உத்தராகண்ட்: முஸ்லீம்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்

"போலீசு இரவிலும் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. நாங்கள் வீட்டில் அச்சத்துடன் இருக்கிறோம். இது நிறுத்தப்பட வேண்டும்" என்று மக்கள் தங்கள் பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

த்தராகண்ட் மாநிலமானது சமீப காலத்தில் செய்திகளில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியது உத்தராகண்ட் மாநில பிஜேபி அரசு. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அம்மாநிலத்தின் ஹல்த்வானி நகரிலுள்ள பன்பூல்புராவில் பிப்ரவரி 8-ஆம் தேதியன்று முஸ்லீம் மக்கள் வாழும் பகுதியில் கலவரம் வெடித்து ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஹல்த்வானி நகரின் கபூர் பஸ்தி, தோலக் பஸ்தி, இந்திரா நகர், பன்பூல்புரா ஆகிய பகுதிகளில் 4000 இஸ்லாமிய குடும்பங்கள் ஏறத்தாழ 100 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், ”இம்மக்கள் வசிக்கும் இடம் ரயில்வே துறைக்கு சொந்தமானது. ஒரு வாரத்திற்குள் அனைவரும் இந்த இடத்தை விட்டு காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் வலுக்கட்டாயமாக காலி செய்யப்படுவீர்கள்” என்று எச்சரித்தது. இப்பகுதி மக்கள் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

ஆனால், பிப்ரவரி 8 அன்று திடீரென பன்பூல்புராவில் உள்ள மதராசா மற்றும் மசூதியை ’பொது இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக’க் கூறி நகராட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்க வந்தனர்.

”போலீசு புனித தளங்களை இடிப்பதற்கான உத்தரவுகளை எங்களிடம் காண்பிக்கவும் இல்லை; நாங்கள் கூறுவதை கேட்பதற்கு தயாராகவும் இல்லை” என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களது புனித தளங்கள் தொடர்ந்து இடிக்கப்படுவதைக் கண்டித்து பெண்கள் உட்பட அனைவரும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். மக்களின் எதிர்ப்பையும் மீறி மசூதியையும் மதராசாவையும் இடித்ததால் மக்களுக்கும் போலீசுக்கும் மோதலாகி கலவரமாக மாறியது.

மக்கள் வேறு வழியில்லாமல் கற்களை கொண்டு போலீசு மீதும் அதிகாரிகள் மீதும் எரிந்துள்ளனர். இதில் சில போலீசுக்காரர்கள் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கலவரம் வளர்ந்ததையடுத்து நைனிடால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் கலவரக்காரர்களை கண்டால் சுடுவதற்கும் ஊரடங்கு பிறப்பித்தும் உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு பிறகு 5 பேரை சுட்டுக்கொன்று இருக்கிறது போலீசு.


படிக்க: இந்து ராஷ்டிரமாக உருவெடுத்து வருகிறது உத்தரகாண்ட்!


“போலீசு இரவிலும் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. நாங்கள் வீட்டில் அச்சத்துடன் இருக்கிறோம். இது நிறுத்தப்பட வேண்டும்” என்று மக்கள் தங்கள் பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதுவரை 50 பேரை போலீசு கைது செய்துள்ளது; 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

”இது திட்டமிடப்பட்ட தாக்குதல், மக்கள் கற்களை ஏற்கெனவே தங்களிடம் வைத்திருந்தனர். மேலும், இந்த இடிப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் நடந்திருக்கிறது” என்று முதலமைச்சர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைத்து அதிகார வர்க்கமும் இந்த தாக்குதலுக்கு நியாயம் கற்பிக்கிறது.

நாமும் இது திட்டமிடப்பட்ட தாக்குதல் தான் என்று கூறுகிறோம்! முஸ்லீம் மக்கள் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமென்றால் முஸ்லீம் மக்கள் மீதான திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம். ஏனெனில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே மதராசா இடிக்கப்பட்டுள்ளது.

மதராசாவும் மசூதியும் பன்பூல்புராவில் 2002 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடம் நசூல் நிலத்தில் (பொது நிலம்) கட்டப்பட்டுள்ளதாகவும் இதனை காலி செய்ய வேண்டும் என்றும் கார்ப்பரேஷன் ஜனவரி 30 அன்று நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், இந்த நிலம் 1937-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்டதாகவும் 1994-இல் தனது குடும்பத்திற்கு விற்கப்பட்டதாகவும் உத்தராகண்ட் உயர்நீதிமன்றத்தில் சாஃபியா மாலிக் வழக்கு தொடர்ந்துள்ளார். சாஃபியா மாலிக்கின் தந்தை இக்குத்தகையை புதுப்பிப்பதற்காக 2007 ஆம் ஆண்டில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தார். ஆனால், அது இன்றுவரை விசாரிக்கப்படவில்லை.

மாலிக் தொடர்ந்த வழக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி விசாரித்த உத்தராகண்ட் உயர்நீதிமன்றம் பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு அவ்வழக்கை ஒத்திவைத்துள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தனது இந்து முனைவாக்கத்தை தீவிரப்படுத்த இதுபோன்ற கலவரங்களை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் அதிகார வர்க்கத்தின் துணை கொண்டு இன்னும் அதிக அளவில் அரங்கேற்றும் என்பது நிதர்சனம்.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க