ன்னும் இரண்டு நாட்களில், உ.பி. அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறவிருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ராமர் கோவில் திறப்புதான் பேசுபொருள். இந்திய ஊடகங்களும் மோடி இப்போது விரதம் இருக்கிறார், மோடி இப்போது நடக்கிறார், உட்காருகிறார் என மோடி காட்டும் வித்தைகளை ஒன்று விடாமல் ஒளிப்பரப்பி வருகின்றன.

காவிக்கும்பல் கோவில் கருவறையின் பிரதான வாயிலில் பொருத்தப்பட்ட கதவு தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளது. மேலும், 13 தங்கக்கதவுகள் பொருத்தப்பட இருக்கின்றன. 8 உலோகங்களை கொண்டு 25 லட்ச செலவில் 2,400 கிலோ எடையில் ராட்சத மணி தயாரிக்கப்பட்டுள்ளது என்று பெருமை பேசி வருகிறது. கார்ப்பரேட் முதலாளிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என இந்தியா முழுவதும் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது மோடி அரசின் சாதனை, இந்துக்களுக்கான வெற்றி என்றவாறெல்லாம் ராமர் கோவில் திறப்பை ஊதிப்பெருக்குகிறது மோடி அரசு

ஆனால், ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க. ஆளும் இதே உத்தரபிரதேச மாநிலத்தின் உழைக்கும் மக்கள், பெண்களின் நிலை என்ன என்பதற்கு சில சான்றுகள் இவை.

  1. கடந்த தீபாவளி பண்டிகையின்போது உத்தரப் பிரதேசத்தில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றி, முந்தைய ஆண்டின் கின்னஸ் சாதனையை முறியடித்தோம் என பீற்றி கொண்டது யோகி ஆதித்யநாத் அரசு. ஆனால், அவ்விளக்குகள் அணைந்த மறுகணமே அங்கு ஓட்டோடி வந்த சிறுவர்கள், மிச்ச மீதியிருந்த எண்ணெய்யை தங்களது வீடுகளில் சமையலுக்காக சேகரித்த கொடுமை அரங்கேறியது. உ.பி.யின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நிலை இதுதான்.
  2. விளக்குகளில் எண்ணெய் சேகரிக்கும் கொடுமை ஒருபுறம் நடக்க, யோகி ஆதித்யநாத்தோ ‘இலங்கையில் இருந்து ராமன் திரும்பும் காட்சியை’ மீண்டுருவாக்கம் செய்ய, சில நடிகர்களுக்கு ராமன், லட்சுமணன், சீதா வேடமிட பணத்தை வாரியிரைத்ததோடு, அவர்களுக்கு வானத்தில் இருந்து வந்திறங்க அரசு ஹெலிகாப்டரையும் வழங்கியிருந்தார்.
  3. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கூட்டு பாலியல் வன்கொடுமைகளில் முதலிடத்தில் இருப்பது உத்தரப் பிரதேசம்தான். 2022 ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 65,743 வழக்குகள் பதிவாகியுள்ளன.
  4. உ.பி. ராம்நகரில், நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி சாலை விரிவாக்கத்திற்காகவும் விமான நிலைய திட்டத்திற்காகவும் மக்கள் குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் கையகப்படுத்தி வருகிறது யோகி அரசு.
  5. வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அருகே இருக்கும் தெருவோர வியாரிகளின் தள்ளுவண்டிகளை யோகி அரசின் போலிசு பறிமுதல் செய்து வியாபாரிகளை நிர்கதியாக்கியது.
  6. நிலம் கையகப்படுத்தப்பட்டு விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது ஒருபுறம் நடக்க, ஹர்தோய் உன்னாவ், சீதாபூர் உள்ளிட்ட உ.பி. கிராமங்களில் அனாமத்தாக சுற்றுதிரியும் கால்நடைகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க இரவு முழுவதும் காவல் காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் விவசாயிகள். தங்களை ‘பசு காவலர்கள்’ என்று காட்டிக்கொள்ளும் இந்துத்துவ அரசுக்கு, பயிர்கள் கால்நடைகளால் நாசமாக்கப்படுவதை தடுத்து நிறுத்த, பசு கொட்டகைகள் அமைக்க எந்த திட்டமும் இல்லை. விவசாயிகளே தங்களது பயிர்களை பாதுகாக்க கூர் கம்பிகளால் வேலி அமைப்பதையும் சட்டவிரோதமாக்கியுள்ளது யோகி அரசு.
  7. கடந்த 2021 ஆம் ஆண்டு உ.பி. லக்கிம்பூர்கேரியில் அமைதியாக பேரணி சென்று கொண்டிருந்த விவசாயிகள் மீது அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா காரை ஏற்றி 4 விவசாயிகளை படுகொலை செய்தான்.
  8. 2021 ஆம் ஆண்டு, உ.பி. பாரபங்க் என்னும் கிராமத்தில் உள்ள மதுகடைகளை அகற்ற கோரி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மக்கள்மீது சராமாரியாக தாக்குதலை நடத்தியது யோகி அரசு. ஆனால், ஜனவரி 22 ஆம் தேதி இராமர் கோவில் திறப்பை முன்னிட்டு மதுகடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.
  9. உ.பி.யில் உதவி ஆசிரியர்கள் போன்ற ஒப்பந்த ஊழியர்கள் தங்களது பணியை உத்தரவாதப்படுத்த கோரி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஆசிரியராக விரும்பிய ஷிகா பால் என்பவர், கல்வி இயக்குநரத்தில் உள்ள தண்ணீர் தொட்டியின் மேல் சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனாலும் அவரது கோரிக்கைமீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
  10. 10 ரூபாய் போஸ்டல் ஆர்டர் கொடுத்தால், தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் கீழ் தகவல்கள் பெறமுடியும். ஆனால் ஆர்.டி.ஐ-க்கு விண்ணப்பம் அனுப்பும் போஸ்டல்கள், உ.பி. லக்னோ, கான்பூர், பாரபங்கி, மொராதாபாத் மற்றும் வாரணாசி அஞ்சலகங்களில் இருந்து காணாமலாக்கப்பட்டிருக்கின்றன. அதாவது அரசாங்கம் குறித்து எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்ற யோகி அரசின் பாசிச நடவடிக்கை இது.


ஆதினி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க