கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று இரவில், எண்ணூரின் பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள முருகப்பா கோரமண்டல் இண்டர்நேஷனல் உரத்தொழிற்சாலைக்கு நச்சுத்தன்மை கொண்ட அம்மோனியா வாயுவை கொண்டுசெல்வதற்காக கடலுக்கு அடியில் 2.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து அம்மோனியா வாயு கசிந்தது.
இதனால் பெரியகுப்பம், சின்னக்குப்பம், பர்மா நகர், எர்ணாவூர் குப்பம் போன்ற கிராமங்களில் வாழும் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகினர். கண்ணெரிச்சல், மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் போன்றவை காரணமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கடலில் வாயுக்கசிவை பார்த்தவர்கள் உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
அம்மோனியா வாயுக் கசிவினால் அச்சத்திற்கு உள்ளான மக்கள், உரத் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று போராடியதன் விளைவாக ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 40 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இந்தச் சூழலில் தான், அம்மோனியா வாயு கசிவு குறித்து ஆராய தமிழ்நாடு அரசினால் அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட தொழில்நுட்பக் குழு தனது அறிக்கையை பிப்ரவரி 6 அன்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் சமர்பித்தது.
அந்த அறிக்கையில், 15 நிமிடத்தில் 67.63 டன் அம்மோனியா வாயு கசிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ. 5.92 கோடி சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உடனடியாக செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிபந்தனைகளை தொழிற்சாலை செயல்படுத்தாததால் தொழிற்சாலையின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
படிக்க: அச்சத்தில் எண்ணூர் மக்கள் – அமோனியா கசிவால் மூச்சு திணறல் | தோழர் மருது
மேலும், ”சேதமடைந்த குழாய்க்கு பதில் புதிய குழாய்களை அதிநவீன கண்காணிப்பு, தானியங்கி கட்டுப்பாடு மற்றும் விபத்து தடுப்பு சாதனங்களுடன் அமைக்கப்பட வேண்டும். கடலில் இருந்து சாலை வழியாக தொழிற்சாலைக்கு அமோனியா வாயு கொண்டு செல்லும் இடத்தில் குழாய்களை பொது மக்கள் யாரும் அணுகா வண்ணம் உரிய பாதுகாப்பு அமைப்புகளுடன் இருப்பதை தொழிற்சாலை உறுதி செய்ய வேண்டும்” என்பன உள்ளிட்ட 18 பரிந்துரைகளை இக்குழு தொழிற்சாலைக்கு வழங்கியுள்ளது.
நாற்பது நாட்களுக்கும் மேலாக நடந்துவந்த மக்களின் போராட்டத்தை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை; வாயுக்கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுநாள்வரை இழப்பீடும் வழங்கவில்லை. ”ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்ற எண்ணூர் மக்களின் கோரிக்கை நிபுணர் குழுவின் அறிக்கையில் இடம்பெறவில்லை. திமுக அரசும் ஆலையை மூடுவது குறித்து வாயைத்திறக்கவில்லை. இதனால் கோபமடைந்த எண்ணூர் பகுதியில் உள்ள 33 கிராம மக்கள் பிப்ரவரி 6-ஆம் தேதி, சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“எண்ணூர் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கோரமண்டலே வெளியேறு” போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட பேனர்களுடனும் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி முழக்கங்களையிட்டும் 33 கிராமங்களிலும் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். காலை ஏழு மணிக்கே தொடங்கிய சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் மதியம் இரண்டு மணி வரை நீடித்தது.
குழாய்களை மாற்றுவதும் சென்சார்களை நிறுவுவதும் தங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஆலை வெளியேற்றப்பட வேண்டும் அல்லது நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்றும் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்தப் பேரழிவிலும் மக்கள் பக்கம் நிற்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொழிற்சாலைக்கு ஆதரவாக இருப்பது வேதனையளிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
மக்கள் தொடர்ந்து போராடி வந்தாலும் தி.மு.க. அரசு முருகப்பா-கோரமண்டல் ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறது. நிபுணர் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டதும் ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற அடிப்படையில் இருந்துதான்.
படிக்க: எண்ணெய் கழிவு: நிர்கதியாக்கப்பட்ட எண்ணூர் மக்கள்
இதற்கு முன்னர், ஜனவரி மாதத்தில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட வெள்ளத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பக்கிங்ஹாம் கால்வாயில் அபாயகரமான எண்ணெய் கழிவுகளை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) என்ற மத்திய அரசு ஆலை திருட்டுத்தனமாக திறந்துவிட்ட விவகாரத்திலும் திமுக அரசு, சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு சாதகமாகவே செயல்பட்டது.
தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் பல நாசகர ஆலைகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. இதனால் எண்ணூர் பகுதியே மக்கள் வாழத்தகுதியற்ற பகுதியாக மாறிவருகிறது. தங்கள் உயிர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலில் அச்ச உணர்வோடு எண்ணூர் பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, முருகப்பா-கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நாற்பது நாட்களுக்கும் மேலாக போராடி வரும் எண்ணூர் பகுதி மக்களோடு களத்தில் தோளோடு தோள் நின்று போராட வேண்டியது தமிழ்நாட்டு மக்களின் கடமையாகும். மேலும் அப்போராட்டத்தை எண்ணூர் பகுதியில் உள்ள அனைத்து நாசகர தொழிற்சாலைகளை வெளியேற்றும் வகையில் மக்கள்திரள் போராட்டங்களாக வளர்த்தெடுக்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயகச் சக்திகளின் கடமையாகும்.
கார்த்திக்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube