ராமன் கோவில் திறப்பு: மக்கள் உயிரைப் பற்றி பாசிஸ்டுகளுக்கு கவலையில்லை

சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் ராமர் கோவிலின் சமீபத்திய புகைப்படங்களில் கிழக்கு நோக்கிய அதன் பிரதான முகப்பைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம். காரணம், இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால்தான் கோவில் கட்டமைப்பு மிகவும் முழுமையானதாகத் தோற்றமளிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தி நகரத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலைத் திறந்து வைக்கப்போகிறார். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிற சூழலில், மூன்றாவது முறையாக எப்படியாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கான ஆயுதமாக ராமர் கோவில் திறப்பைக் கையிலெடுத்துள்ளது பா.ஜ.க கும்பல். மோடி அரசின் இந்த இழிவான நடவடிக்கையை எதிர்த்து “இந்தியா” கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் ராமர் கோவில் திறப்பை புறக்கணித்துள்ளன.

விரிவாக்கப்பட்ட சாலைகள், புதிய விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் மற்றும் பல நிலை கார் நிறுத்துமிடம் என உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி நகரத்தை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது யோகி அரசு. இந்திய வானிலை ஆய்வு மையம் அயோத்திக்கு மட்டும் வானிலை தொடர்பான தகவல்களை வழங்க தனியாக ஒரு இணையதளத்தைக் கூட தொடங்கியுள்ளது. கோயில் அறக்கட்டளை அமைப்பாளர்கள், கார்ப்பரேட் முதலாளிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள் என சுமார் 8,000 பேர் விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், ராமர் கோவில் இன்னும் முழுமையாக கட்டிமுடிக்கப்படாத நிலையில் அவசர அவசரமாய் தனது தேர்தல் ஆதாயத்திற்காக பா.ஜ.க. கும்பல் கோவிலைத் திறக்கிறது என சங்கராச்சாரியார்கள், எதிர்க்கட்சிகள் என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.


படிக்க: இராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதில் நீதித்துறையின் கரசேவை – ஓர் வரலாற்று பார்வை


சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் ராமர் கோவிலின் சமீபத்திய புகைப்படங்களில் கிழக்கு நோக்கிய அதன் பிரதான முகப்பைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம். காரணம், இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால்தான் கோவில் கட்டமைப்பு மிகவும் முழுமையானதாகத் தோற்றமளிக்கிறது. ஆனால் புகைப்படம் எடுக்கத் தடைசெய்யப்பட்ட அதன் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளைச் சுற்றிப்பார்த்தால் உண்மையில் இன்னும் எவ்வளவு வேலை மீதமுள்ளது என்பது தெளிவாகிறது. இன்னும் பெரும்பான்மையான பணிகள் முடிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பரில், “கோவில் கட்ட இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும்” என ராமர் கோவில் அறக்கட்டளையை சார்ந்தவர்களே பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தனர். மேலும் “பொதுமக்கள் யாரும் ஜனவரி 22 அன்று வர வேண்டாம், எங்களால் சேவை செய்ய முடியாது” எனவும் கூறியிருந்தனர். ஆனால், இன்று நாடுமுழுவதிலிருந்தும் மக்கள் ராமர் கோவிலுக்குச் செல்லப்போகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் கும்பல் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், இவ்வளவு பேரை சமாளிக்கும் வகையில் அங்கு எந்த கட்டுமானங்களும் ஏற்படுத்தப்படவில்லை. மக்களின் உயிருக்கு எந்தளவிற்குப் பாதுகாப்பு இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக் குறிதான்.

ராமர் கோவிலின் அடிக்கல் நாட்டு விழாவே இதற்குச் சிறந்த சான்று. இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வந்த சூழலில்தான் மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல், கும்பமேளா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பா.ஜ.க அரசு அனுமதியளித்து லட்சக்கணக்கான மக்களை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கியதும் குறிப்பிடத்தக்கது.

தனக்கான அடித்தளத்தை உருவாக்க பாபர் மசூதியை இடித்து இஸ்லாமிய மக்களை கொன்றொழித்தது முதல் தற்போது தனது தேர்தல் ஆதாயத்திற்காகக் கட்டிமுடிக்கப்படாத கோவிலுக்கு திறப்பு விழா நடத்துவது வரை அப்பாவி உழைக்கும் மக்களின் உயிர்களை பற்றி பாசிச மோடி கும்பல் ஒருபோதும் அக்கறைகொண்டதில்லை. பாசிசக்கும்பலின் இந்த பேயாட்சி ‘பெரும்பான்மை இந்துக்களுக்கு’ விரோதமானதுதான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, “அயோத்தியில் கோவில் கட்டுமானங்கள் முழுமையாக முடியாத நிலையில் இந்து வேதங்களுக்கு எதிராக ராமன் கோவில் குடமுழுக்கு நடத்தப்படுகிறது” என சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்தன் உள்நோக்கத்தையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இரவோடு இரவாக மசூதிக்குள் ராமர் சிலையை வைத்தபோதும் பாபர் மசூதியை இடித்து, ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களை படுகொலை செய்த இடத்தில் சிலையை வைத்தபோதும் வாயை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவித்த இவர்களுக்கு கோவில் முழுமையடையாமல் திறக்கப்படுவது பிரச்சனையல்ல.‌ சூத்திரரான பிரதமர் மோடி சிலையைத் தொடுவதுதான் இவர்களுக்கு பிரச்சனை. அதையும் தங்கள் இந்துராஷ்டிர கனவிற்காக அதிகாரத்தை நிலைநிறுத்த ஏற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள்.

காவிக்கும்பலுக்கும் பாசிஸ்டுகளுக்கும் தங்களின் ஆதிக்கவெறியும் அதிகாரவெறியும் தான் முதன்மையானது. அதற்காக மக்களை பலியிட அவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.


ரித்திக்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க