டிஜிட்டல்மயமாக்கம் எனும் பெயரில் பொதுத்துறை நிறுவனங்களையும், மக்களின் சொத்துகளையும் பெருநிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கும் பாசிச மோடி அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தியாவிலுள்ள அனைத்து விவசாயிகளின் நில அளவு, நிலத்தின் வகை, பயிர்வகை, நீர்ப்பாசன முறை, உரப்பயன்பாடு, சாகுபடி செய்யப்படும் நிலம் என விவசாயம் சார்ந்த அனைத்து தரவுகளையும் டிஜிட்டல்மயமாக்கும் AGRISTACK எனும் பணிகளை விரைவாகச் செய்து வருகிறது.

கடந்த மே 25, 2023ல் மாநில வருவாய் செயலர்கள் மற்றும் மாநில வேளாண் செயலர்களை ஒருங்கிணைத்து, வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத்துறை (MOA&FW) நடத்திய தேசிய மாநாட்டில், டிஜிட்டல் பயிர் சர்வே (Digital Crop Survey) குறித்து முடிவெடுக்கப்பட்டது.

விவசாயத் தரவுகள் டிஜிட்டல்மயமாக்கப்படுவது விவசாயிகளின் நலனுக்கானதா?

கடன், மழை வெள்ளம், வறட்சி, கொள்முதல் நிலையங்கள் அமைக்காதது, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்காதது, நதிநீர்ப் பிரச்சனைக்கு தீர்வு காணாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இந்திய விவசாயிகள் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கையில், விவசாயத் தரவுகளை டிஜிட்டல் மயமாக்குவதால் மட்டும் எந்த விவசாயியை பிழைக்க வைத்துவிட முடியும்?

2020-ம் ஆண்டு பாசிச மோடி அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், பல கோரிக்கைகளை முன்வைத்தும் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை டெல்லியில முன்னெடுத்தனர். இதன்மூலம் இந்திய விவசாயம் கார்பரேட்மயமாகும் தீவிரப் போக்கை விவசாயிகள் தங்கள் உயிரைக் கொடுத்து எதிர்த்து நின்றனர். விவசாயிகளின் வீரமிக்க போராட்டத்தைத் கண்டு குலைநடுங்கிப் போன பாசிச கும்பல் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக கூறியது. ஆனால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகள் முதுகில் குத்தியது. கார்ப்பரேட் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மோடி அரசு, தற்போது விவசாயம் சார்ந்த தரவுகளை டிஜிட்டல்மயமாக்குவது விவசாயிகளின் நலனுக்கானது என நாம் நம்பவியலுமா? கேழ்வரகில் தேன் வடிகிறது என சொல்லும் கதைதான் இது‌.

இத்திட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட 23 மாநிலங்கள் இணைந்துள்ளன. ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட 22 மாநிலங்களில் இந்த பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் இத்திட்டம் தொடங்கப்படாமலேயே இருந்து. தகவல்களை சேகரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க, மார்ச் 2025 வரை மாநில அரசுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது‌. இக்கெடு முடிய இன்னும் 4 மாதங்களே உள்ளது.

மாணவர்களை வதைத்து சர்வே பணி!

நிலங்கள் மற்றும் பயிர் கணக்கெடுப்பானது மாநில வருவாய் துறைக்கு உட்பட்டது. எனவே கிராம நிர்வாக அலுவலர்களே‌ இந்த டிஜிட்டல் மயமாக்கும் பணியை முடித்துத்தர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.‌ எனினும் சர்வே மேற்கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் பல இருப்பதாகவும், தங்களுக்கு கூடுதல் வேலையாக இது இருப்பதால் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறி போராட்டம் நடத்தி சர்வே பணிகளை வி.ஏ.ஓக்கள் புறக்கணித்தனர். வி.ஏ.ஓ க்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, சர்வே எடுக்கும் பணி வேளாண் துறைக்கு மாற்றப்பட்டது. ஆனால் அவர்களும் இப்பணியை புறக்கணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேளாண் மாணவர்கள் தலையில் இப்பணி சுமத்தப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் வேளாண் கல்லூரிகளில் (மொத்தம் 62 கல்லூரிகள்) பயிலும் சுமார் 27 ஆயிரம் மாணவர்கள் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது‌. எந்த ஒரு பயிற்சியும்‌ இன்றி மாணவர்கள் சர்வே பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்‌. அரசு அதிகாரிகளுக்கே தங்களது வேலைகளுக்கு குறிப்பிட்ட காலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட பின்னர் தான் பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஆனால் ‌ இந்த திட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எந்த ஒரு பயிற்சியும் அளிக்கப்படவில்லை. சந்தேகம் கேட்டால் அதிகாரிகளே தினறும் நிலைதான் இருந்தது.

