டந்த நவம்பர் மாதம் 20-ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் நவீன்குமார் மற்றும் மெக்கானிக் கிருபாகரன் ஆகிய இருவரும், தங்களைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியதை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக கவுண்டர் சாதியைச் சேர்ந்த வெறியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

“ஏண்டா சக்கிலி தாயோலி எங்கள் ஊரில் படுத்ததும் இல்லாம எங்கள எதிர்த்து பேசுவியா” எனக் கத்திக்கொண்டே பிளாஸ்டிக் பைப்பில் இரும்புக் கம்பியை நுழைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்; மயக்கம் வரும் வரை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மயங்கிய நிலையில் குடிக்கத் தண்ணீர் கேட்ட இரண்டு இளைஞர்களின் வாயிலும் “இந்தாட சக்கிலி நாயே” என்று சிறுநீர் கழித்துள்ளனர், ஆதிக்க சாதிவெறி தலைக்கேறிய கவுண்டர் சாதிவெறியர்கள்.

ஆதிக்க சாதிவெறியர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி, கவுண்டர் சாதி சங்கங்கள், தி.மு.க., காங்கிரஸ், கொங்கு பேரவை போன்ற கட்சிகளைச் சேர்ந்த கவுண்டர் சாதிவெறி நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோரைத் திரட்டி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியர்களின் தாக்குதல்கள் மூலம் தென் தமிழ்நாட்டு மக்களிடையே சாதிமுனைவாக்கத்தை தீவிரப்படுத்தி தனக்கான அடித்தளத்தை உருவாக்கிக்கொள்ள விழையும் பா.ஜ.க. கும்பல், தற்போது இந்த உத்தியைத் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.


படிக்க: கோபிசெட்டிபாளையம் – அருந்ததியர் இளைஞர்கள் மீது சாதிவெறித் தாக்குதல் | தோழர் மருது


இதன் காரணமாக தற்போது தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் நலனுக்காகத் தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர், பறையர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் பலிகடாவாக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் போது, தேவேந்திர குல வேளாளர், பறையர் பிரிவைச் சேர்ந்த சாதிச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டங்களை கட்டியமைக்காமல் கண்டனங்களைத் தெரிவிப்பதுடன் நிறுத்திக்கொள்கின்றன. மற்ற இரு பிரிவைச் சேர்ந்தவர்கள் தாக்குதலுக்குள்ளாகும் போதும் இதே நிலைமைதான்.

மறுபுறம், ஆதிக்கச் சாதி சங்கங்கள், கட்சிகளில் ஊடுருவி அவற்றைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பல், தற்போது தாழ்த்தப்பட்ட சாதி சங்கங்கள், கட்சிகளிலும் ஊடுருவி வருகிறது. ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி போன்றோர் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர். இவற்றின் மூலமாக, தாழ்த்தப்பட்ட மக்களையும் சாதிரீதியாகப் பிரித்து தனக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ளப் பாசிச கும்பல் எத்தனித்து வருகிறது.

எனவே, ஆர்.எஸ்.எஸ்-இன் இந்த சதித்திட்டத்தை முறியடிக்க, பா.ஜ.க-வின் இந்துமதவெறி பாசிசத்திற்கு எதிராகப் போராடும் அனைத்துப் பிரிவு மக்களும் ஆதிக்கச் சாதிவெறியர்களால் தலித் மக்கள் மீது தொடுக்கப்படும் சாதியத் தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டியுள்ளது.


தலையங்கம்,
புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க