வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் தெருமுனைக் கூட்டம் | காஞ்சிபுரம், இராணிப்பேட்டை

”ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி அதானி பாசிசம் ஒழிக!

சுற்றி வளைக்குது பாசிச படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு

2024 நாடாளுமன்றத்  தேர்தல்
வேண்டாம் பிஜேபி, வேண்டும் ஜனநாயகம்”

என்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, ஆரணி கூட்ரோடு பகுதியில் மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. வடக்கு மண்டலம் (மாநில ஒருங்கிணைப்பு குழு) ஆகிய அமைப்புகளின் சார்பாக பிப்ரவரி 11 அன்று தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்துக்கு தலைமை ஏற்ற  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஆக்சில்ஸ் இந்தியா கிளைத் தலைவர்  தோழர் பழனிவேல் அவர்கள், பாசிச பி.ஜே.பி ஆட்சியில் பத்தாண்டு காலமாக வேலை வாய்ப்பு இல்லை, விலைவாசி ஏற்றம், கல்வியில் புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்து ஏழை மாணவர்களுக்கு கல்வியை எட்டா கனியாக்கியுள்ளது, தொழிலாளர் நலச் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து தொழிலாளர்களின் உரிமைகளை பறித்துள்ளது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று சொல்லி விவசாய சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து விவசாயிகளின் வயிற்றில் அடித்தது, ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பனை செய்துள்ளது. இப்படிப்பட்ட பாஜகவை நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடித்தால் மட்டும் போதாது, அரசு அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் தோற்கடித்து, அதை முழுதுமாக துடைத்து எறிய வேண்டும். அப்போதுதான் உழைக்கும் மக்களுக்கான உண்மையான ஜனநாயகம் கிடைக்கும் என்று கூறி தன்னுடைய தலைமை உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக பேசிய தோழர் P. வெங்கடேசன் (சி பி ஐ எம் நகரச் செயலாளர் செய்யாறு) அவர்கள் மோடியின் ஆட்சியில் இந்தியா பாதுகாப்பாக இருப்பதாக பாஜக காரர்கள் கூறுகிறார்கள் ஆனால்,இந்தியாவில் பாதுகாப்பு என்பது துளியும் இல்லாமல் கேலிக்கூத்தாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தமிழ்நாடு, கேரளா போன்ற பி.ஜே.பி கால் பதிக்க முடியாத இடங்களில் ஆளுநர் என்ற பெயரில் பாசிஸ்டுகளை கொண்டு வந்து அமர்த்தி மாநில உரிமைகளை கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பா ஜ.க.வின் தமிழக தலைவர் அண்ணாமலை ஏன் மதுரை எய்ம்ஸ் குறித்து வாய் திறக்கவில்லை என்றும் பா.ஜ.க ஆண்ட 9 ஆண்டுகளில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்றும் பொது சிவில் சட்டம் கொண்டு வந்தது தவறானது என்றும் பேசினார்.

இணைப்பு 1

இணைப்பு 2

இணைப்பு 3

இணைப்பு 4

அடுத்ததாக பேசிய தோழர் ஜமால் (த.மு.மு.க மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் திருவண்ணாமலை மாவட்டம்) அவர்கள் பாபர் மசூதி இடிப்பு,  குஜராத் கலவரம் குறித்து பேசிய அவர் பாசிஸ்டுகள் தோற்கடிக்க படக்கூடியவர்கள் என்பதை ஹிட்லர் முசோலினியின் ஆட்சி அனுபவத்திலிருந்து எடுத்துக்காட்டி பேசினார். மேலும் பி.ஜே.பி வருகின்ற காலங்களில் ஆட்சியில் அமர்ந்தால் இதுபோன்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் கூட்டங்களையும் நடத்த முடியாது என்பதையும், கண்டிப்பாக பி.ஜே.பி.யை தமிழ்நாட்டை விட்டு துரத்தி அடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பேசினார்.

அடுத்தபடியாக பேசிய தோழர் குப்பன் (செயலாளர் செய்யார் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி) அவர்கள் புதிய கல்விக் கொள்கை மறைமுகமாக மனுதர்மத்தை கூறுகிறது. நீட் தேர்வு ஏழை உழைக்கும் மக்களின் டாக்டர் கனவை எட்டாக்கனியாக்குகிறது மேலும் வேளாண் சட்டம் குடியுரிமைச் சட்டம் இதெல்லாம் பாசிச பி.ஜே.பி.யின் பாசிச அடக்குமுறை சட்டங்கள் என்றும் பெரியார் பிறந்த மண்ணான தமிழகத்தில் பி.ஜே.பி.யை தோற்கடிப்போம் என்ற அடிப்படையில் தன்னுடைய பேச்சை நிறைவு செய்தார்.

