பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: கடந்த 10 ஆண்டுகளில் 16 சதவிகித வேளாண்பரப்பு குறைந்திருக்கிறது என்ற செய்தி தினகரனில் வெளிவந்துள்ளது. இந்தியா விவசாய நாடு என்று சொல்லப்படுகின்றபோது இவ்வளவு வேகமாக வேளாண் நிலப்பரப்பு குறைந்திருப்பதற்கான காரணம் என்ன? இது எப்பேர்ப்பட்ட அபாயம்?
குறிப்பாக, தனியார்மய–தாராளமயம்-உலகமயம் எனும் மறுகாலனியாக்க கொள்கைகளை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பிறகு, திட்டமிட்டு விவசாயத்தை அழிக்கும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. விவசாயத்தை அழிப்பது என்று சொல்வதைவிட விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்காக, சிறுவிவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.
அந்நடவடிக்கைகளின் விளைவாக மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் பத்து ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அது முதல் கட்டம் என்றால், தற்போது மோடி ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை இரண்டாம் கட்டம் என்று சொல்லலாம். இந்த இரண்டாவது கட்டத்தில் நிலம், கனிமவள சுரண்டலுக்காக உழைக்கும் மக்கள், விவசாயிகள், பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் மீது பயங்கரமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. மோடியின் இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்வதற்கான எல்லா அடிப்படைகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதை மோடி கும்பல் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் பா.ஜ.க. எதிர்ப்பு பேசுகின்ற எதிர்க்கட்சிகள் ஆளும் எல்லா மாநிலங்களிலும் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளை நிலங்களிலிருந்து வெளியேற்றுகின்ற அயோக்கியத்தனம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆளுகின்ற மாநிலங்களிலும் இந்த நிலப்பறிப்புகள் நடக்கின்றன. இதனை மோடி கும்பலும் மாநிலத்தை ஆளும் எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செய்துவருகிறார்கள் என்பதுதான் முக்கியமான விசயம். இவர்களும் உள்ளடங்கிய மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் விளைவாகத்தான் 16 சதவிகித வேளான்பரப்பு குறைந்துள்ளது. எனவே இதில் மோடி அரசை மட்டும் தனித்து பேச முடியாது. மோடி இவர்கள் எல்லோருக்கும் உகந்த சட்டங்களை கொண்டுவந்துள்ளார்; பிற மாநில கட்சிகளுக்கு முன்மாதிரியாக உள்ளார் என்றுதான் பேச முடியும்.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube