தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் தலித்திய அரசியல் தலைவர்களும்

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தலித் மக்கள் தலைவர்களே பெரிதாக கண்டுக்கொண்டதாக தெரியவில்லை. தி.மு.க. ஆட்சியில் இந்த தாக்குதல்கள் அதிகரிப்பதை ஏற்கக் கூட மறுக்கின்றனர். சாதாரணமாக கடந்து செல்கின்றனர். இதனை எப்படி புரிந்துகொள்வது?

ப்படி ஒரு சந்தர்ப்பவாதமான போக்கு தலித் மக்கள் தலைவர்களிடம் உள்ளதுதான். தி.மு.க. ஆட்சியில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது. ஆனால், தற்போது தி.மு.க. ஆட்சியில் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதை பற்றி பேசாமல் காலங்காலமாக தாக்குதல்கள் நிகழ்ந்துவருகிறது, கஞ்சா போதையில் நடக்கிறது என்று தட்டிக்கழிப்பது என்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதம், பிழைப்புவாத அணுகுமுறை. மேலும், தலித் மக்களில் ஒருபிரிவினர் (அருந்ததியர், பறையர், தேவேந்திர குல வேளாளர்) மீது தாக்குதல் தொடுக்கும்போது அதற்கு மற்ற பிரிவைச் சார்ந்த தலித் தலைவரோ சங்கமோ கண்டனங்களைத் தெரிவிப்பதுடன் நிறுத்திக்கொள்கின்றன. அதற்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதை விட, தங்களுடைய பிழைப்புவாத நோக்கத்திற்காகவே பாடுபடுகின்றனர் என்பதே உண்மைநிலை.

அதேபோல நடந்துவரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களுக்கு வேறொரு பரிமாணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் சாதியத் தாக்குதல்கள் அதிகரிப்பதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்திட்டம் உள்ளது. தனது இந்துமதவெறியின் மூலம் தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியாத சங்கப் பரிவாரக் கும்பல், சாதிவெறியின் மூலம் தனக்கான அடித்தளத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த அபாயகரமான போக்கை நாம் உடனடியாக தடுத்தாக வேண்டியுள்ளது.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க