விரட்டியடிக்கப்படும் அனகாபுத்தூர் மக்கள்: தி.மு.க. அரசின் அராஜகம்!

தமிழ்நாடு முழுவதும் பல நீர்நிலைகள் தனியார் முதலாளிகளின் இலாப நோக்கத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டு பல்கலைக்கழகங்களும் வணிக வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன. எஸ்.ஆர்.எம், மதுரவாயல் ஏ.சி.எஸ், சாஸ்த்ரா போன்ற பல பல்கலைக்கழகங்களை நாம் சான்றாகக் கூற முடியும். ஆனால், சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் கரையோர உழைக்கும் மக்களை மட்டும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அப்புறப்படுத்தி வருகிறது, தி.மு.க. அரசு.

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் உள்ள காயிதேமில்லத் நகர், சாந்திநகர், தாய்மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட வீடுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதிகளில் உள்ள வீடுகளை அடையாறு ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அவற்றை இடிக்கும் பணியில் அடாவடித்தனமாக ஈடுபட்டு வருகிறது தி.மு.க அரசு.

கடந்த 4-ஆம் தேதி, போலீசின் துணையோடு வந்த பல்லாவரம் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், புல்டோசர் மூலமாக டோபிகானா தெருவில் உள்ள வீடுகளை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கினர்.

அப்பகுதி மக்கள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் உடனடியாக எதிர்த்துப் போராடியதன் காரணமாக பிற பகுதிகளில் உள்ள வீடுகளை இடிக்காமல் நிறுத்திவைத்துள்ளது, தி.மு.க அரசு. ஆனால், எப்பொழுது வேண்டுமானாலும் அதிகாரிகளும் போலீசும் தங்கள் வீடுகளை இடிக்க வரலாம் என்ற அச்சத்திலேயே அப்பகுதி மக்கள் உள்ளனர்.

அகதிகளாக்கப்படும் உழைக்கும் மக்கள்!

கடந்த ஐந்து மாதங்களாக, போலீசும் அதிகாரிகளும் வீடுகளை இடிக்கப்போவதாகவும், பகுதிகளை விட்டு வெளியேறக்கூறியும் அப்பகுதி மக்களை மிரட்டி வந்துள்ளனர். மேலும் அதிகாரிகள், “அனகாபுத்தூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள தாம்பரம் முடிச்சூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள மாற்று குடியிருப்புகளில் குறைந்த அளவிலான வீடுகளே உள்ளது. முதலில் வருபவர்களுக்கே அப்பகுதியில் வீடுகள் வழங்கப்படும். இல்லையெனில், பெருங்களத்தூரைத் தாண்டிதான் வீடுகள் வழங்கப்படும்” எனக் கூறி வஞ்சகமான முறையில் அம்மக்களை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசும் அதிகாரிகளும் வீடுகளை இடிக்கும்போது மக்களின் உடைமைகளை கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல் மிகவும் அடாவடித்தனமாக செயல்பட்டுள்ளனர். வீட்டு வரி செலுத்தியிருப்பதற்கான ஆவணங்களையும், முன்னாள் மாவட்ட ஆட்சியர் தங்களுக்கு பட்டா அளிப்பதாக கொடுத்த சான்றிதழையும் மக்கள் அதிகாரிகளிடம் காண்பித்தபோதும் அதைப் பார்ப்பதற்குகூட அதிகாரிகள் தயாராக இல்லை. எப்படியாவது வீடுகளை இடித்துவிட வேண்டும் என்பதில்தான் ஒரே குறிக்கோளாய் இருந்துள்ளனர். எதிர்ப்பு தெரிவித்த சி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று பேரை கைது செய்து ஒடுக்குமுறையையும் ஏவியுள்ளது, தி.மு.க. அரசு.


படிக்க: அனகாபுத்தூர் மக்களின் வீடுகளை இடிக்கும் அரசு புல்டோசர்கள்! | தோழர் மருது


வீடுகளை இடிக்கவந்த அதிகாரிகளிடம் சில பள்ளி மாணவர்கள், “வீடுகளை இடித்து எங்களை வெளியேற்றினால் எங்கள் கல்வி பாதிக்கப்படுமே” என்று கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள் “நீங்க எல்லாம் படித்து என்ன ஆகப்போகிறது? நீங்க படிச்சா என்ன? படிக்கலனா என்ன?” என மிகவும் கீழ்த்தரமாக பதிலளித்துள்ளனர். இந்த அராஜகங்கள் எல்லாம் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா முன்னிலையிலேயே நடந்துள்ளன.

“வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, கரண்ட் பில் என எல்லாமே வைத்திருக்கிறோமே இதுக்கப்புறம் என்ன? நாங்க என்ன அகதிகளா? நாங்களும் இந்த ஊரை சேர்ந்தவங்க தான? அப்ப நாங்களும் இங்க தான இருக்கணும்? எங்கள மட்டும் ஏன் இந்த மாதிரி பண்ணுறாங்க” என்று தன்னுடைய ஆதங்கத்தை வேதனையுடன் வெளிப்படுத்துகிறார் அனகாபுத்தூரை சேர்ந்த பெண் ஒருவர்.

தங்களுடைய உழைப்பால் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் கட்டப்பட்ட வீடுகள் தங்கள் கண்முன்னே இடிக்கப்படுவதைப் பார்த்து துக்கம் தாங்க முடியாமல் மக்கள் கதறி அழுதனர். சிலர் “வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனையே இன்னும் அடைக்கவில்லை, அதற்குள் வீடுகளை இடிக்கிறார்களே” என்று புலம்பினர். ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கட்டடங்களை இடிக்காமல் தங்கள் வீடுகளை மட்டும் இடிக்கும் தி.மு.க. அரசை வசைபாடினர்.

மாற்று குடியிருப்புக்காகக் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளும் வாழவே தகுதியற்றவையாக உள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள். “மருத்துவமனை, பள்ளிக்கூடம், பேருந்து நிலையம், சுடுகாடு போன்ற எந்த அடிப்படை வசதியும் அங்கு இல்லை. அவங்க கொடுக்கிற 350 அடி வீட்டுல ஒரு நாள் கூட தங்க முடியாது. சுவரைத் தொட்டாலே சுண்ணாம்பு கையோட வருது. எல்லா சுவர்களிலும் விரிசல் விட்டிருக்கு. ஜன்னல் வச்சுருக்காங்க, ஆனா ஜன்னலுக்கு கதவு இல்ல” எனத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4-ஆம் தேதி அன்றே அனகாபுத்தூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து 13-ஆம் தேதி “எங்களுக்கு எந்த சலுகையோ மானியமோ தேவையில்லை. எங்கள் இடத்தில் எங்களை வாழவிடுங்கள் போதும்” என்ற முழக்க அட்டைகளுடன் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே 17 இயக்கம், மக்கள் அதிகாரம் போன்ற இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் இப்போராட்டங்களில் கலந்துகொண்டன.

சிங்கார சென்னையில் உழைக்கும் மக்களுக்கு இடமில்லை!

அனகாபுத்தூர் பகுதியில் உழைக்கும் மக்களின் வீடுகளை “ஆக்கிரமித்து கட்டப்பட்டவை” என்று கூறி இடிக்கும் தி.மு.க. அரசு, அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மாதா கல்லூரியையும், காசா க்ராண்ட், ஒலிம்பியா போன்ற ரியல் எஸ்டேட் பெருநிறுவனங்களின் அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் ஆக்கிரமிப்பு கட்டடங்களாக கருதவில்லை. அதைபோல், மாற்று குடியிருப்பு வீடுகளையும் ஆற்றிலிருந்து 50 அடி தொலைவில்தான் கட்டிக்கொடுத்துள்ளது. இதிலிருந்தே, “ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளைப் பாதுகாக்கிறோம்” என்று தி.மு.க. அரசு கூறிவருவது அப்பட்டமான பொய் என்பது அம்பலமாகிறது.

தமிழ்நாடு முழுவதும் பல நீர்நிலைகள் தனியார் முதலாளிகளின் இலாப நோக்கத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டு பல்கலைக்கழகங்களும் வணிக வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன. எஸ்.ஆர்.எம், மதுரவாயல் ஏ.சி.எஸ், சாஸ்த்ரா போன்ற பல பல்கலைக்கழகங்களை நாம் சான்றாகக் கூற முடியும். சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அதன் மீது தமிழ்நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் கரையோர உழைக்கும் மக்களை மட்டும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அப்புறப்படுத்தி வருகிறது, தி.மு.க. அரசு. 2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடனே, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பாக்கம் பகுதியில் வசித்துவந்த மக்களையும், 2022-ஆம் ஆண்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் பக்கிங்காம் கால்வாய் அருகே வசித்துவந்த மக்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி விரட்டியடித்துள்ளது.

இவ்வாறு, ஆற்றங்கரையோரங்களில் வாழும் உழைக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்படுவது “ஆற்றங்கரை மேம்பாடு” (Riverfront Development) என்ற திட்டத்தின் அடிப்படையில்தான். இத்திட்டம், ஆற்றங்கரையோரங்களில் பொழுதுபோக்கு வசதிகள், பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளை உருவாக்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, உழைக்கும் மக்களை சென்னையிலிருந்து விரட்டியடித்துவிட்டு அவர்கள் வாழ்ந்த பகுதியில் மேட்டுக்குடி மக்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதே இந்த திட்டத்தின் உண்மையான நோக்கம். இந்த உழைக்கும் மக்கள் விரோத திட்டத்தையே தி.மு.க அரசு தற்போது அமல்படுத்தி வருகிறது.

சமூக நீதி, திராவிட மாடல் எனப் பேசும் தி.மு.க. அரசும் ஸ்மார்ட் சிட்டி, சிங்கார சென்னை 2.0 போன்ற கார்ப்பரேட் நலத் திட்டங்களால் உழைக்கும் மக்களை சென்னையிலிருந்து விரட்டியடிக்கும் கார்ப்பரேட் நல அரசே. அதனை, தி.மு.க. அரசின் அடுத்தடுத்த கார்ப்பரேட் சேவைகள் நமக்கு உணர்த்துகின்றன.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க