தமிழ்நாட்டில் நாளை (ஜனவரி 9) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்புவது, நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்குவது, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (ஜனவரி 8) அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் “எதையும் இப்போது ஏற்க இயலாது. பொங்கலுக்கு பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று அரசு தரப்பில் கூறப்பட்டதால் திட்டமிடப்படி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர், தொழிற்சங்க பிரதிநிதிகள்.
தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவையையாவது வழங்குங்கள் என்று தொழிலாளர் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்த போதும், அதையும் ஏற்க மறுத்துவிட்டனர், அரசு அதிகாரிகள். எனவே தான் வேறுவழியின்றி பொங்கல் விடுமுறை சமயத்தில் வேலைநிறுத்தம் செய்ய தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். வேலைநிறுத்தத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
ஆனால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரோ, “வேலைநிறுத்தப் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று தொழிலாளர்களை கொச்சைப்படுத்தியும், “பொங்கல் சிறப்புப் பேருந்துகள் திட்டமிட்டப்படி ஜனவரி 12 முதல் இயக்கப்படும்” என்று திமிர்த்தனமாகவும் பேசியுள்ளார்.
“அகவிலைப்படி உயர்வை வழங்குவோம்”, “புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுவோம்” என்று 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து வந்த தி.மு.க-வானது, அ.தி.மு.க.வைப் போல போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் கடமையாகும்.
போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் “போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஆதரவு தாரீர்!” என்ற தலைப்பில் “அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஒய்வுபெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு-தமிழ்நாடு” சார்பில் வெளியிடப்பட்ட பிரசுரத்தை வினவு தளத்தில் பதிவிடுகிறோம்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்
ஆதரவு தாரீர்!
நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் போக்குவரத்து வசதி அடிப்படை தேவையாகும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழக மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து வசதியை போக்குவரத்து கழகங்கள் வழங்கி வருகின்றன. கல்வி. வேலைவாய்ப்பு, கிராமங்களுக்கும், நகரங்களுக்குமான இணைப்பு என தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வாழ்வில் போக்குவரத்து கழகங்கள் மிக சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றன.
போக்குவரத்து கழகங்கள் நஷ்டமா?
தனியார் பேருந்துகள் லாபத்தில் ஓடும்போது, போக்குவரத்து கழகங்கள் ஏன் நஷ்டத்தில் இயங்குகின்றன? என்ற தவறான கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. போக்குவரத்து கழகங்கள் லாப நோக்கத்துடன் செயல்படவில்லை. இழப்பு ஏற்படும் என தெரிந்தே 10,000க்கும் மேற்பட்ட கிராமப்புற, மலை வழித்தடங்களில் சேவை நோக்கத்துடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள், பெண்கள் என சமூகத்தின் பல பிரிவினருக்கு இலவச பேருந்து சேவை அளிக்கும் அரசின் திட்டம் போக்குவரத்து கழகங்களால் அமுல்படுத்தப்படுகிறது. இதனால் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடுகட்டுவது கிடையாது. தமிழக மின்வாரியம், சிவில் சப்ளை கார்ப்பரேசன் போன்றவற்றிற்கு முழுமையான இழப்பை ஈடுகட்டும் அரசு, தினமும் 2 கோடி மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து கழகங்களைப் புறக்கணிக்கின்றது. அவசரத் தேவைக்காக போக்குவரத்து கழகங்களுக்கு அவ்வப்போது அரசு வழங்கும் பணத்திற்குகூட வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே, போக்குவரத்து கழகங்களை சிறப்பாக செயல்படுத்த வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் பயண உரிமையைப் பறிக்கும் முயற்சி
மக்களுக்கு சிறப்பாக சேவை செய்துவரும் போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்க முயற்சி செய்யப்படுகிறது. 2017ஆம் ஆண்டு 23,000 பேருந்துகள் இயங்கி கொண்டிருந்தது. 2018ஆம் ஆண்டு பேருந்து எண்ணிக்கை 19,500ஆக குறைக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக பணி ஓய்வுபெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களுக்குப் பதிலாக, புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படவில்லை. சுமார் 20,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏற்கனவே பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில் பணியாளர் பற்றாக்குறையால் தினமும் சுமார் 1500 பேருந்துகளை இயக்க முடியவில்லை. ஒட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் 4000 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் பயண உரிமை மறைமுகமாக பறிக்கப்பட்டு வருகிறது. எனவே. நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும். காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டிய 8000 பேருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். தனியார்மயம், காண்ட்ராக்ட் என்ற பெயரால் போக்குவரத்து கழகங்களை சீர்குலைக்க கூடாது.
