சில வணிகங்களுக்கு ஜிஎஸ்டி பதிவு கட்டாயமாகும்.

ஜிஎஸ்டி பதிவு இல்லாமல் ஒரு நிறுவனம் வணிகத்தை மேற்கொண்டால் அது குற்றமாக கருதப்படும். உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் என பல்வேறு வகையிலான ஜிஎஸ்டி வரி விதிப்பட்டது. இதில், பின்னலாடைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. பின்னலாடை நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி அடையாள எண் (GSTIN) கட்டாயமாக்கப்பட்டது.

படிக்க : உலகக் கோப்பை: உண்மையில் தோற்றது மோடி கும்பல்தான்! | தீரன்

ஆதனால், திருப்பூரில் ஏழைப் பெண்கள் பெயரில் போலி ஜிஎஸ்டி கணக்கு தொடங்கி, கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் செய்து வரி ஏய்ப்பு மோசடி நடத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஏழைப்  பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத்  தொகை பெற விண்ணப்பித்து, அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னணியில் இந்த மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், நடராஜா தியேட்டர் அருகே நொய்யல் ஆற்றங்கரை, பெத்தி செட்டிபுரம் பகுதியில் குடியிருந்து வரும் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். தங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த அப்பெண்கள், பொது இ-சேவை மையத்திற்குச் சென்று எதற்காக தங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்று விசாரித்துள்ளனர்.

இதில், 84 பெண்களின் பெயரில் நிறுவனங்கள் நடத்துவதாலும், ஒவ்வொருவரும் பணப்பரிமாற்றம் செய்து ஜிஎஸ்டி கணக்கு வைத்திருப்பதாலும் அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியில்லை என்று விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

சாதாரண பனியன் தொழிலாளர்கள், கூலி வேலைக்குச் செல்லக் கூடியவர்கள் என்ற ஏழ்மை நிலையில் இருக்கும் நபர்களுக்கு ஜிஎஸ்டி கணக்கு இருப்பது வேடிக்கையாக உள்ளது.

நீர்நிலைப் புறம்போக்குகளில் குடியிருக்கும் அவர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக பல்லடத்தைச் சேர்ந்த சிவக்குமார், கார்வேந்தன், விஜயகுமார், தமிழ்செல்வன் என்ற கும்பல் மேற்படி பெண்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரம், பான் அட்டை ஆகியவற்றை கேட்டுப் பெற்றுள்ளனர்.

எனவே, இவர்கள்தான் தங்கள் பெயரில் போலி நிறுவனங்கள் தயார்செய்து ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று அப்பெண்கள் மேற்கூறிய நபர்கள் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, பின்னலாடை சரக்குகளுக்கு 5 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பு  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருந்தாலோ, 10 கிலோ மீட்டருக்கு மேல் சரக்குகளை வாகனங்களில் எடுத்துச் சென்றாலோ ‘இ-வே பில்’ எனப்படும் மின்னணு பில் உருவாக்கப்பட வேண்டும். திருப்பூரில் வணிகவரித்  துறையினர் சோதனை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜிஎஸ்டி கணக்கு,  இ-வே பில் காட்டி தப்புவதற்காக, இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

படிக்க : 40 தொழிலாளிகளை காப்பாற்ற துப்பில்லாத மோடி அரசு! | வெற்றிவேல்செழியன்

இதுமட்டுமின்றி, 2020-21 காலாண்டில் மட்டும் 35,000 கோடி மோசடி நடந்துள்ளது. போலி விலைப்பட்டியல், மின்சார கட்டணம் போன்ற வழிகளில் இதுவரை 8,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.62,000 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி எனும் பெயரில், சிறு, குறு தொழில் நிறுவனங்களை அழித்து, பெரும் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி, வரி சலுகைகள் என உழைக்கும் மக்களின் மீது மிகப்பெரும் ஒடுக்குமுறையை நிகழ்த்தி கொண்டிருக்கிறது ஒன்றிய மோடி அரசு. மறுபுறம், இப்படிபட்ட மோசடி பேர்வழிகளையும் உருவாக்குகிறது.

லஞ்சம், ஊழலில் ஊரிப்போயுள்ள இந்த அரசு அதிகாரிகள் இதை கண்டுகொள்ள போவதில்லை. எனவே உழைக்கும் மக்களாகிய நாம்தான் மக்களுக்கு விரோதமான ஜிஎஸ்டி வரிமுறையை கேள்வியெழுப்ப வேண்டும்.

”வேண்டாம் ஜிஎஸ்டி; வேண்டும் ஜனநாயகம்” என முழங்குவோம்!
இதனை மக்கள் முழக்கங்களாக்குவோம்!

ஆதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க