மிக்ஜாம் புயல் பாதிப்பு: நொச்சிக்குப்பம் மக்கள் போராட்டம்!

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேசுகையில், “புயல் மசூலிப்பட்டினம் (ஆந்திரா) சென்றுவிட்டது. ஆனால், இங்கு குடிக்க தண்ணீர் இல்லை. கழிவறைக்கு தண்ணீர் இல்லை. பிள்ளைகள் காய்ச்சலால் அவதிபடுகிறார்கள். அவர்களுக்கு டீ வாங்கித்தர கூட வழியில்லை” என்று கதறுகின்றனர்.

சென்னையை ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டுள்ளது மிக்ஜாம் புயல். புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் கிடைக்காமல் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியை அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் (ஹவுசிங்போர்டு) தங்கியுள்ள மக்கள் கடந்த மூன்று நாட்களாக மின்சாரமின்றி, குடிநீர் இன்றியும் உண்ண உணவின்றியும் தவித்து வருகின்றனர். கழிவறைகளில் தண்ணீர் வசதியின்றி பெண்கள் உட்பட அனைவரும் அவதியுற்று வருகின்றனர். பலர் தங்கள் குழந்தைகளுக்கு பால் கூட வாங்கமுடியாமல் மூன்று நாட்களாக  தவித்து வருகின்றனர்.

இன்று(5.12.23) காலை வரை இப்பகுதிக்குள் எந்தவித அடிப்படை வசதிகளும் கொண்டு செல்லப்படவில்லை. தன்னார்வலர்களும் இளைஞர்களும் அப்பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கி வருகின்றனர். அவை அனைத்து மக்களுக்கும் போதுமானதாக இல்லை.

மீனவ மக்கள் குவிந்து வாழும் இந்த நொச்சிக்குப்பம் பகுதியிலிருந்துதான் சென்னை முழுக்க மீட்பு பணிக்கு படகுகள் எடுத்துசெல்லப்படுகிறது. மாநகராட்சியின் உத்தரவின் பேரில் மீட்பு பணிகளுக்கு அப்படகுகளை எடுத்துசெல்ல இப்பகுதி முழுவதும் லாரிகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. ஆனால், இம்மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர  ஆளும் தி.மு.க. அரசுக்கு நேரமில்லை.

இதனையடுத்து, இப்பகுதி மக்கள் இரவு 7 மணியளவில் உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேசுகையில், “புயல் மசூலிப்பட்டினம் (ஆந்திரா) சென்றுவிட்டது. ஆனால், இங்கு குடிக்க தண்ணீர் இல்லை. கழிவறைக்கு தண்ணீர் இல்லை. பிள்ளைகள் காய்ச்சலால் அவதிபடுகிறார்கள். அவர்களுக்கு டீ வாங்கித்தர கூட வழியில்லை” என்று கதறுகின்றனர்.

இந்நிலையில், மக்கள் போராட்டம் நடத்திய ஒரு மணி நேரத்தில் போராட்டம் நடைபெற்ற சாலையில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும், மீதமுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை.

போராட்டம் நடத்திய ஒரு மணி நேரத்திற்குள் மின்சாரம் வழங்க முடிகின்றது என்றால் அதற்கு முன் ஏன் அதை செய்யவில்லை?

புயல் காரணமாக, நேற்று முந்தைய நாள்(3.12.23) இரவு துண்டிக்கப்பட்ட மின்சாரம், இன்று(5.12.23) காலையே குரோம்பேட்டை, எழும்பூர், திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் மேட்டுக்குடி மக்கள் வாழும் பகுதிகளில் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளிலோ இன்னும் மீட்புப்பணி கூட முழுமையாக நிறைவடையவில்லை. பல இடங்களுக்கு இன்னும் அரசின் மீட்புக்குழுவே செல்லவில்லை. பலர் இன்னமும் உணவு, தண்ணீர், மின்சாரம் இன்றியும் வெள்ளம் சூழ்ந்து வெளியே வரமுடியாமலும் தவித்து வருகின்றனர்.

நொச்சிக்குப்பம் மட்டுமின்றி, மேற்கு தாம்பரம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் முழுமையாக நீர் வடியவில்லை. நொச்சிக்குப்பத்திலேயே மூன்று நாட்கள் பெய்த மழையில் வீடுகளின் சுவர்கள் தண்ணீரில் ஊறி வீடுகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. நேற்று(4.12.23) இரவு இப்பகுதியில் பாரதி என்ற 55 வயது நபர் வீடு இடிந்து விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

மழைநீர் வடிகால் பணிக்கு ரூ.4,000 கோடி செலவு செய்ததாக சுயத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது தி.மு.க. அரசு. சமூக வலைத்தளங்கள் – திமுக ஆதரவு ஊடகங்கள் அனைத்தும் வெள்ளம் வடிந்த இடங்களை காட்டி விட்டு, அவதிபடும் மக்களை பற்றிய செய்தி கூட போடுவதில்லை. இந்த வக்கிரத்தை நாம் என்னவென்று சொல்வது!

“உடனே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடு!”

“வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் மக்களை உடனே மீட்க நடவடிக்கை எடு!”

என்பதே சென்னை உழைக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.


வினவு களச்செய்தியாளர்கள

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க