ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பொலங்காளிப்பாளையம் இந்திரா நகரில் குடியிருக்கும் நவீன்குமார் (வயது 17) என்பவர் JKKM பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நவீன்குமாரின் உறவினரான கிருபாகரன் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கடுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த கவுண்டர் சாதியை சேர்ந்த கார் மெக்கானிக், அருந்ததியர் கூலித்தொழிலாளி கிருபாகரனை பார்த்து அடிக்கடி “என்னடா சக்கிலி பயலே?” என்று கூறி மிரட்டி தனது சாதித் திமிரை வெளிபடுத்தி வந்துள்ளான்.
20.11.2023 அன்று இரவு நவீன்குமாரும், கிருபாகரனும் வெங்கமேடு என்னுமிடத்தில் உட்கார்ந்து மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர். அதே நேரத்தில், அந்தப் பக்கமாக வந்த அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 4 பேர், கிருபாகரனை பார்த்து “என்னடா சக்கிலி பயலே எங்க உட்கார்ந்து தண்னி அடிக்கிற?” என சாதிப் பெயரை சொல்லி இழிவாக பேசியுள்ளனர். போதையில் இருந்த கிருபாகரன் திருப்பி கேள்விகேட்க இருதரப்பினருக்கிடையே அடிதடி சண்டையாக மாறியுள்ளது. நவீன்குமார், கிருபாகரன் இருவரையும் கொடூரமாக தாக்கிவிட்டு ஸ்கூட்டரையும், செல்போன்களையும் எடுத்து சென்றுள்ளனர். இரவு ஊருக்கு செல்ல முடியாமால் டேங்க் அடியில் படுத்து உறங்கியுள்ளனர்.
21.11.2023 அன்று அதிகாலையில் தனது பொருட்களை பறித்துச் சென்ற நபரைப் பார்த்து “அண்ணே ஸ்கூட்டரையும், செல்போன்களையும் தாங்க” என இரண்டு இளைஞர்களும் கேட்டுள்ளனர். இங்கேயே இரு என சொல்லிவிட்டு ஊருக்குள் சென்ற அந்த நபர் தன்னோடு 7 பேரை அழைத்து வந்துள்ளார். அந்த 7 பேரில் இருந்த ஒருவருக்கும் கிருபாகரனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. “ஏண்டா சக்கிலி தாயோலி எங்கள் ஊரில் படுத்ததும் இல்லாம எங்கள எதிர்த்து பேசுவியா” என பிளாஸ்டிக் பைப்பில் இரும்புக் கம்பியை சொருகி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ”உன்னையும் அவனையும் கொன்று விடுவேன்” என்று சொல்லி அடித்துக் கொண்டிருக்கும் போதே, பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாகக் கூடிவிட்டனர். பஞ்சாயத்து தலைவரின் கணவர் கண்ணுசாமி (கடுக்காம்பாளையம்) அவரின் மகன் மற்றும் பலர் சேர்ந்து மயக்கம் வரும்வரை அடித்துள்ளனர். மயங்கிய நிலையில் தண்ணீர் கேட்கும் போது “இந்தாட சக்கிலி நாயே” என்று திட்டியவாறு வாயில் சிறுநீரை கழித்துள்ளனர்.
படிக்க: கிடாரிபட்டி ஆதிக்க சாதி வெறியாட்டம்! சாதி வெறியர்களை வாழ்நாள் சிறையில் அடை! | தோழர் ரவி
இச்சம்பவத்தைக் கடுக்கம்பாளையம் கவுண்டர் சாதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். இருவரையும் தாக்கும்போதே “இவனுங்க மீது ஏற்கனவே கோழி திருட்டு வழக்கு இருக்கிறது” என்று கூற, அப்பகுதி மக்கள் “சக்கிலி பயலுக திருட தான் வந்திருக்காங்க” என பேச ஆரம்பித்துள்ளனர். அதில் ஒருவர் “ஏண்டா சக்கிலி பயலுகளை இப்படி போட்டு அடிக்கிறீங்க செத்து போயிடுவான், நீங்க எல்லாம் ஜெயிலுக்கு போகனும்” என்று சொன்ன பிறகு போலீசு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசு அதிகாரி ஒருவர் அந்த இருவரையும் அதே இடத்தில் மயக்க நிலையில் இருக்கும் போது விசாரணை என்ற பெயரில் கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டார். இந்தக் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. பலரும் அந்த போலிசு அதிகாரியின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்துள்ளனர். அந்த அதிகாரியும் தனது பங்கிற்கு சாதித் திமிரைக் காட்டியுள்ளார் என்பதைக் காண முடிகிறது.
அதே பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவரின் வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக திருடர்கள் வந்த சம்பவத்தையும், ஏற்கெனவே கிருபாகரன் மீது போடப்பட்ட கோழி திருட்டு பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததையும் இணைத்து 379 IPC பிரிவில் தற்போது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், செட்டிப்பட்டி, கவுண்டம்பாளையம் அருகிலுள்ள பகுதியை சேர்ந்த கவுண்டர் சாதியினர் தினகரன் செய்தியாளரான கவுண்டர் சாதி ரமெஷ்-யை அழைத்து “நள்ளிரவில் கோழிகளை திருட வந்து கரும்புக் காட்டில் பதுங்கிய 2 வாலிபர்கள், விடிய விடிய காத்திருந்து பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்” என போலிசின் பொய் வழக்கையும் இணைத்து செய்தியை கொடுத்து தினகரன் செய்தித்தாளில் வெளியிட வைத்துள்ளனர். கவுண்டர் சாதிவெறியினருக்கு ஆதரவாக பிற ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
படிக்க: ஏலே இங்க வாங்கலே! நீங்க என்ன சாதிலே! தென்மாவட்டங்களின் ஆதிக்க சாதிய குரல்
மாணவர் நவீன்குமாரையும், கிருபாகரனையும் வி.சி.க மற்றும் சில அமைப்பினர் நேரில் விசாரித்து, அருந்ததியர் இளைஞர்கள் மீது கவுண்டர் ஆதிக்க சாதிவெறிக் கும்பல் நடத்திய தாக்குதலை வெளிக்கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட கவுண்டர் சாதிவெறியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனையறிந்த கவுண்டர் சாதி சங்கங்கள், இந்து முன்னனி, தி.மு.க, காங்கிரஸ், கொங்கு பேரவை போன்ற கட்சிகளைச் சேர்ந்த கவுண்டர் சாதிவெறி நிர்வாகிகள் குற்றவாளிகளை வன்கொடுமை வழக்கிலிருந்து தப்பவைக்க 500க்-கும் மேற்பட்ட நபர்களைத் திரட்டி சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அருந்ததியர் இளைஞர்கள் கொடுத்த தீண்டாமை வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு போலீசு அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரிடம் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறச் சொல்லியுள்ளனர் போலீசு அதிகாரிகள். மேலும், மருத்துவரை வைத்து கிருபாகரன் கையில் கட்டு போட வைத்துள்ளனர்.
இந்து முன்னணி, கவுண்டர் சாதி சங்கங்கள், ஆளுங்கட்சியான தி.மு.க, காங்கிரஸ் நிர்வாகிகளும் அருந்ததியர் இளைஞர்களை தாக்கிய கவுண்டர் சாதியினருக்கு ஆதரவாக நிற்கின்றனர். கவுண்டர் சாதிவெறியர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் வேலை செய்து வந்துள்ளது அம்பலப்படுத்தப்பட வேண்டும். நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பல் சாதிவெறி, இனவெறி, மதவெறி கலவரங்களை நடத்தும் வாய்ப்புக்காகத் துடித்துக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் வளர சாதி கலவரங்களை நடத்த முயற்சித்து வரும் வேலையில் பாசிசக் கும்பலை எதிர்ப்பதாக வீழ்த்துவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகள் கவுண்டர் சாதிவெறி தாக்குதலுக்கு உடந்தையாக இருப்பது பாசிஸ்டுகள் வளர்வதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசியல் கட்சி நிர்வாகிகள் மீதும், ஆதிக்க சாதிவெறியர்களை ஊக்குவிக்கும் விதமாக நடந்துக்கொண்ட போலீசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கபட வேண்டும். அப்பகுதியில் இயங்கும் சாதி சங்ககளை உடனடியாக தடை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போது அதிகரித்து வரும் சாதிவெறித் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டுமானால் அனைத்து பகுதியிலுள்ள சாதி சங்ககளைத் தடை செய்வதற்கான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube