பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை –
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விமர்சித்தது தான் குற்றம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏற்கனவே மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் இருந்தபோது அமெரிக்க தூதரகம் வாயிலாகப் பெறப்பட்ட ரகசியங்களை பகிரங்கப்படுத்தியதாக எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறிய நடவடிக்கை என அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது ஆட்சிக் காலத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த நாளே ஓர் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனக்கு எதிரான பல வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என இம்ரான்கான் கூறியுள்ளார். அதாவது இதன் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இருக்கிறது என்பதே அவர் கூற வருகின்ற விசயம்.
கடந்த மார்ச் 2022-இல் அமெரிக்காவில் அந்நாட்டு உயர்மட்ட அதிகாரிகளுடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு பேசப்பட்ட முக்கிய விவகாரங்கள் உள்ளடங்கிய ரகசிய ஆவணங்களை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பி வைத்தார். அதே மார்ச் 2022-இல் இம்ரான்கான் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சக்திகள் திட்டம் போடுவதாகக் கூறி ஒரு காகிதத்தை எடுத்துக் காட்டினார். ”இம்ரான்கான் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டால் (நீங்கள்) அனைவரும் மன்னிக்கப்படுவீர்கள்” என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறினார்.
எந்த நாடு இதற்குப் பின்னணியில் இருக்கிறது என்று இம்ரான்கான் சொல்லாவிட்டாலும் அமெரிக்காதான் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். அதே சமயம் அமெரிக்காவை விமர்சிக்கவும் அவர் தவறவில்லை. இந்த சம்பவம் இம்ரான்கான் பதவி விலகுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது.
படிக்க: மக்களை வாட்டும் பொருளாதார நெருக்கடி: நேற்று – இலங்கை, இன்று – பாகிஸ்தான்!
இம்ரான்கானின் பதவி பறிபோன பின், ஜூலை 2023-இல் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் 1923-இன் படி அரசு ரகசியங்களை பொதுவெளியில் கசிய விட்டதாகக் குற்றம்சாட்டி பாகிஸ்தான் அரசு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில்தான் தற்போது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பிப்ரவரி 8 ம் தேதி பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலிலும் இம்ரான்கான் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆட்சியில் இருந்த காலத்தில், அமெரிக்காவை வெளிப்படையாகவே விமர்சித்தார் இம்ரான்கான். இன்னொரு பக்கம் சீன – இரசிய அரசியல் பொருளாதார உறவை வலுப்படுத்திக் கொண்டார்.
ஒரு பக்கம் பாகிஸ்தான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதும், குறிப்பாக ஐ.எம்.எஃப் இன் கடன் வலையில் பாகிஸ்தான் சிக்கிக் கொண்டிருப்பதும், இந்த நிலைமை மேலும் மேலும் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் என்பதும், இது பாகிஸ்தானை மிக மோசமான சூழ்நிலைக்குத் தள்ளிவிடும் என்பதும்தான் இம்ரான்கான் அமெரிக்கா மீது வெளிப்படையாகக் கூறிய விமர்சனங்கள்.
தான் கொடுக்கும் கடனுக்கு நிகராக மக்களுக்கு வழங்கும் சலுகைகளை வெட்ட வேண்டும் என்பதே எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா தலைமையிலான ஐ.எம்.எஃப் முன்வைக்கும் நிர்ப்பந்தம்.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு அங்கமாக, பாகிஸ்தான் வழியாக சீனா – பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரம் (CPEC) என்ற பெரும் பொருளாதாரத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
இவையெல்லாம் தான் இம்ரான்கானின் மீதான தற்போதைய அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு காரணமாக உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் ஷபாஸ் ஷெரிப் தலைமையிலான கும்பலும் அமெரிக்க அடிவருடியாக இருக்கும் வரை தான் ஆட்சியில் நீடிக்க முடியும்.
உலகை தனது அரசியல் பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும், தன்னை மீறி இந்த உலகத்தில் எதுவும் நடந்து விடக்கூடாது என்ற ஆதிக்கவெறி, அப்படி மீறி யார் நடந்து கொண்டாலும் அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும்; மீறினால் அழித்து விட வேண்டும் என்று துடிக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். சதாம் உசேன் தொடங்கி இம்ரான்கான் வரை இதுதான் நிதர்சனமான உண்மை.
தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படிப்பட்ட நிலைமைகளை உருவாக்கியது என்பது உலகறிந்ததே.
தனது அடிவருடிகளை ஆட்சியில் அமர்த்தி அதன் மூலம் தனது சுரண்டலையும், ஆதிக்கத்தையும் பல்வேறு வழிகளில் நிறுவிக் கொள்ளத் துடிக்கிறது அமெரிக்கா.
இந்தியாவின் மோடி தலைமையிலான காவி – கார்ப்பரேட் கும்பல் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அடிமை கும்பலாகவே உள்ளது.
உலகையே அச்சுறுத்தி தனது காலடியில் வைத்திருக்க வேண்டும் என்று கொக்கரிக்கின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்தாமல் உலக மக்களுக்கு விடிவில்லை என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.
சிவக்குமார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube