தேர்தல் நிதிப்பத்திர முறையானது வெளிப்படைத்தன்மையற்று இருப்பதால், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றுக் கூறி அம்முறையை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். மேலும், 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையிலான நன்கொடையாளர்கள் – நிதி வாங்கிய கட்சிகளின் விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கவும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது. இதன் பிறகு, தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் மற்ற கட்சிகளை விட பா.ஜ.க. அதிகமான நன்கொடை பெற்றிருப்பதும், மிரட்டிப் பணம் வசூலித்திருப்பதும் பேசுபொருளாகியுள்ளன. பா.ஜ.க. தனது இந்துராஷ்டிர நோக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டத்தை எவ்வாறு வடிவமைத்தது, செயல்படுத்தியது என்பதைப் பரிசீலிப்பதன் மூலமே அதன் முழுப் பரிமாணத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
தேர்தல் நிதிப்பத்திரங்களும் நன்கொடைகளும்:
தேர்தல் நிதிப்பத்திரங்கள் 2018-ஆம் ஆண்டு முதலே நடைமுறையில் இருந்து வந்த நிலையில், 2019 ஏப்ரல் முதல் தற்போது வரையிலான விவரங்களை வெளியிட்டால் போதுமானது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, தேர்தல் ஆணையத்தில் ஸ்டேட் வங்கி அளித்த விவரங்களில் இருந்து, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் திரட்டிய தொகை ரூ.12,769.1 கோடி என்று மதிப்பிடப்படுகிறது. ஆனால், பிசினஸ் டுடே இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் “மார்ச் 2018 முதல் ஜனவரி 2024 வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனை மூலம் கிடைத்த மொத்த நிதி ரூ.16,518.11 கோடி என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தெரிவித்துள்ளது” என்று கூறியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் கூறும் விவரங்களின் படி 2018 முதல் 2024 வரையிலான காலத்தில், தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை திரட்டுவதில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த கட்சிகள்: பா.ஜ.க. – ரூ.8,451.41 கோடிகள், காங்கிரஸ் – ரூ.1,950.90 கோடிகள், திரிணாமுல் காங்கிரஸ் – ரூ.1,707.81 கோடிகள், பாரதீய ராஷ்ட்ரிய சமிதி – ரூ.1,407.30 கோடிகள், பிஜூ ஜனதா தளம் – ரூ.1,010.5 கோடிகள்.
2019 ஏப்ரல் முதல் கணக்கீடு செய்தாலும் 47.7% நிதியை அதாவது 6,060 கோடி ரூபாயை பா.ஜ.க. வசூலித்திருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இதுவரை அளிக்கப்பட்ட நன்கொடைகளில் சரிபாதிக்கும் அதிகமாக பா.ஜ.க. மட்டும் பெற்றுள்ளது. மற்ற கட்சிகளை விட பா.ஜ.க.வுக்கு அதிக நன்கொடை கொடுக்கப்பட்டு வருவது குறித்த புள்ளி விவரங்கள் எல்லாம் ஏற்கெனவே ஓரளவு அறியப்பட்டவை தான். எனினும், தற்போது ஸ்டேட் வங்கி வெளியிட்ட விவரங்களில் இருந்து அரசியல் கட்சிகளிடையே காரசாரமான விவாதங்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கட்சிகளின் இந்த விவாதங்கள், விமர்சனங்களில் தேர்தல் நிதிப்பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடைகள், கட்சிகளின் ஒட்டுமொத்த வருமானத்தில் ஒரு பகுதி தான் என்பதைப் பற்றி எவரும் பேசுவதில்லை. காரணம், தேர்தல் நிதிப்பத்திரங்கள் அல்லாத வகையிலும் ஏறக்குறைய இதே அளவுக்கான தொகையை அரசியல் கட்சிகள் திரட்டி வருகின்றன. இதுவும் கூட தேர்தல் ஆணையத்திடம் அவை காட்டும் கணக்கில் உள்ளவைதான். மற்றபடி, கணக்கில் வராதவை எத்தனை ஆயிரம் கோடிகள் என்பதை அக்கட்சிகள் மட்டுமே அறியும். ஏனென்றால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் ரூ.55,000 – ரூ.60,000 கோடிகள் செலவிடப்பட்டதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மதிப்பிட்டுள்ளது. இந்தக் கணக்குகளை வைத்துப் பார்க்கும் போது, தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் இதுவரை அனைத்து தேசிய, மாநிலக் கட்சிகளும் திரட்டிய தொகையான ரூ.16,518 கோடிகள் என்பது மிகச்சிறியதே.
பொதுவாகவே, எந்தவொரு நிறுவனத்திற்கு அரசாங்க ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டாலும் குறைந்தது 40 சதவிகித கமிஷனைக் கட்சிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே எழுதப்படாத விதியாக இருக்கிறது. தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி 40 சதவிகித கமிஷன் ஆட்சி, கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி 40 சதவிகித கமிஷன் ஆட்சி என்று அப்பட்டமாக அம்பலமாகியதெல்லாம் நாமறிந்ததே. எனவே, பல இலட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களைக் கொடுத்துவிட்டு சில நூறு, ஆயிரம் கோடி ரூபாய்களுடன் பா.ஜ.க.வும் பிற கட்சிகளும் திருப்தி அடைந்து விடும் என நம்புவது முட்டாள்தனம். பா.ஜ.க. உருவாக்கிய தேர்தல் பத்திரங்களின் இலக்கு வெறும் நன்கொடை மட்டுமல்ல என்பதில் இருந்தே அவற்றை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.
படிக்க: தேர்தல் நிதிப் பத்திரங்கள்: பா.ஜ.க.வின் பாசிச வழிகளில் ஒன்று!
தேர்தல் நிதிப்பத்திரங்களுக்கு முன்பு
தேர்தல் நிதிப்பத்திரம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பும் அரசியல் கட்சிகள் கார்ப்பரேட்டுகளிடமிருந்து நன்கொடை வாங்கிக் கொண்டிருந்தன. ஆனால், தனிநபரிடமிருந்து ரூ.20,000-க்கும் மேல் நன்கொடை பெற்றால் கணக்குக் காட்ட வேண்டும்; வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி பெற முடியாது; நிறுவனங்கள் தமது லாபத்தில் 7.5 சதவிகிதம் மட்டுமே கட்சிகளுக்கு நன்கொடையாகத் தர முடியும் போன்ற பெயரளவிற்கான கட்டுப்பாடுகள் இருந்தன. அவற்றையெல்லாம் மீறி கார்ப்பரேட்டுகளிடம் அரசியல் கட்சிகள் பணம் வாங்குவதும், அதை எதிர்த்து சமூக செயல்பாட்டாளர்களும் குடிமை அமைப்புகளும் வழக்கு தொடுப்பதும் நடந்து வந்தன.
கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்து காங்கிரசும், பா.ஜ.க.வும் வேதாந்தா நிறுவனத்திடமிருந்து பல கோடிகளை நன்கொடையாகப் பெற்றன. அப்போது வேதாந்தா வெளிநாட்டு நிறுவனமாக வரையறுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், அந்நன்கொடைகள் வெளிநாட்டு நிதிதான் என்றும், அவ்வாறு நிதிபெற்ற கட்சிகள் மீது ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2014 மார்ச் மாதத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பைக் காங்கிரசும், பா.ஜ.க-வும் கிடப்பில் போட்டன.
1976 ஆகஸ்ட் 5-க்குப் பிறகு வாங்கிய எந்த நன்கொடையும் சட்டவிரோதமானது அல்ல என்று 2018-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் விவாதங்களின்றி, வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்கமைப்புச் சட்டத்தை முன் தேதியிட்டு திருத்தியது பா.ஜ.க.. இத்திருத்தத்தின் மூலம் காங்கிரசும், பா.ஜ.க.வும் வேதாந்தாவிடம் பெற்ற நன்கொடைகள் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. இவ்வாறு, சட்டத்திருத்தத்தின் மூலம் ஊழலை சட்டப்பூர்வமாக்க வாய்ப்பிருக்கும் போது புதிதாக தேர்தல் நிதிப்பத்திரம் எதற்கு? என்ற கேள்வி எழாமல் இல்லை.
தேர்தல் நிதிப்பத்திரம் என்ற ஆயுதம்
காங்கிரசால் தனியார்மய-தாராளமய-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதிலிருந்தே, ‘குஜராத் மாடல்’ ‘வளர்ச்சி நாயகன்’ என மோடியின் பிம்பம் ஊதிப் பெருக்கப்பட்டு, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. இக்காலகட்டமானது அரசியல்-பொருளாதார ரீதியாக ஒரு மாறுதலைக் குறிக்கக் கூடியதாகும்.
மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கு ஏற்ப அரசுக் கட்டுமானங்களில் மாற்றம் செய்வது; பெயரளவிலான ஜனநாயகம் – நாடாளுமன்ற முறை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவது; அம்பானி-அதானி கும்பலின் ஏகபோகத்திற்கான இந்துராஷ்டிரம் என்ற பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதே மோடி அரசின் நோக்கமாகும். மறுகாலனியாக்கத்தின் அரசு வடிவமாக ஆணையங்களும் நிதி ஆயோக் போன்றவையும் கொண்டு வரப்பட்டன. துறைசார் அமைச்சர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு, அனைத்து முடிவுகளையும் எடுக்கும் இடமாக பிரதமர் அலுவலகம் மாற்றப்பட்டது. அரசுச் செயலர்கள், ஆணையங்கள், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அரசுக் கட்டுமானங்களிலும் அமலாக்கத்துறை, ஒன்றிய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றில் தேர்வுகள் மூலமாகவும், நேரடி நியமனங்கள் மூலமாகவும் ஆகப்பெரும்பான்மையாக ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் – ஆதரவு சக்திகள் நிரப்பப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சிப்போக்கின் ஓர் அங்கமாகவே தேர்தல் நிதிப்பத்திரமும் கொண்டு வரப்பட்டது. அதுவும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால், குறுக்குவழியில், விவாதங்களைத் தடுக்கும் விதமாக பணமசோதாவாக 2017-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தேர்தல் நிதிப்பத்திரம் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வருமான வரிச் சட்டம் மற்றும் நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 2018-ஆம் ஆண்டு தேர்தல் நிதிப்பத்திரம் நடைமுறைக்கு வந்தது. தொடக்கத்தில் தேர்தல் ஆணையமும், இந்திய ரிசர்வ் வங்கியும் இப்பத்திரத் திட்டத்தை எதிர்த்ததும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நிதிப்பத்திரத்தின் மூலம், 1 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே நன்கொடை பெற முடியும். இந்தக் கட்டுப்பாடு சிறிய கட்சிகளை படிப்படியாக ஒழித்துக்கட்டும் நோக்கம் கொண்டது. யார் வேண்டுமானாலும் உச்சவரம்பின்றி நிதி கொடுக்கலாம், அதை பொதுவெளியில் சொல்லத் தேவையில்லை; அரசியல் கட்சிகளும் இவற்றை தேர்தல் ஆணையத்திற்கு கணக்குக் காட்டத் தேவையில்லை என்பதன் மூலம் கட்டற்ற வகையில் கார்ப்பரேட்டுகள் மூலம் பணம் பெறும் ஊழலுக்கான சட்டப்பூர்வ ஏற்பாட்டை செய்தது பா.ஜ.க.. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டு, கருப்புபணப் புழக்கம் ஒழிந்து, நாட்டின் அரசியல் நிதி அமைப்பு முறை தூய்மைப்படும் எனக் கூறியது, மோடி அரசு. ஆனால், தனக்கு சாதகமான கார்ப்பரேட்டுகளிடம் பணம் வாங்குவதை மறைப்பதற்கு மட்டுமல்ல, எதிர்த்தரப்பிலுள்ள முதலாளிகளையும் மிரட்டி வசூல்வேட்டை நடத்துவதற்கான ஆயுதம்தான் தேர்தல் நிதிப்பத்திரம் என்பதை மோடி கும்பல் நடைமுறையில் நிரூபித்திருக்கிறது.