அடுத்தபடியாக பேசிய அக்பர் (மாவட்டத் தலைவர் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்) அவர்கள் இந்த ஒன்பதரை  ஆண்டு காலமாக நாடு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது மோடி அரசால் மதச்சார்பின்மை என்பது சாகடிக்கப்பட்டிருக்கிறது. மோடி அரசு இஸ்லாமியர்களை குறி வைத்து தாக்குகிறது ஏனென்றால் நாங்கள் சனாதனத்திற்கு எதிரானவர்கள் என்பதால். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கொண்டுவரும் அடக்குமுறைக்கு நாங்கள் பயந்தவர்கள் கிடையாது காரணம் நாங்கள் உங்களைப் போல சாவர்க்கரின் வாரிசுகள் அல்ல திப்புசுல்தானின் வாரிசுகள். மேலும்அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடக் கூடிய மக்கள் அதிகாரம் தோழர்களின் பிரச்சாரத்தை தடை செய்த பாசிச பா.ஜ.க கும்பலின் அராஜகத்தை கண்டித்து பேசியும் தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.

அடுத்தபடியாக சிறப்புரையாற்றிய தோழர் எஸ். சுந்தர் (புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்) அவர்கள், பி.ஜே.பி ஆட்சியால் கடந்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான உழைக்கும் மக்கள் தங்களின் சொந்த அடிப்படை வாழ்வாதாரத்தைக் கூட இழந்து இருக்கிறார்கள். விவசாயம் மற்றும் தொழில்துறை அழிக்கப்பட்டு வருகிறது

ஜனநாயகம் கேள்விக்கிடமின்றி நசுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மசோதாக்கள் ஜனநாயகமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்த்து கேள்வி எழுப்புவோர்களை கைது, ரைடு, சிறை மூலம் மிரட்டுகிறது பாஜக.

மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி, நீட், கியூட், போன்றவற்றை அமல்படுத்தியுள்ளது. 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ள மோடி அரசு அதை மக்கள் நலத்திட்டங்களுக்கு சிறிதளவும் பயன்படுத்தாமல் ராமர் கோவில் கட்டுவது, பட்டேல் சிலை அமைத்தல், போன்றவற்றில் முதலீடு செய்து உழைக்கும் மக்களை கை கழுவி விட்டுள்ளது. பா.ஜ.க என்பது ஒரு அரசியல் கட்சியே கிடையாது. அது தன் இயல்பிலேயே ஒரு பாசிச கட்சி. ஹிட்லர், முசோலினியின் வழி வந்த ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட ஒரு பாசிச கட்சி. அது அதனுடைய சித்தாந்தத்தை பரப்பிக்கொண்டிருக்கிறது. இந்த சித்தாந்தத்தால் உழைக்கும் மக்கள் வாழ முடியாது. பாஜக-ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வேரோடு வேராக துடைத்து எறிய வேண்டும். ஆக நாம் என்ன செய்ய வேண்டும்? இதற்கு மாற்று என்ன? இந்தியா  கூட்டணிக்கு வாக்களித்தால் பாசிசத்தை வீழ்த்தி விட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். ஏன் இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா மற்றும் நிதிஷ்குமார் விலகுகிறார்கள்? இந்தியா கூட்டணியின் மாற்று பொருளாதார திட்டம் என்ன? ஜி.எஸ்.டி, நீட்டையும் இவர்களால் தடை செய்ய முடியுமா? இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் தங்கள் சொந்த கட்சிகளுக்கு இதற்கெல்லாம் பதில் அளிக்க வேண்டும்.

ஆக பி.ஜே.பி க்கு மாற்று இந்தியா கூட்டணி அல்ல, பி.ஜே.பி க்கு மாற்று  பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டங்கள் நடத்தி, அதனை மக்கள் எழுச்சியாக மாற்றுவதன் மூலமே இந்த பாசிச பி.ஜே.பி.யை வேரோடு துடைத்து எரிய முடியும். இதற்கு புரட்சிகர அமைப்புகள் ஜனநாயக சக்திகள் பாசிசத்துக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து  போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்து தன்னுடைய  உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக தோழர் ஏழுமலையான் (மக்கள் அதிகாரம்) அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.


தகவல்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, (மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம்
காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மாவட்டங்கள்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க