ராமரும் பசுவும் எங்களுடையது! சத்தீஸ்கர், ராஜஸ்தான் காங்கிரஸ்

“கோதான் நியாய யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் பசு மாடுகளின் சாணம் மற்றும் கோமியத்தை விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களிடமிருந்து சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசே விலைக்கு வாங்கிக் கொள்கிறது.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 7

த்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஒருபுறம் கவர்ச்சிவாத திட்டங்களை அறிவித்து வரும் காங்கிரஸ், மறுபுறம் இந்துத்துவ அரசியல் சார்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்துக்களின் புனித கடவுளான ராமரையும், இந்துக்கள் புனிதமாக கருதும் பசுவையும் சுவீகரித்துக் கொண்டு சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் மக்களின் வாக்குகளை கவர முயற்சி செய்கிறது.

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், “ராமரின் அம்மா கெளசல்யாவின் தாய்வீடு சத்தீஸ்கர் மாநிலம் தான். ராமர் வனவாசம் சென்றபோது நீண்ட காலம் இருந்தது இங்குதான்” என்று உரிமை கொண்டாடுகிறார். ராமர் வனவாசம் சென்ற பாதையில் இருக்கும் பத்து இடங்களை அழகுபடுத்தி, அங்கெல்லாம் ராமர் சிலைகளை வைத்து வழிபாடு மற்றும் சுற்றுலாத் தளமாக மாற்ற காங்கிரஸ் அரசே ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

“கோதான் நியாய யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் பசு மாடுகளின் சாணம் மற்றும் கோமியத்தை விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களிடமிருந்து சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசே விலைக்கு வாங்கிக் கொள்கிறது.

ராஜஸ்தானில் இருக்கும் 33 மாவட்டங்களிலும் தலா இரண்டு சுற்றுலா பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட். இந்த பூங்காக்களுக்கு ராமரின் மகன்களின் பெயர்களைக் கொண்டு “லவ குச வாடிகா” என்று பெயர் சூட்டியுள்ளார், கெலாட். ராஜஸ்தான் மாநிலம் முழுக்க பசுப் பாதுகாப்பு மையங்கள் அமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.


படிக்க:ஐந்து மாநிலத் தேர்தல் காங்கிரஸின் இலவச, கவர்ச்சிவாத வாக்குறுதிகள்


மேலும் 60 வயது தாண்டிய முதியவர்கள் புனிதயாத்திரையாகக் கோயில்களுக்குச் செல்ல அரசு நிதியுதவி, புஷ்கர் பிரம்மா கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்களைப் புனரமைக்க நிதி ஒதுக்கியது, வேத வித்யாலயா, சமஸ்கிருத வித்யாலயா ஆகிய பெயரில் பல்கலைக்கழகங்கள், கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு தனி நலவாரியம் என்ற திட்டங்களை அறிவித்து தாங்கள் இந்துக்களுக்கு ஆதரவானவர்கள் என்ற கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருகிறது, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு.

நம்புங்கள்! காங்கிரஸ் ’மதச்சார்பின்மை’யை கொள்கையாகக் கொண்டுள்ள கட்சி!!


எட்வின்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க