இந்துத்துவ கட்சியைப் போல செயல்படும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சி!

கோயில் மற்றும் அர்ச்சகர் பிரிவு என்ற ஒன்றும் இருக்கிறது. கோயில் நிர்வாகங்கள் அரசின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இயங்குவதற்காக இந்தப் பிரிவு போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை ஒழிக்கப்படும் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறிவருவதைத் தான் மத்தியப்பிரதேச காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 11

த்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தன்னை இந்துக்களுக்கு ஆதரவானவர்கள், இந்துத்துவ சித்தாந்தத்திற்கு ஆதரவானவர்கள் என்று மக்களிடம் நிரூபித்துக் கொள்வதன் மூலம் வாக்குகளை அறுவடை செய்யும் யுக்தியை மேற்கொண்டது. பா.ஜ.க.வுடன் போட்டிபோட்டுக் கொண்டு இந்துத்துவ பிரச்சாரம் செய்தது.

மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூரில் நர்மதை நதியில் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்திவிட்டு தான் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தை பிரியங்கா காந்தி ஆரம்பித்து வைத்தார். அனுமன் வேடமிட்ட ஒருவர் கையில் கதையை எடுத்துவந்து பிரியங்கா காந்தியிடம் கொடுத்தார்.

“தேர்தல் நேரத்தில் மட்டும் தான் பா.ஜ.க.வினர் இந்துக்கள் பற்றிப் பேசுகிறார்கள். பெண்கள் பாதுகாப்பு, பசுப் பாதுகாப்பு என்று பேசுகிறார்கள். அவர்கள் போலி தேசப் பக்தர்கள்” என்று தன்னுடைய பிரச்சாரத்தில் கருத்துகளை வெளிப்படுத்தும் பச்சையான இந்துத்துவவாதியான ராம் சியா பாரதியை காங்கிரஸ் தன்னுடைய வேட்பாளராக மத்தியப்பிரதேசத்தில் அறிவித்துள்ளது காங்கிரஸ்.


படிக்க:எதிர்கட்சிகளே, ஒத்த முடிவுக்கு வாருங்கள்!


36 வயதாகும் ராம் சியா பாரதி மத்தியப் பிரதேச மாநில மல்ஹாரா சட்டமன்றத் தொகுதி வேட்பாளர். உணர்ச்சிகரமாக ராம கதை, பாகவத் கதை சொல்வதன் மூலம் மத்தியப் பிரதேசத்தின் கிராமப்புறங்கள் வரை புகழ்பெற்றவர் இவர். பாடல்களும் கதையுமாக அவர் நிகழ்த்தும் ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்க ஏராளமான பெண்கள் கூட்டம் வரும். பிரச்சார மேடைகளில் அதே போல கதை சொல்லி, கதையின் இடையில் மக்கள் பிரச்சனைகளைச் சொல்லி ஓட்டு கேட்கிறார். தன் உரையை ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்துடன் ஆரம்பித்து ஜெய் ஸ்ரீ ராம் சொல்லியே முடிக்கிறார்.

சமீபத்தில் பஜ்ரங் சேனா என்ற பாசிச அமைப்பும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துக் கொண்டுள்ளது. இந்து ஒற்றுமை மற்றும் பசுப் பாதுகாப்பு என்ற நோக்கங்களுடன் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸில் இணைந்ததற்கு இந்துகளை ஒற்றுமையுடன் பாதுகாக்க சிறந்த கட்சி என்று அதன் நிர்வாகிகள் காரணம் கூறினர். பாசிசத்தை வீழ்த்தப் போவதாக அறிவித்துக்கொள்ளும் காங்கிரஸ், ஒரு பாசிச அமைப்பையே தேர்தல் வெற்றிக்காக தன்னுடைய கட்சியில் இனைத்துக் கொண்டது, மத்தியப்பிரதேச காங்கிரஸ்.

மேற்கூறிய நடவடிக்கைகளுக்கு மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியே ஒரு இந்துத்துவ கட்சியை போல செயல்பட்டு வருவதுதான் காரணம். இக்கட்சியில் மத மற்றும் திருவிழாக்கள் பிரிவு என்று ஒரு பிரிவு தனியாக இருக்கிறது. இந்த பிரிவு பல இடங்களில் இந்து மதம் சார்ந்த பிரசங்க நிகழ்ச்சிகளை நடத்துகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இத்தகைய பிரசங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள்.

மேலும் கோயில் மற்றும் அர்ச்சகர் பிரிவு என்ற ஒன்றும் இருக்கிறது. கோயில் நிர்வாகங்கள் அரசின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இயங்குவதற்காக இந்தப் பிரிவு போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை ஒழிக்கப்படும் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறிவருவதைத் தான் மத்தியப்பிரதேச காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது.

மேற்கூறிய அடிப்படையில் இருந்துதான், மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களையும் நடவடிக்கைகளையும் நாம் பார்க்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு தங்களை மாற்று என்று தங்களை முன்னிறுத்துக் கொண்டு பா.ஜ.க ஆட்சியின் மீதுள்ள வெறுப்பை வாக்குகளாக அறுவடை செய்துக்கொள்ளும் காங்கிரஸ், மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க.வின் இந்துத்துவ அரசியலுக்கு எந்த வகையில் மாற்றாக இருக்கிறது; பா.ஜ.க.வுடன் போட்டிபோட்டுக் கொண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்துத்துவ அரசியலை பிரச்சாரம் செய்து வருகிறது.

குப்பு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க