படிக்க: தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி!
பாசிசக் கும்பலின் “வசூல் ஏஜெண்டுகள்”
அமலாக்கத்துறை, ஒன்றிய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளைத் தமது ஏவல் படையாகப் பயன்படுத்தி வருகிறது பாசிசக் கும்பல். கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை தனது அரசியல் ஆதாயத்திற்காக ஏவியிருந்தாலும், தற்போது தன்மைரீதியான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
தேர்தல் நிதிப்பத்திரங்கள் குறித்த விவரங்கள் வெளியான பிறகு, இந்த ‘தன்னிச்சையான’ விசாரணை அமைப்புகள் மோடி அரசின் வசூல் ஏஜெண்டுகளாக மாறியிருப்பது அம்பலமாகியிருக்கிறது. பொருளாதார ரீதியாக, பா.ஜ.க.வுக்கு நிதி கொடுக்காத கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது தனது அடியாட்களான இவ்விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டு, பணம் பறித்திருக்கிறது மோடி அரசு.
கார்ப்பரேட் நிறுவனங்களில் ரெய்டுகள் நடத்தியிருப்பதும், அதன்பிறகு அந்நிறுவனங்கள் தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாங்கியிருப்பதும், அவற்றில் பெரும்பாலானவை பா.ஜ.க.விற்கு அளிக்கப்பட்டவை என்பதும் பல்வேறு முதலாளித்துவ ஊடகங்களில் புள்ளிவிவரங்களுடன் ஆதாரப்பூர்வமாக அம்பலாகியிருக்கின்றன. அதன்படி, ஏப்ரல் 2019 முதல் ஜனவரி 2024 வரை வெளியிடப்பட்டுள்ள இப்பத்திர விவரத்தில் முதலிடத்தில் உள்ள லாட்டரி மார்ட்டினின் ஃப்யூச்சர் கேமிங் & ஹோட்டல் சர்வீசஸ், மேகா பொறியியல் & உள்கட்டுமான நிறுவனம், ஹெட்டிரோ பார்மா குழுமம் உள்ளிட்ட 41 நிறுவனங்களில் விசாரணை அமைப்புகள் மூலம் ‘ரெய்டு’கள் நடத்தி ரூ.2,471 கோடிகளை பா.ஜ.க.வுக்காக மோடி அரசு வசூலித்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
தற்போது கூட, வருமான வரித்துறை மூலம் பல ஆண்டுகளுக்கு முந்தைய வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்திருப்பதாக கூறி பல நூறுகோடி ரூபாய்களை கட்டச் சொல்லி, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி தொடர்ச்சியாக நெருக்கடி அளித்து வருகிறது. ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி முதல்வர்களைக் கைது செய்வதற்கு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி வருகிறது. இத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், இந்தத் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் எதிர்க்கட்சிகளும் ஆதாயம் அடைந்தனர், ஆனால் அவை தற்காலிகமானவை.
படிக்க: தேர்தல் நிதிப்பத்திரம் – கருப்புப் பணத்தை சுருட்ட பா.ஜ.க-வின் புதிய அஸ்திரம் !
எதிர்க்கட்சிகள்: ஆதாயங்களும் விமர்சனங்களும்
தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க. சரிபாதி நன்கொடைகளைப் பெற்றது என்றால், மீதமுள்ள சுமார் ரூ.8,000 கோடிகளை பிற கட்சிகள் அனைத்தும் சேர்ந்து வாங்கியிருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் பலமுறை ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையின் சோதனைகளுக்கு ஆளான லாட்டரி மார்ட்டின் குழுமம், பா.ஜ.க.வுக்கு ரூ.100 கோடி மட்டுமே நன்கொடை கொடுத்துள்ளது. லாட்டரிக்கு சட்டப்பூர்வ அனுமதியுள்ள மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ.500 கோடிக்கும் அதிகமாக நன்கொடை கொடுத்துள்ளது. சிக்கிம் மாநிலத்திலும் ஆளுங்கட்சிக்கு ரூ.11 கோடி கொடுத்துள்ளது. ஆனால், லாட்டரிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியான தி.மு.க-வுக்கு ரூ.500 கோடிக்கும் அதிகமாக நன்கொடை கொடுத்திருக்கிறது. இதேபோல லாட்டரிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு ரூ.149 கோடிகளைக் கொடுத்திருக்கிறது. வெளிப்படையாக எந்த ஆதாயமும் இல்லாமல் இத்தனை கோடி ரூபாய்களை ஏன் கொடுக்க வேண்டும்? தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக லாட்டரி விநியோகம் நடந்து வருகிறது என்றால், ஆந்திராவிலோ, நிதி நெருக்கடி காரணமாக லாட்டரி மற்றும் சூதாட்டத்திற்கு அனுமதி கொடுப்பது குறித்து 2021-2022 காலகட்டத்தில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது என்பதை இணைப்புப் புள்ளிகளாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
2018-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலைக்காக துப்பாக்கிச்சூடு நடந்து, வேதாந்தா நிறுவனம் அம்பலப்பட்டு நிற்கும் நிலையிலும் கூட, அதனிடமிருந்து பா.ஜ.க.வை விட அதிக தேர்தல் நன்கொடையை காங்கிரஸ் பெற்றிருக்கிறது. இது மட்டுமின்றி ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் எதிர்க்கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்துள்ள விவரங்கள் அம்பலமாகியுள்ளன. கார்ப்பரேட் – அரசியல் கட்சி இடையிலான கள்ளக்கூட்டின் வடிவமாக, தேர்தல் நிதிப்பத்திரங்களை பா.ஜ.க. தனக்கு சாதகமாக உருவாக்கினாலும் எதிர்க்கட்சிகளும் குறிப்பிட்ட அளவுக்குப் பயனடைந்துள்ளன.
ஆனால், “தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் (ஹஃப்தா வசூலி) கும்பலை நடத்தியவர் நரேந்திர மோடி” என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதில் சொன்ன அமித் ஷா, “காந்தியும் ரூ.1,600 கோடி பெற்றார். அந்த ‘ஹஃப்தா வசூலி’ எங்கிருந்து கிடைத்தது என்பதை அவர் விளக்க வேண்டும். இது வெளிப்படையான நன்கொடை என்று நாங்கள் கூறுகிறோம், ஆனால் அவர் அதை வசூலி என்று சொன்னால், அவர் விவரங்களை அளிக்க வேண்டும்”என்று சி.என்.என். நியூஸ் 18 நடத்திய உச்சிமாநாட்டில் பேசினார்.
பா.ஜ.க. விசாரணை அமைப்புகளை ஏவி மிரட்டிப் பணம் பறிக்கிறது என்று விமர்சித்தார் மு.க.ஸ்டாலின். பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையோ, ஒரு மாநிலக் கட்சி எதற்கு தேர்தல் நிதிப்பத்திரம் மூலம் ரூ.656 கோடி நிதி பெற வேண்டும் என்று கேள்வியெழுப்பினார். பாசிசக் கும்பலின் இக்கேள்விகளுக்கு எதிர்க்கட்சிகளிடம் பதில் இல்லை.
எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கார்ப்பரேட்டுகளிடம் நிதி வாங்குவது பிரச்சினை இல்லை. மாறாக தங்களது எஜமானர்களான ஆளும் வர்க்கத்தின் மற்றொரு பிரிவு கார்ப்பரேட்டுகளை விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டி பா.ஜ.க. பணம் பறித்திருப்பதே பிரச்சினை. இவ்வாறு விசாரணை அமைப்புகளை ஏவி பா.ஜ.க. பணம் பறிப்பதால், தங்களுடைய உரிமை பறிக்கப்படுவதையே ஜனநாயகம் பறிக்கப்படுவதாகக் கூப்பாடு போடுகின்றன எதிர்க்கட்சிகள். எனவேதான் “தேர்தல் நிதிப்பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் சரியாக கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளிப்படையான தேர்தல் நடைமுறையை உறுதி செய்யும். இந்தத் தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகத்தையும், சமநிலையையும் மீட்டெடுத்துள்ளது. இந்த தீர்ப்பு தேர்தல் அமைப்பின் மீதான சாமானியர்களின் நம்பிக்கையையும் உறுதி செய்துள்ளது” என்று கூறியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
மற்றபடி, கார்ப்பரேட்டுகள் நாட்டைக் கொள்ளையிடுவதும், மக்கள் வாழ்வைச் சூறையாடுவதும், வரி ஏய்ப்பு செய்வதும், இவற்றுக்காக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை என்ற பெயரில் ஊழல்படுத்துவதும் இவர்களுக்குப் பிரச்சினை இல்லை. பா.ஜ.க.வுக்கு மட்டும் ஆதாயம் தருவதாக இல்லாமல் அனைவரும் இவ்வாறு ஊழல் செய்வதற்குப் பொருத்தமான கட்டமைப்பு வேண்டும் என்பது தான் இவர்களது கோரிக்கை.
படிக்க: காலாவதியான தேர்தல் பத்திரங்கள் : விதிகளைத் தளர்த்திய நிதியமைச்சகம் !
தேர்தல் நிதிப்பத்திரம்: நாட்டிற்கும், மக்களுக்கும் எதிரானது!
தேர்தல் நிதிப்பத்திரத்தின் மூலம் கார்ப்பரேட்டுகளிடமிருந்து கட்சிகள் பெற்ற நிதி விவரப் பட்டியல் வெளியான அதேநேரத்தில், இதற்கு கைமாறாக அரசுத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களையும், சாதகமான சூழலியல் சட்டத் திருத்தங்களையும் கார்ப்பரேட்டுகள் சாதித்துக் கொண்டதும் அம்பலமாகியுள்ளது. ஆனால் இவையெல்லாம் விவாதப் பொருளாகவில்லை. “பா.ஜ.க.விற்கு நிதி வழங்கிய 33 நிறுவனங்கள், மொத்தமாக 172 முக்கிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களையும், திட்டத்திற்கான அனுமதியையும் பெற்றிருக்கின்றன. இவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பீடு ரூ.3.7 லட்சம் கோடியாகும். ஆனால், கார்ப்பரேட்டுகள் கொடுத்த நிதி வெறும் ரூ.1,751 கோடி” என்கிறார் பிரசாந்த் பூஷன்.
இப்பத்திரத்தின் மூலம் 35 மருந்து நிறுவனங்கள் பல்வேறு கட்சிகளுக்கு சுமார் ரு.1,000 கோடி நிதியளித்திருக்கின்றன. இவற்றில், ஹெட்டிரோ (கொரோனா மருந்து ரெம்டெசிவிர்), டோரண்ட் (டெப்லாட்-150, லோசார்-எச், லோபாமைடு), சைடஸ் ஹெல்த்கேர், க்ளென்மார்க், சிப்லா (ஆர்.சி. இருமல் மருந்து, சிப்ரெமி), ஐ.பி.சி.ஏ. லெபாரர்ட்டிஸ் (லாரியாகோ) உள்ளிட்ட 7 நிறுவனங்களின் மருந்துகள் தரமற்றவை என்று மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைச்சகத்தால் கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்த மருந்துகளெல்லாம், வயிற்றுப்போக்கு, இதய நோய், இரத்த அழுத்தம், பாக்டீரியா தொற்று, சளி, இருமல் போன்றவற்றிற்காக மக்கள் சாதாரணமாகப் பயன்படுத்துபவையே. இந்நிறுவனங்கள் தங்களின் லாபவெறிக்காக தரமற்ற மருந்துகளைத் தயாரித்து, இந்தியா மற்றும் உலக நாடுகளின் அப்பாவி மக்களை படுகொலை செய்கின்றன. பிற நாடுகளில் இந்திய இருமல் மருந்துகள் மற்றும் கண் களிம்புகளால் மரணங்களும், நோய்த் தொற்றுகளும் ஏற்பட்டதும், அமெரிக்க அரசும் இந்திய மருந்துகள் தரமற்றவை என்று குற்றஞ்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், பா.ஜ.க.விற்கும், ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கும் நிதிப்பத்திரங்கள் வழங்கியதில் சுரங்க நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக, பகாசுர வேதாந்தா நிறுவனத்தின் கொள்ளை லாபத்திற்காக, கொரோனா ஊரடங்கு காலத்திலும், அதன் பிறகும் சுரங்கங்களின் உற்பத்தியை 50 சதவிகிதம் கூடுதலாக அதிகரித்துக் கொள்ள அனுமதித்திருக்கிறது மோடி அரசு. ராஜஸ்தானில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு மக்களின் கருத்துகள் தேவையில்லை என சுற்றுச்சூழல் விதி மாற்றப்பட்டிருக்கிறது. ரித்விக் தத்தா போன்ற சூழலியல் செயல்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு சி.பி.ஜ. பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சேவைக்காக பா.ஜ.க.விற்கு, கடந்த 2016 முதல் 2020 வரை இந்திய மதிப்பில் சுமார் ரூ.40 கோடி கொடுத்திருக்கிறது வேதாந்தா நிறுவனம்.
எனவே, இந்நிதிப்பத்திரத்தை ஒரு ஊழல் என்று மட்டும் சொல்லமுடியாது. தனது அதிகாரத்தைக் கொண்டு, இந்திய நாட்டின் இயற்கை- மனித வளங்களைக் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கேற்ப அரசு இயந்திரத்தை மறுகட்டமைப்பு செய்திருக்கிறது பாசிசமோடி அரசு. தேர்தல் நிதிப்பத்திரமானது, கார்ப்பரேட்டுகள்-அரசியல் கட்சிகள்-அரசு இயந்திரம் ஆகியவற்றின் கள்ளக்கூட்டிற்கு ஏற்படுத்தப்பட்ட சட்டப்பூர்வ ஏற்பாடேயாகும். குறிப்பாக, பா.ஜ.க.வின் இந்துராஷ்டிர நோக்கத்திற்கான பாசிசக் கருவியாகும். அந்த வகையில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கும், மக்களுக்கும் எதிரானவையாகும். இதுகுறித்து உச்சநீதிமன்றத்திற்குக் கவலையில்லை, தேர்தல் நிதிப்பத்திரத்தில் வெளிப்படைத் தன்மையில்லாததுதான் பிரச்சினையாக இருக்கிறது. எனவேதான் வெளிப்படைத்தன்மையில்லாத இந்நிதிப்பத்திர முறையை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். ஆனால், ஃபிக்கி, சி.ஐ.ஐ, அசோசெம் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளது சங்கங்களோ, அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை இருப்பது தங்களுக்கு ஆபத்தானது என்று கூக்குரலிடுகின்றனர்.
எனவே, தேர்தல் நிதிப்பத்திரத்திற்கு பதிலாக வேறு புது வழிகள் கண்டுபிடிக்கப்படலாம். இப்பத்திரங்கள் இருக்கும் போதே பல வழிகளில், அரசியல் கட்சிகள் கார்ப்பரேட்டுகளிடமிருந்து நிதி பெறுகின்றன. அதற்காகவே பல சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆகவே, கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த அரசுக்கட்டமைப்பிற்குள்ளேயே அரசியல் கட்சிகள்-கார்ப்பரேட்டுகளின் கள்ளக்கூட்டை ஒழிக்க முடியாது. அதுவும் அம்பானி-அதானிகளின் ஏகபோகத்திற்காக அரசுக்கட்டுமானம் முழுவதும் பாசிசமயமாகி வரும் சூழலில், இந்த அரசுக் கட்டமைப்பானது, மக்களுக்கு மட்டுமல்ல எதிர்க்கட்சிகளுக்கும், அவர்களை ஆதரிக்கும் கார்ப்பரேட்டுகளின் ஒரு பிரிவுக்குமே எதிரானதாக மாறியிருக்கிறது. எனவே, எதிர்க்கட்சிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுப்பதும், மக்களுடன் இணைந்து மக்களுக்கு ஜனநாயக உரிமையை வழங்குகிற – அரசே தேர்தலை நடத்துகிற ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசிற்காக போராட வேண்டியதும் அவசியமாகும்.
அப்பு
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 | மின்னிதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube