ஐந்து மாநிலத் தேர்தல் காங்கிரஸின் இலவச, கவர்ச்சிவாத வாக்குறுதிகள்

இலவச கவர்ச்சிவாத வாக்குறுதிகளை எல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்பதை மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு சாதகமாக கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது காங்கிரஸ். தேர்தல்களில் பிரச்சாரமும் செய்தது.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 6

த்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன் தள்ளுபடி, நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 10,000 வழங்குவது, பெண் சுய உதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தருவது, 200 யூனிட் இலவச மின்சாரம், 500 ரூபாய்க்கு வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு உருளை போன்ற இலவச கவர்ச்சிவாத வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு உருளை விலையை 500 ரூபாயாக குறைத்தல், பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 1,500 வழங்குதல், 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் போன்ற வாக்குறுதிகளை மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸால் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 2,000 வழங்குவது, வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு உருளை விலையை 500 ரூபாயாக குறைத்தல், 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி, பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம், அனைத்து மாணவர்களுக்கும் இலவச இணைய வசதி போன்ற வாக்குறுதிகளை தெலுங்கானாவில் அறிவித்துள்ளது, காங்கிரஸ்.


படிக்க:தெலுங்கானா தேர்தலில் தாக்கம் செலுத்திய “பீ டீம்” அரசியல்!


மேலும், மூத்த குடிமக்கள், விதவைகள், ஊனமுற்றோர், பீடி தொழிலாளர்கள், நெசவாளர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது, காங்கிரஸ்.

ராஜஸ்தானில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, அதில் 4 லட்சம் வேலைவாய்ப்புகளை அரசுத்துறையில் உருவாக்குவது, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது, சிரஞ்சீவி மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கான தொகையை ரூபாய் 25 லட்சத்திலிருந்து 50 லட்சமாக இரட்டிப்பாக உயர்த்துதல் போன்ற வாக்குறுதிகள் காங்கிரஸால் அறிவிக்கப்பட்டுள்ளன.

சத்திஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலுங்கானாவில் வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு உருளை விலையை 500 ரூபாயாக குறைப்பதாக வாக்குறுதி அளித்துள்ள காங்கிரஸ், மிசோரத்தில் 750 ரூபாயாக குறைப்பதாக அறிவித்துள்ளது. முதியோர் ஓய்வூதியம் மாதத்திற்கு 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேற்கூறிய இலவச கவர்ச்சிவாத வாக்குறுதிகளை எல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்பதை மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு சாதகமாக கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது காங்கிரஸ். தேர்தல்களில் பிரச்சாரமும் செய்தது.

விவசாயத்தில் மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமாக அமல்படுத்தப்படுதல், கல்வியில் புதியக் கல்விக் கொள்கை மற்றும் நீட், கியூட் போன்ற நுழைவுத் தேர்வுகள் திணிப்பு, வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி, தொழிலாளர்களுக்கு தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், மின்சாரத் திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம், நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு, இஸ்லாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்குவதற்கான சட்டங்கள் போன்ற பாசிச சட்டங்கள் மோடியின் ஒன்பதரை ஆண்டுகால ஆட்சியில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. இச்சட்டங்கள் எல்லாம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக உள்ளன.

இவை சாதாரண சட்டங்கள் அல்ல. இந்துராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானங்கள். மோடியின் பாசிச ஆட்சியை வீழ்த்துவதன் பொருள் இந்துராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானத்தை தகர்த்தெறிவதே ஆகும்.

ஆனால் மோடியின் பாசிச ஆட்சியை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்தப்போவதாக கூறும் காங்கிரஸ், நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படும் ஐந்துமாநிலத் தேர்தலில் மக்களின் கோரிக்கைகளைப் பற்றி பேசவில்லை. மாறாக, இலவச கவர்ச்சிவாத வாக்குறுதிகளை அறிவித்து மக்களின் வாக்குகளை கவர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றால் போதும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.


தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க