தமிழ்நாடு ஆளுகை நிறுவனம் (TN Governance Agency) உருவாக்கிய ‘CROP SURVEY’ என்ற செயலி மூலம் தான் இந்த கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடிக்கடி லாக் அவுட் (Log out) ஆவது, லொக்கேஷன் மாற்றி காண்பிப்பது, நிறைய சர்வேக்களை ஒரே நேரத்தில் பதிவதால் செல்பேசி ஹேங்‌ (Hang) ஆவது போன்ற பல தொழில்நுட்ப சிக்கல்கள் இந்த‌ செயலியில் இருக்கின்றன. இதனால் பல மாணவர்கள் தங்கள் நண்பர்களின் கணக்குகளில் சர்வேக்களை பதியும் நிலைதான் இருந்தது. இந்த பணியில் ஈடுபட்டால் இறுதித்தேர்வில் அனைத்து பாடங்களுக்கும் 5 மதிப்பெண்கள் அளிக்கப்படும், சர்வே பணிக்கு பணம் அளிக்கப்படும் என்று ஆசைவார்த்தை கூறி தன் வேலையை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். மேலும் சர்வே பணிக்காக மாணவர்களின் அன்றாட வகுப்புகளை ரத்து செய்து, நடக்கவிருந்த தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல் பெரிதளவு பாதிக்கப்படும், குறுகிய காலத்தில் பாடத்திட்டங்களை முடிப்பது பேராசிரியர்களுக்கும் சவாலாக அமையும் என்று பேராசிரியர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

கேள்விக்குறியான மாணவர்களின் பாதுகாப்பு!

இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட மாணவர்கள் போதிய போக்குவரத்து வசதி இல்லாமையாலும், கழிப்பறை வசதிகளின்றியும் மிகுந்த அவதிக்குள்ளாயினர். அதிலும் மாதவிடாய் காலத்திலுள்ள மாணவிகள் சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவித்தனனர். ஒரு பகுதியில் கஞ்சா போட்ட ஒருவன், தனியே இருந்த மாணவிகளிடம் வம்பிழுத்துள்ளான். திருத்தணி அருகே டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் ஈடுபட்டிருந்த வேளாண் மாணவர்களும், அதிகாரிகளும் கணக்கெடுப்புக்காக அங்கு சட்ட விரோதமாக நடத்தப்பட்டு வரும் கல்குவாரிக்கு அருகில் உள்ள நிலத்திற்கு சென்றபோது, அங்கிருந்த குண்டர்களால் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல மணி நேரம் சிறைவைக்கப்பட்ட அவர்கள் பின்னர் அதிகாரிகளின் தலையீட்டால் மீட்கப்பட்டுள்ளனர். காட்டுப் பகுதிகளிலும், புதர்ச்செடிகள் நிறைந்த நிலங்களிலும் சர்வே பணிகள் மேற்கொள்ளும் நிலையில் பாம்புகள், விஷப்பூச்சிகள் மற்றும் விலங்குகள் இருக்கும் ஆபத்துகளை கண்டுக்கொள்ளாமல், அவசரத்திற்கு முதலுதவிப் பெட்டி கூட எடுத்துச்செல்லாமல் அலட்சியமாக நடந்து கொண்டதால் திருவண்ணாமலை அரவிந்தர் வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரை சர்வே சென்ற இடத்தில் பாம்பு கடித்தது. மற்றொரு மாணவியை குளவி கொட்டியது. கணக்கெடுப்பு பணிகளுக்கு அனைத்து மாணவர்களும் வரவேண்டும் என கட்டாயப்படுத்தியே அழைத்துச் சென்றனர். மாணவர்களை பணயம் வைத்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கூறிய விசயங்கள் வெளியே தெரிந்து பெற்றோர்கள், பேராசிரியர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் அவசரகதியில் சர்வே பணி முடித்து வைக்கப்பட்டுள்ளது.

பிரச்சனைகளும், தீர்வுகளும் தனித்தனியானது அல்ல!

வி.ஏ.ஓ.க்கள், வேளாண் துறையினர், வேளாண் பல்கலைக் கழகம் என அனைத்து தரப்பினருக்கும் சர்வே பணியில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி விவசாயத் தரவுகளை டிஜிட்டல்மயமாக்கும் பின்னணியில் மோடி அரசின் சதி இருப்பது தெரிந்தும் பந்தை கைமாற்றுவது போல இப்பிரச்சனையை கடந்து செல்கின்றனர். உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமல்லாது, பில்கேட்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு முதலாளிகளும் இந்திய விவசாயத்தை சூறையாட காத்துக் கொண்டிருக்கிறார்கள். காட் ஒப்பந்தத்தின்படி விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கம் பாசிச மோடி அரசின் ஆட்சியில் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

உரிமைக்காக போராடும் விவசாயிகளோடு அணிதிரள்வதும், இந்திய விவசாயத்தை பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கு தாரை வார்கக்ப்படுவதை தடுக்கப் போராடுவதும், பாசிச மோடி கும்பலை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் களமிறங்குவதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதும், அவசியமானதும் ஆகும்.


ஜென்னி லீ

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க