ஊழியர்களின் அவலம்
கழகங்கள் சீர்குலைக்கப்படுவதுடன், ஊழியர்களும் வஞ்சிக்கப்படுகின்றனர். மற்ற துறை ஊழியர்களைவிட போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. ஒப்புக்கொண்ட ஒப்பந்த சரத்துகள்கூட அமுல்படுத்தப்படுவதில்லை. ஊதிய ஒப்பந்தம் முடிந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. ஊழியர்களின் எதிர்கால சேமிப்பான வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட தொகை ரூ. 13,000 கோடியை கழகங்கள் செலவு செய்துவிட்டன. ஊழியர்களின் பணத்தை வைத்து கழகங்களை நடத்தும் கேவலம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஓய்வுபெற்றவர்கள். மரணமடைந்தவர்களின் ஓய்வூகால, பணிக்காலப் பணப்பலன்கள் உடனடியாக வழங்கப்படுவதில்லை.
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்த 90.000 ஓய்வூதியர்கள் வயதான காலத்தில் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்குவோம் என முதலமைச்சரே அறிவித்தார். இதுவரை வழங்கப்படவில்லை. அதற்குப்பதிலாக, அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டுமென நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அப்பீல் சென்றுள்ளது அரசு. மற்ற துறை ஊழியர்களைப்போல் மருத்துவக் காப்பீடும் இல்லை. மனிதாபிமானமற்ற முறையில் அரசின் செயல்பாடு உள்ளது.
ஓய்வூதியம் இனாமா?
வயது முதிர்ந்த காலத்தில் வாழ்க்கையின் ஆதாரமே ஓய்வூதியம்தான். ‘இது சலுகை அல்ல உரிமை’ என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. புதிய ஓய்வூதியத்திட்டம் என்ற பெயரால் ஓய்வூதியத்தை ஒன்றிய அரசு பறித்தது. எனவே. 2003க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமும் இல்லை. 14.2003க்கு பின் பணியில் சேர்ந்து மரணமடைந்த, பணி ஓய்வுபெற்ற 4000 ஊழியர்களின் குடும்பங்கள் வீதியில் தூக்கி எறியப்பட்டுள்ளது. ‘புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுவோம்’ என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. தேர்தல் வாக்குறுதி அமுல்படுத்தப்படவில்லை. எனவே. புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், ஓய்வூதிய உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும்.
வேலை நிறுத்தத்தை தவிர வேறு வழியில்லை
போக்குவரத்து கழகங்களைப் பாதுகாக்க வேண்டும். பணியில் உள்ள, ஓய்வுபெற்ற ஊழியர்களின். பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என அரசிடமும், அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தோம். ஊர்வலம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராடி பார்த்தோம். நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி தீர்ப்பையும் பெற்றோம். போக்குவரத்தில் வேலை நிறுத்தம் என்றால், அன்றாடம் பேருந்துகளில் பயணிக்கும் 2 கோடி தமிழக மக்களின் சிரமங்கள் கடுமையானது என்பதால் வேலை நிறுத்தம் போன்று. போராட்டத்தை தவிர்த்து வந்தோம். ஆனால், அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. வேறு வழியின்றி வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம்.
போக்குவரத்து கழகங்களைப் பாதுகாக்க, தமிழக மக்களின் பயண உரிமையை நிலைநிறுத்த, ஓய்வுபெற்ற, பணியில் உள்ள ஊழியர்களின் நலன்காக்க, வேலை நிறுத்தத்தை தவிர வேறு வழியில்லை போராட்டத்தை நோக்கித் தள்ளியது அரசுதான்
எங்கள் போராட்டம் எங்களுக்கானது மட்டுமல்ல. தமிழக மக்களின் நலனையும் உள்ளடக்கியது.
எனவே, மக்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube